

Rich Habits:
பொதுவாக பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. பழைய படங்களில் வில்லன்களை எல்லாம் பணக்காரர்களாகவே பார்த்து, அது போன்ற எண்ணங்கள் மனதில் பதிந்து விட்டது. அவர்கள் பணத்தினை முறைகேடான வழியில் சம்பாதித்து இருப்பார்கள் அதை தவறான வழியிலே செலவு செய்வார்கள் என்ற எண்ணமும் எல்லோருக்கும் இருக்கும். பணக்காரர்கள் ஆடம்பரக் கார்கள் வைத்திருப்பார்கள் , ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்வார்கள், வீண் செலவுகள் செய்பவர்கள் என்று நாம் நினைத்திருப்போம். இதுவும் ஒரு உளவியல் தாக்கம் தான்.
தாமஸ் ஜே ஸ்டேன்லி என்ற எழுத்தாளர் ஏராளமான பணக்காரர்களை சந்தித்து , அவர்களின் வாழ்க்கை முறை , திறமை, பணம் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து "தி மில்லினர் மைண்ட் செட் " என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் பணக்காரர்கள் பற்றிய உங்களது எண்ணங்களை முற்றிலும் மாற்றிவிடும் , அது மட்டுமல்லாது , உங்களை மில்லியனராக மாற்ற உத்வேகமாகவும் இருக்கும்.
சமூகத் திறன் :
ஒருவர் தொழிலில் பெருமளவில் சாதிக்க ,அவர்களின் படிப்பு சார்ந்த ஆழ்ந்த நுண்ணறிவு முக்கியம் அல்ல , சமூகம் சார்ந்து அவர்கள் சிந்திக்கும் திறன் தான் , வியாபாரத்திற்கு முக்கிய படியாக இருக்கும். அவர்களின் புத்திசாலித்தனம் என்பது நிறைய படித்து இருப்பதை விட , அவ்வாறு படித்தவர்களிடம் எப்படி வேலை வாங்குவது என்பதை அறிந்து இருப்பது தான்.
நுணுக்கமாக வேலை வாங்குவதும், திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்வதும் , தேவையற்ற சிலரை அவர்களாகவே வெளியேற வைப்பதும் கூட ஒரு பெரிய திறமை தான். மேலும் சமூகத்தில் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வைத்திருப்பது தான் ஒரு தொழிலதிபருக்கு அவசியம். வாடிக்கையாளருக்கு தகுந்த மாதிரி பேசுவதும் அவர்களைப் ஈர்ப்பது தான் சமூகத்திறன் .
முதலீடு செய்வது:
முதலீடு என்றாலே நமக்கு தெரிந்தது எல்லாம் பங்குச் சந்தையும் , SIP யும், கிரிப்டோவும் தான். ஆனால் , பெரிய முதலாளிகள் பலரும் பங்குச் சந்தையில் முழ்கி கிடப்பது இல்லை. முதலீட்டை எல்லாம் விளம்பரங்களை நம்பி அவர்கள் செலவு செய்வதும் இல்லை. எப்போதும் அவர்களுக்கு தெரிந்த தொழில்களில் தான் அதிக முதலீடுகள் செய்கிறார்கள். உதாரணமாக இன்றும் மஹிந்திரா நிறுவனமும் , டாடாவும் தங்களின் பாரம்பரிய ஆட்டோமொபைல் தொழிலை தான் முதன்மையான முதலீடாக கருதுகின்றனர்.
பயமயற்ற தன்மை:
வெற்றியின் பெரிய தடையே பயம் தான். ஓரு தொழிலை தொடங்கும் முன் பின் விளைவுகளை யோசிப்பது சரி என்றாலும் , தொழிலில் இறங்க பயந்துக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது. ஒரு அசாத்திய துணிச்சல் , தன்னம்பிக்கை , சமூகத்தின் எண்ண ஓட்டம் ஆகியவற்றை அறிந்து முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பயம் இல்லாவிட்டால் கூட அவர்கள் குருட்டுத்தனமாக எந்த தொழிலிலும் இறங்குவது இல்லை. நன்றாக ஆராய்ந்து புதிய தொழிலை தொடங்குகிறார்கள் , ஒருவேளை அந்த தொழிலில் தோற்றால் கூட , அதிலிருந்து எளிதில் வெளியேறி வேறு தொழிலில் அந்த நஷ்டத்தை சமாளித்து விடுவார்கள்.
மில்லினியர்களின் வாழ்க்கை முறை:
நாம் சினிமாவில் பார்ப்பது போல எல்லா பணக்காரர்களும் ரோல்ஸ்ராய்ஸ் , பெண்ட்லி போன்ற கார்களில் ஊர்வலம் நடத்துவது இல்லை. அவர்களிடம் எல்லா உயர்ந்த கார்கள் இருந்தாலும் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஒரு அபார்ட்மெண்டில் உள்ள வீட்டில் குடியிருந்தார் , அவர் மிகவும் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தியது இல்லை .
சோஹோ நிறுவன தலைவர் ஶ்ரீதர் வேம்பு சாதாரண கிராமப்புற வீட்டில் தங்கி , தினமும் சைக்கிளில் உள்ளூரில் பயணம் செய்கிறார். இப்படி தான் இருக்க வேண்டும் என்ற சினிமா கோட்பாடுகளில் சிக்காமல் , தங்கள் விருப்பம் போல வாழ்கிறார்கள் , ஆடம்பரத்தை குறைத்து அதையும் முதலீடாக மாற்றுகின்றனர்.