

ரசனை என்பது கலையை, படைப்பை, ஆற்றலைத் திறமையை ரசிக்கும், போற்றும் மனநிலை. உவகையூட்டும் சிறந்தவற்றை ஆராதிப்பதுடன் அது நின்றுவிடவேண்டும்
ஒரு மேடையில் நிகழ்ச்சி நடந்தால் உச்சம் தொடும் இடங்களில் கைத்தட்டி நமது அங்கீகாரத்தைத் தெரிவிக்கலாம். வெளிநாடுகளில் அவர்கள் இடையிடையே கை தட்டாமல், நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் எழுந்து நின்று வெகு நேரம் கைத்தட்டியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
வித்வத்தை தான் நாம் கொண்டாடுகிறோம். வித்துவான்களை அல்ல என்ற தெளிவு நமக்கு வேண்டும். வித்துவான்களும் அவர்களது வித்தையை அவர்கள் நிகழ்த்தி காட்டியதற்குத்தான் போற்றப்படுகிறார்கள் என்ற புரிதல் வேண்டும். அவர் அவரது முயற்சி , பயிற்சி, நேர்த்திக்காக மட்டுமே போற்றப்படுகிறார். இதனை மீறி அவரது ஆசை, அபிலாஷை, தனிப்பட்ட வாழ்க்கை, பிற செயல்பாடுகள் ஆகியவை ஒரு ரசிகனுக்கு அவசியமற்றது.
சபை கலைந்த பிறகு அவரவர் வேலைகளைப் பார்க்க வேண்டியதே ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகு, நியதி. அவர் என்ன பற்பசை பயன்படுத்துகிறார், என்ன உடை அணிகிறார், எந்த வண்டியில் போகிறார், யாரை மனத்து வாழ்கிறார் என்பதெல்லாம் அவரது வித்தைக்கும், ஞானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைமைகள்.
யாரும் யாரையும் கட்டளையிட்டு தன் வழி நடக்கச் சொல்லும் தலைவனும் இல்லை. யாரையும் அப்படி நமது சிந்தனை செயல்களால் அதீதமாக ஆராதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நம் வீடுகளில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பயனும் இடமும் இருப்பது போலத்தான் இதுவும். யாரும் செருப்பைச் சமையல் மேடையிலோ, வழிபடும் தெய்வ உருவங்களை வீட்டின் எல்லா இடங்களிலும் வைப்பதில்லை. உடுப்புகளையும் கீழே மேலே மாற்றி போடுவதில்லை. உறவையும் உரிமையையும் எல்லை உணர்ந்து தான் கையாள்கிறோம் .
இப்படிப் பல விஷயங்களில் நாம் காட்டும் ஒழுங்கு, ரசனைகளின் வெளிப்பாட்டில் எப்போது கோடு தாண்ட அனுமதிக்கிறோம்? யாரிடம் அதன் கடிவாளம் இருக்கிறது? அதனை எப்படி எவ்வளவு இறுகப் பற்றவேண்டும் என்ற நியதியை யார் தீர்மானிக்கிறார்கள்?
இந்த ரசனை நுண் கலைகளில், சங்கீதம் , எழுத்து , ஓவியம் ஆகியவற்றில் சற்று கட்டுப்பட்டே இருக்கிறது. ஆனால் பெரும் ஆதரவைப் பெறும் சினிமா, அரசியல் விளையாட்டு (குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட்) ஆகியவற்றில் ரசிகனைப் பித்தனாக மாற்றிவிடுகிறது.
ஆரம்பத்தில் திரையைப் பார்த்து, பேச்சைக் கேட்டு, ஆட்டத்தை கண்டு வியக்க வைக்கும் ரசனை சில வருடங்களில் வெறியாக மாறிவிடுகிறது.
அந்தத் துறை செயல்பாட்டாளரின் திறமை சார்ந்த செயல்களைத்தாண்டி அவர்களது புற விஷயங்களின் மேல் ரசிகன் கவனம் செலுத்தத் தொடங்குகிறான். அவனுக்கு அது கொடுக்கும் கிளர்ச்சி அவனை ரசிக்கும் நோக்கம் தாண்டி எல்லா செயல்களிலும் அவர்களை பின்பற்றி வெறியுடன் செயல் படத்தூண்டுகிறது.
தான் யாரை ரசிக்கிறானோ அவனைப் போலவே தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறான். நடை உடை பாவனை ஆகியவற்றை தன் சுயம் இழந்து தன் மேல் தினித்துக் கொள்கிறான். அவன் என்னவாகி நிற்கிறோம் என்ற உணர்வும் அற்று முழுதாக தன்னை இழக்கத் துவங்குகிறான்.
உயர்ந்த நெறிகளை வாழ்க்கை முறைகளை விழுமியங்களை நோக்கி ஒருவனை அழைத்துச் செல்லும் விடயமாக இருந்தால் இந்த மாற்றத்தை கூட ஏற்றுக்கொள்ளலாம். தொடர வேண்டிய நற்பண்புகள், நம்மை உயர்த்தும் நடைமுறைகள், உயர்வை நோக்கி உந்தித் தள்ளும் ஆகிருதிகளாக அவை இருந்தால் நிச்சயம் பின் பற்றலாம். அப்படி ஒன்றும் ஒருவரும் இருக்கிறார்களா என்பதே கேள்வி
அவர்கள் ஏற்படுத்தும் பிம்பத்தைதான் நாம் தொடர்கிறோம், அவர்களை கூட அல்ல என்ற தெளிவாவது இந்த வெறிபிடித்த ரசிகனுக்கு இருக்குமா? மாய பிம்பம் உடைந்து தெளிவு பெற்று உண்மை தரிசனம் கிடைத்தால் இப்படி வெறியாக ரசனைதான் மாறுமா?
அதனை நாள்பட்டு அந்த ரசிக வெறியன் உணரும்போது அவன் மீண்டு வரமுடியாத தூரத்திற்க்கு சென்றிருப்பான். அல்லது மாற விருப்பம் கீற்றாக முளைத்தாலும் அதனை மழுங்கச் செய்யும் மனநிலையில் அந்த வெறியன் வந்திருப்பான்.
சுயம் இழப்பது, நோக்கம் மறப்பது, கடமை துறப்பது, செல்வம் வீணாவது என்று பல தீமைகள் இந்த ரசிகன் வெறியனாக மாறும் போது ஏற்படுகிறது. அதைவிட தீமையானதும் அந்த வெறி பற்றி எரியும் நெருப்பாகி சமுதாயத்தையே சீர்குலைப்பதை இப்போது நாம் காண்கிறோம்.
இதன் இன்றைய நிலை. படித்த பண்பான யோசிக்கத் தெரிந்த இனம் நாம் என்ற அடையாளம் இழந்தது. பிம்பங்களை பின்தொடரும் கூட்டம் என்றும், சுய சிந்தனையை இழந்த சமூகம் என்று மாறியது. எளிதில் இவ்வினத்தின் செயல்பாடுகளை வசப்படுத்தி நம் விருப்பத்திற்க்கு மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை பல ஒழுக்கமற்ற தீயவர்களிடம் ஏற்படுத்தி நம்மை ஒப்புவித்தது. அதனால் நம்மை உணராமலே நாம் அடிமையாக இருக்கிறோம் என்பது நம்மைவிட நம்மை ஆட்டிப் படைப்பவருக்கு நன்றாக தெரிகிறது.
என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று கதற வேண்டிய நிலையில் சமுதாயம் நிற்கிறது.