

தூங்கா நகரம் மதுரை. கெளரிபாளையத்தின் இடப்பக்கம் பின்னால் தான் உள்ளது செல்லூர். பரம ஏழைகள் வாழும் இடம். கைத்தறி மற்றும் நெசவு தொழிலாளர்கள் வாழும் பகுதி.
சில கூலி தொழிலாளிகளும் இருக்கும் இடம்.
சில ஆண்கள் தள்ளு வண்டி வியாபாரம் செய்வார்கள்.
பெண்கள் காலையிலேயே வேலைக்கு கிளம்பி விடுவார்கள். எல்லோருக்கும் பத்து பாத்திரம் கழுவுவதே வேலை.
பின்னர் வீட்டை கூட்டி, மெழுக வேண்டும்.
இந்த செல்லூரில் பள்ளி சென்று படிக்கும் சிறுவர்களில் ஒருவன் தான் மிக புத்திசாலி. அவன் பெயர் காத்தவராயன். இந்த வருடம் 10வது பொது தேர்வு. அவனுக்கு படிப்பில் மிக அதிகமாக ஆர்வம். விடாமல் படிக்க வேண்டும் என்பதே அவன் ஆசை, பிரியம்.
அம்மா நாகம்மாள் 6 வீடுகளில் பாத்திரம் கழுவுபவர். காலை சென்றால் மாலை 6 மணிக்கு தான் வருவார். பின்னர் சமையல் செய்வார். வீட்டில் ஒரே முறை தான் சமையல். இரவு மட்டுமே சாப்பாடு. சோறு அதிகம் வைத்து விடுவார். பின் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார். காலை மற்றும் மதியம் காத்தவராயனுக்கும், அப்பாவிற்கும் நீர் சோறு தான்.
என்ன? 21ம் நூற்றாண்டில் இப்படியும் வாழ்கிறார்களா… ? என சந்தேகம் இருந்தால் மதுரை மீனாட்சியை பார்க்கும் முன் செல்லூர் பார்க்க வேண்டும். கழிவறை இல்லாத ஒலை குடிசைகள். மின்சாரம் கூட எல்லா வீட்டிலும் இல்லை.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்தன. காத்தவராயன் 72% மதிப்பெண் பெற்று சாதனை செய்தார். நல்ல சோறு கூட இல்லாமல் அவன் சாதித்தது பெரிய விஷயம்.
நாகம்மாளும், கணவரும் அவனை வேலைக்கு போக நிர்பந்தம் செய்தார்கள். ஆனால் காத்தவராயன் சம்மதிக்கவே இல்லை. தொடர்ந்து +2 படிக்க வேண்டும் என்று நினைத்தான்.
2 கி.மீட்டர் தூரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இருந்தது.
அவன் ஆசிரியர், காத்தவராயன் வீட்டிற்கு வந்து அம்மா, அப்பாவிடம் பேசினார். "அவன் வாழ்க்கை முழுக்க முழுக்க நீர் சோறு தான் சாப்பிட வேண்டுமா… ?" எனக் கேட்டார்.
"+2 முடித்து 3 அல்லது 4 வருடத்தில் டிகிரி முடித்தால் நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் பட்ட கஷ்டங்களை அவன் மீது திணிக்காதீர்கள். அவன் படிக்கட்டும். நல்ல எதிர்காலம் இருக்கும்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
நாகம்மாள் மற்றும் அவரது கணவர் இருவரும் காத்தவராயனை படிக்க வைக்க முடிவு எடுத்தார்கள்.
காத்தவராயனுக்கு ஒரே குஷி. சந்தோஷம். ஆம். அவன் நன்கு படித்தார். கடினமான உழைப்பு. காலையில் 4 மணிக்கே எழுந்து படிப்பார்.
இரவு 10.30 வரை படிப்பார்.
இரண்டு ஆண்டுகள் 2 தினங்கள் போல ஓடின.
+2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காத்தவராயன் 93% மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார்.
நாகம்மாள் மற்றும் அவரது கணவர் சந்தோஷம் அடைந்தனர்.
அவருக்கு இட ஒதுக்கீடு இருந்தது. நல்ல கல்லூரியில் AI செயற்கை நுண்ணறிவு பாடம் தேர்ந்து எடுத்து படித்தார்.
4 வருடங்கள் கடினமான உழைப்பு. நன்கு பயிற்சி செய்தார். அவர் கவனம் வேறு எதிலும் இல்லை.
முயற்சி திருவினையாக்கும்.
டிகிரியில் மாநிலத்தில் முதல் மாணவராக வந்தார். எல்லோரும் அவரை பாராட்டினார்கள்.
இனி என்ன… ?
வேலை தான்.
ஒரு அமெரிக்க செயற்கை நுண்ணறிவு அமைப்பு இவருக்கு மாதம் ₹2 லட்சம் சம்பளமாக கொடுக்க முன் வந்தது.
நாகம்மாள் மற்றும் அவரது கணவர் ஷாக் அடித்தது போல் ஆனார்கள். ₹2 லட்சம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்தாலும் கிடைக்காதே.
காத்தவராயன் தனது நண்பர்கள் மற்றும் அம்மா, அப்பாவிடம் சொல்லி கொண்டு அமெரிக்கா கிளம்பினார்.
"அம்மா.. நான் மாதாமாதம் உங்களுக்கு ₹50,000 அனுப்புகிறேன். நீங்கள் வங்கி கணக்கு ஒன்று துவங்கி பணத்தை அதில் போடுங்கள்" என சொன்னார்.
நாகம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். அப்பாவுக்கும் மகிழ்ச்சி. தனது மகன் மூலம் தமக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போகிறது என்று சந்தோஷம் அடைந்தார்.
காத்தவராயன் புறப்பட்டார்..
இப்போது
விமானத்தில் பறந்து
கொண்டு இருக்கிறார்…!