நாம் அனைவரும் மற்றவர்களைக் கவர வேண்டும், நம்மைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் நம்மைப் பிடித்துப் போக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆனால், ஈர்ப்பு (Attractiveness) என்பது பிறப்பிலேயே முகத்துடன் வர வேண்டும், அது ஜீன்களில் இருக்க வேண்டும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், ஈர்ப்பு என்பது வெறும் முக அழகில் இல்லை; அது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில்தான் முழுமையாக உள்ளது.
முக அழகு ஒருவரைக் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் கவரலாம். ஆனால், நம்முடைய உடல்மொழி (Body Language), குரலின் தொனி (Voice Tone), நம் திறமைகள் ஆகியவைதான் நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகின்றன. இவற்றைச் சரியாக வளர்த்துக் கொண்டால், நம்முடைய மதிப்பை யாராலும் அழிக்க முடியாத அளவிற்கு உயர்த்த முடியும். இதைச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய, ஆனால் சக்திவாய்ந்த மாற்றங்கள் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
1. தன்னம்பிக்கையின் தோரணை (Bold Posture)
உங்களைச் சந்தித்தவுடன் மற்றவர்கள் உங்களைப் பற்றி முடிவெடுக்கப் பயன்படுத்தும் முதன்மையான காரணி உங்கள் தோரணை (Posture) தான். கூனிக் குறுகி இருந்தால் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி, நேராக நிமிர்ந்து நடக்கப் பழகுங்கள். இது உங்களை மற்றவர்கள் கண்களுக்கு ஒரு "ஹீரோ" போலக் காட்டும்.
முதுகை வளைத்து, சோம்பேறி போல் நிற்பதைத் தவிருங்கள்.
நடக்கும்போதும், அமரும்போதும், பேசும்போதும் உங்கள் தோரணை உறுதியாக இருக்க வேண்டும்.
தேவையில்லாமல் கால்களை ஆட்டுவது, மொபைலை நோண்டிக் கொண்டிருப்பது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்து, முழு கவனத்துடன் இருங்கள். உங்கள் உறுதியான தோரணை உங்கள் நம்பிக்கையை உடனடியாக அதிகரிக்கும்.
2. தெளிவான, கனிவான குரல் (Clear and Humble Voice)
மிகவும் முக்கியமானது நம்முடைய குரலின் தொனி மற்றும் பேசும் விதம்.
பேசும்போது வார்த்தைகளில் தெளிவும், நிதானமும் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது எதிர் தரப்பினருக்குத் தெளிவாகப் புரிய வேண்டும். இது உங்கள் மீது மரியாதையை உண்டாக்கும்.
எங்கே, எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பயன்படுத்துங்கள். உங்கள் வார்த்தைகள் யாரையும் புண்படுத்திவிடக் கூடாது.
பணிவாக (Humble) இருந்தாலும், தைரியமாக பேசப் பழகுங்கள். உளறாமல், வேகமாகப் பேசாமல், புரியும் விதத்தில் நிதானமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
'ம்...ம்', 'அப்புறம்' போன்ற ஃபில்லர் வார்த்தைகளைத் தவிர்த்து, நீங்கள் சொல்ல நினைத்ததை நேரடியாகவும் பொருத்தமாகவும் (Appropriately) பேசுங்கள்.
மிக முக்கியமாக, நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எதிர்ல இருப்பவர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கும் நேரத்தை அவருக்கு அளியுங்கள். நல்ல கேட்பவராக இருப்பது ஈர்ப்பின் உச்சம்.
3. சரியான உடை மற்றும் ஸ்டைல் (Appropriate Style)
ஸ்டைல் என்பது விலை உயர்ந்த பிராண்டட் துணிகள் மற்றும் நகைகள் அல்ல. நம்மிடம் இருப்பவற்றைக் கொண்டே நம்மை ஒரு ஸ்டைலிஷ் ஆளுமையாகக் காட்ட முடியும்.
முடிந்தவரை உங்கள் தோற்றத்தில் அக்கறை காட்டுங்கள். பொருத்தமான, சுத்தமான ஆடைகளை அணியப் பழகுங்கள்.
சரியான சட்டை, பேன்ட் அணியும் சின்ன மாற்றம் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களால் முடிந்தவரை பொருத்தமாக உடையணிய கற்றுக்கொள்ளுங்கள்.
4. தன்னை அழகுபடுத்துதல் (Grooming)
உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்திற்கும், ஈர்ப்புக்கும் குரூமிங் மிக அவசியம்.
