
மனித வாழ்வில் மோடிவேஷன், படைப்பாற்றல், சந்தோஷம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்த ஒரு அதிசய மனிதர் ஹங்கேரிய அமெரிக்கரான, மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY CSIKSZENTMIHALYI)! (பிறப்பு: 29-9-1934 மறைவு: 20-10-2021).
படைப்பாற்றலை வெகு காலம் ஆராய்ந்து ‘ஃப்ளோ’ என்ற படைப்பாற்றல் உத்தியை வலியுறுத்திய இவரை ‘தி ஃபாதர் ஆஃப் தி ஃப்ளோ’ (The Father of the Flow) என்று புகழ்கின்றனர்.
இப்போது ரிஜேகா, க்ரோஷியா என்று கூறப்படும் பழைய கால இத்தாலி நக்ரான ஃப்யூமில் 1934ம் ஆண்டு பிறந்த இவர் 2021ம் ஆண்டு மரணமடையும் வரை படைப்பாற்றலை அக்கு வேறு ஆணி வேராக அலசி அது பற்றிய அறிவியல் பூர்வமான பல தகவல்களை உலகுக்கு அளித்தார்.
அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டத்தை 1960ல் இவர் பெற்றார். பின்னர் படைப்பாற்றலில் ஃப்ளோ என்ற கொள்கையை முன் வைத்தார்.
ஃப்ளோ தியரி என்றால் என்ன?
நாம் ஒரு முனைப்பட்ட கவனத்துடன் நிகழ்காலத்தில் இந்த தருணத்தில் இருக்கும் போது நாம் ஃப்ளோ’ நிலையில் இருக்கிறோம். ஆகவே மோடிவேட் (உணர்வூக்கம் அடைகிறோம்) செய்யப்படுகிறோம். இதன் பயனாக நமக்கு நல்ல ஒரு பரிசு கிடைக்கிறது.
ஃப்ளோ நிலைக்கு எப்படிச் செல்வது?
எதிர்நோக்கி இருக்கும் சவால்களுக்கும் செயல்திட்ட வாய்ப்புகளுக்கும் சரியாக திறமைகள் சிறிதளவேனும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நமது குறிக்கோள்கள் (லட்சியங்கள்) குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது சரியாக வரையறுக்கப்பட வேண்டும். முழுத்தகவல்களுடனும் இருக்க வேண்டும். தொடர்ந்த முன்னேற்றத்திற்கு ஏதுவாக அவ்வப்பொழுது பின்னூட்டம் (Feedback) பெறப்பட வேண்டும்.
ஒருமுக கவனிப்பு தீவிரமாக இருத்தல் வேண்டும். செயலும் நமது விழிப்புணர்வும் ஒன்றாக இணைய வேண்டும், காலமானது வேறுபடும் ஒன்று. திடீரென்று ஒரு நிமிடத்தில் எல்லாம் கிடைத்தது போல இருக்கும்.
அனுபவங்களுக்குத் தக்க பெரும் பரிசுகள் கிடைக்கும். செய்யப்பட்ட முயற்சி சரிதான் என்பது தெரியவரும். எதிரே இருக்கும் சவாலுக்கும் நமக்குள்ள திறமைக்கும் உள்ள சமநிலை வளர்ச்சியைப் பற்றி நன்கு தீர்மானித்து அதை அடைய வேண்டும். கீழ்க்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம்.
இந்தச் செயலால் எனக்கு என்ன முன்னேற்றம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்?
இந்தச் செயலைச் செய்யும் போது அது பிரமாதமாக செய்யப்படும் என்பதை எப்படி நான் அறிவேன்? இப்போது எனக்கு இருக்கும் திறமைகளின் படி இந்தச் செயல் எப்படிப்பட்ட சவால் கொண்டதாக இருக்கும்?
இப்படி யோசித்து நமது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டால் “ஃப்ளோ” என்ற மனோ ஒட்டம் என்ற நிலையை அடைவோம்.
பிறகென்ன வெற்றி தான்!
இதைப் பற்றி விரிவாக மிஹாய் சிக்செண்ட்மிஹாய் யூடியூபில் ‘FLOW, THE SECRED TO HAPPINESS’ என்று நிகழ்த்திய உரை கூட இருக்கிறது, காணொளியாகக் காணலாம்!
வெற்றி நம் கையில்!