

திருஷ்டி, ச்ருஷ்டி என்ற வார்த்தைகள் வேதத்தில் சொல்லப்படுவதுண்டு. திருஷ்டி என்றால் பார்வை. ச்ருஷ்டி என்றால் உருவாக்குதல். நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம். நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உற்சாகமாகவே இருப்பீர்கள். குறிப்பாக, நாம் எதை பாவிக்கிறோமோ நாளடைவில் அப்படி ஆகிவிடுகிறோம்.
ஒரு இளைஞன் உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து உடை மாற்றி அலுவலகம் செல்கிறான். பக்கத்து வீட்டுக்காரர், "என்ன தம்பி டல்லாக இருக்கீங்க.. உடல் சரியில்லையா?" என்று கேட்கிறார். தெருமுனையில் நண்பன் ஒருவன், "என்னடா ஆச்சு, பார்க்கவே ரொம்ப சோர்வாக இருக்கயே.. உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான். ஆபீசில் ரிசப்ஷனிஸ்ட் "ஏன் சார் ஜுரமா..?" என்று விசாரிக்கிறாள். "உங்களுக்கு உடல் சரியில்லை என்றால் லீவு எடுத்திருக்கலாம்" என்று கரிசனமாகக் கேட்க இளைஞன் சோர்ந்து விட்டான்.
அவ்வளவுதான் வீட்டை விட்டு கிளம்பிய இளைஞன் சக்தி வற்றி உண்மையிலேயே தனக்கு உடல் நிலை சரியில்லை என்று எண்ணி ஆபீசுக்கு லீவு போட்டு படுத்து விட்டான்.
நமது எண்ணம் நம் உடம்பை எப்படி பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது. சிலசமயம் நம் உடம்பே கூட எண்ணங்களால் நம்மை பாதிப்பது உண்டு. டென்ஷனாகும் போது நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் சாதாரண நிலையில் இருக்கும்போது நகம் கடித்தால் கூட மனதில் டென்ஷன் புகுந்துவிடும். ஆனால், நன்கு சலவை செய்த சட்டை மற்றும் பாண்ட் மாட்டிக் கொண்டாலே வெளியில் கிளம்புற உற்சாகம் மனதிற்குள் வந்துவிடுகிறது அல்லவா?
சொடக்கு போடும் நேரத்தில் உத்சாகத்தை நம் மனத்திற்குள் ஊற்றெடுக்க வைக்க முடியும். தீமிதித் திருவிழாவை நீங்கள் கவனித்திருக்கலாம். தீமிதிக்கும் பக்தர்கள் யாரும் அதில் முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லை. தீ மிதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் வந்தவுடன் அவர்களுக்கு உத்சாகமும் வேகமும் வருகிறது. காரணம் மனதுதான்.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட நம்முடைய கருத்து ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் பலர் குறியாக இருக்கிறார்கள். அதனால், ஒருசிலர் மகிழ்ச்சியை கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஒரு பணக்காரர் ஒருவருக்கு பரம்பரைச் சொத்தாக பங்களா இருந்தது. அதை ஒட்டியிருக்கும் அவுட் ஹவுசை விற்றால் கூட ஒருகோடி கிடைத்திருக்கும். ஆனால், பரம்பரை சொத்தை விற்கக் கூடாது என்று வீம்பாக இருந்தார்.
கோடிக்கணக்கான சொத்து மதிப்பான பங்களா தவிர வேறு வருமானம் இல்லாததால் சொத்துவரி, டெலிபோன் வரி, மின்கட்டண பில் இப்படி பலவற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடினார். அவருக்கு கோடிக்கணக்கான விலைமதிப்பான பங்களா இருந்தும் அதைவைத்தும் சந்தோஷம் இல்லாமலேயே காலம் கழித்தார். தனக்கு வருமானத்திற்கு வழி இருந்தும் தன் சுய பிடிவாதத்தால் நிம்மதியை பெற முடியாமல் தவித்தார்.
நமது கருத்துக்களை விட நம் சந்தோஷம் முக்கியம் என்ற நினைப்பு நமக்கு வர வேண்டும். நியாயமான வழிமுறைகளில் சந்தோஷமும் நிம்மதியும் நம்மைத் தேடிவர நாம் பழகிக் கொள்ள வேண்டும். இந்த மனநிலை வந்து விட்டால் பஞ்சம் இல்லாமல் உற்சாகம் பீறிடும்.