உங்களுக்குப் பொருத்தமான, சுத்தமான ஹேர் ஸ்டைலை பராமரியுங்கள். எப்போதும் ஸ்டைலாக இருக்க வேண்டியதில்லை, சிம்பிளாக இருந்தாலும் சிறந்த தோற்றத்தைக் கொடுத்தால் போதும்.
வெளியே செல்லும் போது தலை வாரியிருப்பது, முகத்தைப் புத்துணர்ச்சியுடன் (Fresh) வைத்திருப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட மற்றவர்களை எளிதாகக் கவரும்.
நல்ல உடைகளை அணிவதுடன், உங்களைச் சுத்தமாகப் பராமரித்துக் கொள்ளுங்கள். வாசனைத் திரவியங்களைப் (Perfume) பயன்படுத்துங்கள்; உங்கள் அருகிலிருந்து எப்போதும் ஒரு நல்ல வாசனை வரட்டும்.
5. நேர்மறையான உடல்மொழி (Positive Body Language)
உடல்மொழிதான் நீங்கள் யார் என்பதைப் பறைசாற்றும் உங்கள் அடையாளமாகும். முகபாவனைகள் (Facial Expressions), கண் தொடர்பு (Eye Contact) ஆகியவை இதில் முக்கியமானவை.
ஒருவரைச் சந்திக்கும் போது, உறுதியான கை குலுக்கலுடன் (Handshake), சரியான கண் தொடர்பைப் (Eye Contact) பராமரித்துப் பேச ஆரம்பித்தால், அவர்கள் உங்களைப் பார்த்த உடனேயே ஈர்க்கப்படுவார்கள்.
தேவையான இடங்களில் நீங்கள் அளிக்கும் ஒரு மெல்லிய புன்னகை (Smile) மிகப்பெரிய நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும்.
தவறான பார்வை உங்கள் மீதான மரியாதையை அழித்துவிடும் என்பதால், கண் தொடர்பில் கவனமாக இருங்கள்.
6. உடல் தகுதி (Physical Fitness)
உடல் தகுதி என்பது உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உங்கள் மீது ஈர்ப்பை உண்டாக்குவதற்கான மிக முக்கியமான அம்சம்.
உடலைத் தகுதியுடன் (Fit) வைத்துக் கொள்ளும்போது, அது உங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
இதற்காக நீங்கள் ஜிம் சென்று அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. உங்கள் உடல் எடை, உயரத்திற்கு ஏற்ற விகிதத்தில் இருக்க, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை (Home Workout, Basic Exercise) மேற்கொள்ளுங்கள்.
ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். உங்கள் ஃபிட்னஸ் லெவலைப் பராமரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
7. அசைக்க முடியாத தன்னம்பிக்கை (Unwavering Confidence)
தன்னம்பிக்கைதான் (Confidence) ஈர்ப்பு மிக்க ஆளுமையின் மிக முக்கியமான பண்பாகும்.
உங்களின் மதிப்பை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களை ஒருபோதும் மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.
"நான் அவனைவிடப் பெரிய ஆள்," என்றோ,
"அவன் என்னைவிடப் பெரிய ஆள்" என்றோ நினைப்பது தேவையற்றது.
எதற்காகவும், எவரையும் நினைத்தும் பயப்படக் கூடாது. ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள், பிரச்சனைகளை எப்படிச் சமாளித்துத் தீர்க்கிறீர்கள், என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் ஆகியவைதான் உங்கள் தன்னம்பிக்கையைத் தீர்மானிக்கின்றன.
நீங்கள் ஒரு தன்னம்பிக்கை மிக்கவராக இருந்தால், உங்களைச் சந்திக்கும் அனைவருக்கும் ஒரு நேர்மறை ஆற்றல் (Positive Energy) உண்டாகும்.
உங்களைப் பார்த்து மற்றவர்கள் உங்களைப்போல் மாற நினைப்பார்கள். இதுவே உங்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டு.
எதையும் நினைத்து அதிகமாக யோசிக்காமல் (Overthink), உங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
இந்த எளிய, ஆனால் ஆழமான மாற்றங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால், நீங்களும் ஒரு சக்தி வாய்ந்த ஈர்ப்பு மிக்க ஆளுமையாக (Attractive Personality) மாறிவிட முடியும். நம்பி முயற்சி செய்து பாருங்கள், வெற்றி நிச்சயம்!