

வாழ்க்கையில் மனம் போனபடி வாழ்ந்தவன் ஒன்று ஒழுக்க மற்று வாழ்ந்து, வீழ்ந்து போவான். அல்லது தன்னிலை அற்று, வாழ்வியல் நெறி பிறழ் தழுவி, ஒன்றும் இல்லாமல் வீணாக போவான். ஆகவே வாழ்வில் மனம் போற்றி வாழ்வது மிக அவசியம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
நம்முடைய உடல், அதற்கு எதெல்லாம் தேவையோ, அவற்றை தானே பிரித்து எடுத்துக்கொள்கிறது. ஆனால் மனம் மட்டும் அந்த வழியில் பயணிப்பது இல்லை. அதற்கு காரணம் நம் சிந்தனையில் ஏற்படும் தடுமாற்றமே. அதனால், எப்போதும் சிந்தனையை தெளிவாக வைத்து இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் எப்படி எல்லாமோ வாழ வேண்டும் என்ற கற்பனை உலகத்தில் மிதந்து, ஆசை பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போகிறோம். ஒரு கட்டத்தில் நம்மை எப்படியோ வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது வாழ்க்கை. இதற்கு நாம் மனதை மயக்கத்தில் இருக்க வைப்பது தான் காரணம். மனதை அடக்கி ஆளுவோம். வாழ்வை வெல்வோம்.
நாம் ஒன்றைப் பற்றி சிந்தித்து, அதை அடைய வேண்டுமென முயற்சி செய்யும் மனதில் உறுதிவேண்டும். அதுவே ஒரு நாள் கைகூடி வெற்றிக்கு வித்திடும். இலக்கே இல்லாமல் நம்முடைய மனதின் பயணம், துடுப்பே இல்லாத படகாகும் என்பதை புரிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் மனம் கோணாமல் வாழ்வது என்பது, ஒரு சிலருக்கே வாய்க்கும். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் இடத்தில் மனதோடு மனிதம் கலந்து இருக்கும். அதோடு சகித்துக் கொள்ளும் தன்மை மாறாமல் இருக்கும். மனதில் மனிதம் மலரட்டும். வாழும் வாழ்க்கை சிறக்கட்டும்.
வாழ்க்கையில் மனதோடு அன்பு கலந்து இருந்தால், பகைமை வேரறுத்து போகும். எதிரிக்கும் எதிர்வினை ஆற்றாமல், அவர்களிடம் இருந்து விலகிச் செல்லும். யாரையும் வீழ்த்தி, வென்றெடுக்கும் எண்ணம் தோன்றாமல், நல்வினை தேடி சிறக்கும். இயல்பாகவே மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வளரும். மற்றவர்கள் வலிகளுக்கு மருந்து போட்டு ஆற்றும். மனதில் அரும்புகள் அன்பாக மலரட்டும். எல்லோரின் மனங்களிலும் வாசம் செய்யட்டும்.
வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது ஒரு மனநோய். அது எப்போதும் நம்மிடம் இருக்கக் கூடாது. தடுமாறும் மனம் இருந்தால், சாதனைகள் படைக்கும் ஆற்றல் நம்மிடம் இருந்து விலகிப்போகும். நல்லொழுக்க நாளங்கள் சிதைந்து போகும். கரைகள் உடைந்த ஆறாக பயனற்று போகும். எனவே வாழ்க்கையில் தடுமாற்றத்தை தவிர்த்து வாழ்வது மிக அவசியம்.
வாழ்க்கையில் நமக்கு ஏமாற்றங்கள் வருவதற்கு நம்முடைய மனம் தான் முக்கிய காரணம். அது சிலநேரங்கள் மனம் ஒரு குரங்கு பழமொழிக்கு ஏற்ப ஒரிடத்தில் நிலைத்து நிற்க்காமல், இங்கும் அங்கும் அலை பாய்வதுதான் காரணம். மனதை ஒருநிலை படுத்துவோம். ஏமாற்றங்கள் தவிர்த்து ஏற்றங்கள் காண்போம்.
ஐயன் வள்ளுவன் குறலுக்கு ஏற்ப 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்' என்பது போல், வாழ்க்கை அமைத்துக் கொள்ளவோம். அதாவது நாம் செய்யும் செயலை செய்யத் துணிந்தால், அந்தச் செயலை முடிக்கும் வரை மன உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் இருந்து, நாம் எண்ணியபடியே வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!