

இன்று பாரா ஒலிம்பிக்கில் நிறைய மெடல்களை வாங்குபவர்களை பார்த்தால் நமக்கு உற்சாகம் மேலிடுகிறது. அவர்கள்தான் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் லேசாக ஏதாவது உடல் உறுப்புகளில் குறை இருந்தால் அவர்கள் வெளியில் வரவோ, மற்றவர்களோடு சகஜமாக பழகவோ மிகவும் சங்கடப்படுவார்கள். மற்றவர்களும் கூட அவர்களை ஏதாவது ஒரு இக்கட்டான நேரத்தில் அந்தக் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகும் படி பேசி விடுவார்கள். ஆதலால் இதுபோன்ற குறை உடையவர்கள் மிகவும் நொந்து போவது உண்டு.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் அதுபோல் யாரும் அவர்களை ஏளனம் செய்து பேசுவது இல்லை. குறை இருப்பவர்கள் தங்கள் மீது மற்றவர்கள் பரிதாபப்படுவதை முற்றிலும் வெறுக்கிறார்களே அன்றி விரும்புவது இல்லை.
ஒருமுறை லிப்ட்டில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, லிப்ட்டில் ஏற வந்தவர், லிப்ட்டில் இருந்த ஒரு முதியவரின் தடியில் இடித்துக் கொண்டு விட்டார். உடனே அவருக்குக் கோபம் தலைக்கேற, அந்த ஊன்றுகோல் வைத்திருந்தவரைப் பார்த்து கன்னா பின்னாவென்று கோபம் தீரும் வரை பேசித் தீர்த்து விட்டார்.
அந்தப் பெரியவரும் எதுவும் பதில் சொல்லாமல் லிப்ட்டை விட்டு இறங்கிய பொழுது, திட்டியவரைப் பார்த்து, "ஐயா! என்னால் உங்களுக்கு துன்பம் இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு கண் பார்வை முற்றிலும் தெரியாததால்தான் கோலுடன் நடக்கிறேன். அதை வைக்கும் பொழுது நான் சரியாக வைக்கவில்லை போலும். அதுதான் உங்களை சிரமப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மன்னியுங்கள்
என்று கூற, அதை கேட்டுக் கொண்டிருந்த அந்த பேசியவருக்கு மிகவும் துயரமாக மாறிவிட்டது. அதே இடத்தில் மன்னிப்பு கேட்டார். நான் உங்களை கவனிக்காமல் திட்டி விட்டேன். ‘என்னை மன்னியுங்கள்’ என்று தழுதழுக்கக் கூற இருவரும் பரஸ்பர ஒற்றுமையானார்கள்.
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதில்லை அல்லவா! அதுபோல் தான் அங்கத்தில் எந்த குறை இருந்தாலும் அதையும் மீறி சாதிப்பதற்கு தடைகள் எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளமாக கொட்டி கிடக்கின்றன. இந்தக் குறையை தனி ஒரு பொருட்டாக கருதாமல் சாதித்த சாதனையாளர்கள் ஏராளம்.
இசையில் சாதனை புரிந்த பீத்தோவன் காது கேளாதவர். இலியட், ஓடிசி போன்ற அழியா காவியங்களைப் படைத்த ஹோமர் கண் தெரியாதவர். இழந்த சொர்க்கம், மீண்ட சொர்க்கம் போன்ற உலகப் புகழ்பெற்ற காவியங்களை தனது கண் பார்வையை இழந்த பின்னரே மில்டன் எழுதினார். குழந்தை பருவத்திலேயே கேட்கும் திறன், பேச்சுத்திறனையும் இழந்தவர் ஹெலன் கெல்லர். பின்னால் அவர் மற்றவர் நலனுக்காக பாடுபட்டு புகழ்பெற்றார்.
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டபோது ,"எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும் கேட்காது. புகழ்ந்தாலும் கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலைகளிலேயே கவனம் செலுத்த முடிந்தது. அதனாலயே என்னால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது" என்று கூறினார்.
இப்படி குறை என்பதை நிறையாக்கியதால் தான் இவர்கள் இன்றும் குன்றாத புகழோடு பேசப்படுகிறார்கள் என்பதுதானே நிஜம். ஆதலால் இன்றும் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் பதுங்கிக் கொண்டு இருப்பது உண்டு. அவர்கள் உற்சாகத்துடன் சாதனையை தொடரலாம்.