
'மனிதர்களின் ஆயுளைக் கவலைகளே கொன்று விடுகின்றன. கவலை இல்லாத மனிதர் என்று ஒருவர் உலகில் உள்ளாரா?' எனத் தேடினால் ஒருவர் கூட இருப்பது மிக மிகக் கடினமே. மனிதர்கள் என்று இல்லை, எல்லா உயிரினங்களுமே ஏதோ ஒரு கவலையில் அதனை மறந்தவாறு வாழ்கின்றன. பறந்து போகும் பறவைகளையும் ஊர்ந்து போகும் உயிர்களையும் பாய்ந்து ஓடும் மான், பதுங்கிப் பாயும் புலி என எல்லா உயிரினங்களுமே தத்தம் தேவைகளுக்காக, உணவிற்காக கவலை கொள்கின்றன.
ஆனால், அவைகள் கவலைகள் கொண்டு தேங்கி விடுவதில்லை. அவைகள் அதன் உணவுத் தேவைகளுக்காக தேடுகின்றன, அவைகளுக்குள் தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்கின்றன, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றன. இளைத்தவை வலுத்தவைகளுக்குச் சொந்தமாகின்றன.
அங்கே என்ன நடக்கின்றதோ அவையே நம்மிடையேயும் நடக்கின்றன. என்ன பகுத்தறிவு கொண்டு யோசிக்கின்றான் மனிதன். அறிந்தவைகளை அமுல்படுத்துகிறான், முயற்சிக்கிறான், முடியாது என்கின்ற போது ஏதோ ஒன்றில் சரணடைகிறான்.
சரணடைந்தும் முடியாத போது கவலை கொள்ள ஆரம்பிக்கின்றான். சிலர் சொல்லக்கூடும், நான் உறங்கப் போகும் போது, படுத்த அடுத்த நொடி உறங்க ஆரம்பித்து விடுவேன் என்று. அவர் உண்மை சொல்கிறாரா? என்பதை நாம் அறியோம். அப்படி ஒரு நொடியில் ஒருவர் உறங்க ஆரம்பிக்கிறார் என்றால், அவர் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர் என எடுத்துக் கொள்ளலாம்.
பயமில்லாமல் வாழ வாய்ப்பு பெற்ற ஒரு உயிரினம் தான் நாம். சில பல தவறான நம் நடவடிக்கையால் நாம் பயம் கொள்ள ஆரம்பிக்கிறோம். அவைகளே கவலைகளாக நம்மைப் பின் தொடர்கின்றன. அந்தக் கவலைகள் நம்மை சிறிது சிறிதாக கொல்ல ஆரம்பிக்கின்றன.
மகிழ்வான மனிதரையும் கவலைகள் நிறைந்த மனிதரையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கலாம். மகிழ்வான மனிதர்களின் முகங்கள் எடுப்பாக இருக்கும். கவலைகள் கொண்ட மனிதர்கள் முகங்கள் கடுப்பாக இருக்கும். பெரும்பாலானவர்களின் கவலைகள் பணம் தொடர்பாக இருக்கும். பணம் பற்றாக்குறை, நெருக்கடி என்பது உலகமயமாக்கப்பட்ட ஒன்று.
இருந்தும் பணம் படைத்தவருக்கும், குணம் மட்டும் கொண்டவர்க்கும் இடையே பொது மக்களிடம் இருக்கும் வரவேற்பைப் பார்த்தாலே பணம் இல்லாதவர் மேலும் கவலைக்கு உள்ளாகிறார். ஒப்பீடு செய்யும் குணம் மனிதர்களின் இயல்புக் குணம். அதனை அவர்களே முயற்சித்து படிப்படியாக மாற்றிக்கொள்ள இயலும்.
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின், எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் – இல்லானை, இல்லாளும் வேண்டாள், மற்றீன்டெடுத்த தாய் வேண்டாள், செல்லா (து) அவன் வாயிற் சொல் என அவ்வையார் மூதாட்டி ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே நடைமுறை வாழ்க்கையைப் பார்த்து எழுதி வைத்துச் சென்று விட்டார். அன்றைய படைப்பாளர்களும் சரி இன்றைய படைப்பாளர்களும் சரி வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்திட இயலாது. படைப்பாளர்களின் படைப்புகளை மட்டுமே நம்பி வாழும் படைப்பாளர்களின் இல்லம் பெரும்பாலும் கவலைகள் நிறைந்தவைகளாகவே இருக்கும்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பதவியில் இருந்த போது பல சிரமங்களுக்கிடையே ஒரு எழுத்தாளர் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். அவரிடம் மாண்புமிகு இராஜாஜி அவர்கள் கேட்ட முதல் கேள்வி "எழுதுறிங்க சரி. சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க. எனவே வயிறு, வறுமை, கவலை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அந்தக் கவலை "பொருளாதார நிலையுடன்" முக்கியத் தொடர்புடையது.
சுயத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளும் மனிதன் ஓரளவு நிம்மதி கொண்டவனாக இருப்பான். அவர் போன்றோரிடம் கவலைகள் குறைவாக இருக்கக் கூடும். அதனால் தான் பேரறிஞர் அண்ணா ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்.
இறைவன் குறித்த கேள்வி அவரவர் மனது தொடர்பு கொண்டது. ஆனால், வயிற்றுப் பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பறவைகள், விலங்குகள், பூக்கள், மரங்கள் பிற உயிரினங்களைப் பார்த்து அவை எந்தக் கவலையும் இன்றி மகிழ்வாக இருக்கின்றன என சொல்கிறார்கள். உண்மையில் அவைகள் பலவிதக் கவலையுடன் தான் வாழ்கின்றன.
ஆனால், அவைகளைக் களைய அவைகள் முயன்று கொண்டே இருக்கின்றன. பேசத் தெரிந்த ஆறறிவு படைத்த மனிதர்களில் பலர் அந்தக் கவலைகளை முறையாகக் களைய முற்படுவதேயில்லை. கவலைகள் ஏற ஏற ஒரு சிலரின் மனம் தற்கொலைக்கு மாறுகின்றன. பணம் இல்லாமை மட்டுமே கவலைகளுக்குக் காரணம் அல்ல. பல காரணங்கள் உண்டு.
கவலைகள் இல்லாத உயிரினங்கள் உலகில் ஒன்றும் இல்லை. கவலைகளிலிருந்து விடுபட மனிதர்கள் பலப் பலவனவற்றில் எவருக்கும் துன்பம் ஏற்படாத செயல்களில் ஈடுபட வேண்டும். துன்பம் இல்லாத செயல்கள் இன்பம் விளைவிக்கும். இன்பம் மகிழ்வுக்கு வித்திடும். பின், கவலைகள் பறந்தோடும்.".