

வாழ்க்கையில ஏதோ ஒரு காரணத்துக்காக, நம் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். முதல் தடவை வருத்தம் மட்டுமே இருக்கும். மீண்டும், மீண்டும் தொடர்ந்தால் சலிப்பு தோன்றி விடும். முயற்சிகள் குறைந்து, மறைந்து எதிலும் பிடிப்பு இருக்காது. அதற்கு என்ன செய்யலாம்...? அந்த நிராகரிப்பை புறந்தள்ளி விட்டு, முன்னேற்றத்திற்கான தருணம் இது தான் என உணருங்கள். முன்னேற்றத்தின் முதல் படியில் நின்று கொண்டு, மேலே ஏற முயற்சி செய்யுங்கள். சாதனை கை குலுக்கக் காத்திருக்கும்.
மற்றவர்கள் உங்கள் செயல்களை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறார்களா? வலிக்கத்தான் செய்யும். அதிலேயே வழியைத் தேடுங்கள். ஒரு சின்ன விஷயம் சொல்லவா? கோகிலா சமையல் செய்வதில் எக்ஸ்பர்ட் இல்லை தான். ஆனாலும், அவள் சமையல் சாப்பிட ருசியாகத் தான் இருக்கும். ஆனாலும், கணவரும், குழந்தைகளும் எப்பொழுதும், குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
பலமுறை சாப்பிடாமல், ஆன்லைனில் ஆர்டர் பண்ணி, சாப்பிட்டார்கள். சிரமப்பட்டு, செலவு பண்ணி, தயாரித்த சாப்பாடு வீணாகியது.
முதலில் வேதனையாக இருந்தது. ஒரு கட்டத்தில் கோகிலா விழித்துக் கொண்டாள். அவர்கள் நிராகாரிப்பை புறந்தள்ளினாள். சமைக்கலாம் வாங்கன்னு, யூடியூப் சேனல் ஆரம்பித்தாள். தினசரி சமையல் செய்வதை பதிவிட்டாள். முதலில் லைக்ஸ் குறைவாகவே இருந்தது, தளராமல் போகப் போக, கூடி, லைக்ஸ் ஒரு லட்சத்தைத் தாண்டி, பாலோயர்கள் அதிகமாகவே, அப்போது தான் குடும்பத்தினருக்குப் புரிந்தது, கோகிலாவின் திறமை. பொறுமை வெல்லும் என்பதை நிரூபித்தாள்.
நிராகரிப்பு எப்போதும் மனசைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் சாதனையை வசமாக்க முடியும். எத்தனை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். உன்னால் முடியாது என்று உதாசீனப்படுத்தியதை, கதாநாயகனோ, நாயகியோ வைராக்கியமாக எடுத்து, தளராமல் முயற்சி செய்து ஜெயித்து, சுபம் போடுமுன் நிராகரித்தவர்களே கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம். சினிமா தான் என்றாலும், இயல்பு வாழ்க்கையிலும் நிறைய இடங்களில் கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.
ஓரிடத்தில் மற்றவர்கள், உங்களை ஒதுக்குகிறார்களா....அந்த இடத்திலேயே தனியே நிற்காதீர்கள். உங்களுக்கு தோதான கூட்டத்துக்குள் நுழைந்து விடுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் முக்கியத்துவத்தை உணர வையுங்கள். புரிந்ததும் கொண்டாடுவார்கள். உங்களை ஒதுக்கிய அணியினரும் உங்களுடன் இணைய வருவார்கள். தேவை பொறுமையும், முயற்சியுமே...
பொருளாதார ரீதியிலும் உங்களை குறைத்து மதிப்பிடும் போது, வாய்ப்புகள் நழுவி விடும். பணிப்பெண்ணின் மருமகள் சக்திக்கு, டெய்லரிங் தெரியும். வீட்டின் முன் அறையில் தையல் மிஷின் வைத்து, பிளவுஸ் தைத்ததில் குடும்ப வருமானம் உயர ஆரம்பித்தது. பிரச்னை என்னன்னா, அவள் நன்றாக தைத்தாலும், அங்கு ஷோகேஸ் இல்லை.. குறைவான லைட்களே இருக்கு.. வெளிச்சம் பத்தாதுன்னு சொல்லி பல வாடிக்கையாளர்கள் அவளிடம் தைக்கக் கொடுப்பதைத் தவிர்த்தார்கள். எப்படி சரி செய்வது..? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள் சக்தி. புதிய வாடிக்கையாளர்களைத் தேடினாள். கிடைத்ததும், சிரமம் பாராது, அவர்கள் இல்லம் தேடிச் சென்று துணிகளை வாங்கி வந்து, குறித்த தேதியில் தைத்துத் தந்து, காத்திருப்பை தவிர்த்ததால், வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான டெய்லரானாள். இருக்குமிடம் தேடிச் சென்றதால், அவர்களும் அலைச்சல் மிச்சமென மகிழ்ந்தனர். விசேஷ தினங்களில், சக்திக்கு மவுசு பல மடங்கானது.
இல்லம் முதல் பணியிடம் வரை நம் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் தடைகள் இருக்கத் தான் செய்யும். அடாது குறை சொன்னாலும், விடாது முன்னேறி அவர்கள் முன் நிமிர்ந்து நின்று, அவர்களை வியப்பில் நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கணும்.
விமர்சித்தவர்களே பாராட்டும் போது அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்...சொல்லுங்க ..மட்டம் தட்டிய உள்ளங்களுக்கு, நீங்கள் யார் என அடையாளம் காண்பித்து, அவர்களை கை தட்ட வையுங்கள் ..வாழ்க்கை சிறக்கும்...