

முதல் சந்திப்பில் உருவாகும் தயக்கத்தை உடைத்து, சாதாரண அறிமுகம் மூலமாகவே நல்ல உறவுகள், பயனுள்ள தகவல்கள் கிடைக்கலாம் என இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது. புதியவர்களிடம் பேசும்போது, அவர்களின் தனிப்பட்ட விஷயங்களிலும், நம் தனிப்பட்ட விஷயங்களிலும் அதிகம் இறங்காமல், மரியாதையுடன் உரையாட வேண்டும் என்பதையும், தவிர்க்க வேண்டிய நடத்தை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பிஸியான வாழ்க்கையில் நித்தம் புதிதாக சிலரை சந்திக்கிறோம். ஆனால், அவர்களுடன் பழகாமல் கடந்துவிடுகிறோம். காரணம் வேலை அவசரம். அடுத்து தயக்கம். தயக்கத்தால் பல நல்ல வாய்ப்புகளை இழந்துவிடுகிறோம்.
நாம் சந்திக்கும் எல்லோரிடமும், சில மைனஸ் இருக்கத்தான் செய்யும். ஏன்… நம்மிடமே இருக்கும். பார்க்கும் யாரையும் இவர்கள் நல்லவர்கள் இல்லையோ என்று எழும் சந்தேகத்தை டெலிட் பண்ணுங்கள். பேசுங்கள். பிடித்திருந்தால் தொடருங்கள். இல்லையா நகருங்கள். அவ்வளவுதான்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் பதற்றமின்றி உரையாடும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். அறிவை, மனசை விசாலப்படுத்தும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். அவற்றால், பின்னாளில் சந்திக்கும் பிரச்னைகளை எதிர் கொள்ளும் தைரியத்தை தரும். தீர்வுகளும் புலப்படும்.
இரண்டு பெண்கள், ரயிலில் சென்னைக்கு பயணம் செய்கிறார்கள். அவர்களிருவரும் சமையல் போட்டியில் தேர்வாகி, கடைசி சுற்றுக்கு செல்கிறார்கள். ஒருத்தி குனிந்த தலை நிமிராமல் மொபைலில் மூழ்கிவிட்டாள். எதிரில் அமர்ந்திருந்த பெண்மணியின் கம்பீரம் இன்னொருத்தியை ஈர்த்தது.
சற்று நேரத்தில் தயக்கத்தை உடைத்து மேடம், நீங்களும் சென்னைதான் வருகிறீர்களா? கேட்டாள். அவரும் "ஆமாம். நீங்க ..?" கேட்டதும் இவளும் சென்னைக்கு எதற்காக செல்கிறேன் என்றவுடன், உரையாடல் தொடர்ந்தது. அந்தப் பெண்மணி தானொரு செஃப் எனக் கூறி, இறுதிப்போட்டிக்கு எப்படி தயாராகணும். எந்த விஷயங்களில் கவனமாக இருக்கணும் என டிப்ஸ் தர, அதை உள்வாங்கி தேவையான இடங்களில் கடைபிடித்து, அந்தப் பெண் டைட்டில் வின்னர் பட்டம் வென்றாள். மொபைலில் ஆழ்ந்தவள் ஆறாம் இடத்தில் இருந்தாள்.
புதியவர்களை சந்திக்கும்போது, நீங்கள் சுவாரஸ்யமாக பேச வேண்டிய கட்டாயமில்லை. ஜோக் சொல்லி சிரிக்க வைக்க வேண்டிய அவசியமுமில்லை. சாதாரணமாக உங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்களும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்தால் உரையாடலை தொடர தயாராக இருக்கிறார் எனப் புரிந்துகொள்ளுங்கள். சிலர், "அப்படியா" எனக் கேட்டு விட்டு அமைதியாவதும் உண்டு.
சற்றுப் பொறுத்து, பொதுவான ஒரு விஷயத்தை கூறுங்கள். விருப்பமிருந்தால் அவரே தொடருவார். பேசாதிருந்துவிட்டால் விட்டு விடுங்கள். மேலும் முயற்சிக்காதீர்கள். அதுபோலவே, சிலர் உங்களிடம் பேச வரலாம். இவர் யாரென்றே தெரியாது என்று பின் வாங்காதீர்கள். பேச்சைத் தொடர்ந்து சற்று கழித்து முடிவெடுங்கள்.
முதன் முதலாக சந்திக்கும் நபர்களின் உறவு தேவையில்லையென்றோ, நட்பு அவசியமில்லை என்றோ ஒதுங்காதீர்கள். அவர்களிடமும் சில நல்ல விஷயங்கள் ஒளிந்திருக்கலாம்.
புதியவர்ககளிடம் பேசும்போது, தவிர்க்கவேண்டிய விஷயங்களும் உண்டு. சந்திக்கும் நபர் வங்கி மேலாளராக இருந்தால், லோன் வேண்டுமென விண்ணப்பிக்காதீர்கள். அவர் எப்போது ஓய்வாக இருப்பார் எனக் கேட்டுக்கொண்டு, அந்த நேரத்தில் நேரில் போய் கேளுங்கள். அவர் மனதில் உங்கள் மதிப்பு உயரும். அவர்கள் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்களைப் பற்றி எதிர்மறை அபிப்ராயம் தெரிவிப்பதும் சரியல்ல.
பொது இடத்தில், புதிதாக ஒருவரை சந்தித்து, அறிமுகமானதும் நீங்க கட்டியிருக்கிற பச்சை புடவைக்கு டிசைன் பிளவுஸ்தான் எடுப்பாயிருக்கும்ன்னு சொல்லக்கூடாது. முக்கியமாக, விசேஷங்களில்தான் இந்த விமர்சனம் காதில் விழும்.
சொன்னவர் நகன்றதும், அந்த அம்மணி எரிச்சலுடன் கூறுவார், "தேடி வந்து டென்ஷன் ஆக்கிட்டாங்க"ன்னு தேவையா…? புதிதாக ஒருவரை சந்திக்கும்போது, அவர்களுடைய பெர்சனலுக்குள் நீங்கள் செல்லாமல், உங்கள் பெர்சனலுக்குள் அவர்களை நுழையவிடாமல் இணக்கத்தை தொடர, நட்பு மலர்ந்து பூரிக்கும் வாழ்க்கை.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், அறிமுகமில்லாதவர்களிடம் பேசும்போது ஏற்படும் பதற்றத்தை முற்றிலும் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் உரையாடி புதிய வாய்ப்புகளையும் மதிப்புமிக்க புதிய மனிதர்கள் நட்புகளையும் உங்களால் உருவாக்க முடியும்.