
நமக்கெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது ஒரு அறிவுரை சொன்னால் உங்களுக்கு என்ன சொல்லிவிட்டு போய்விடுவீர்கள் அதைக் கேட்பதற்கு நாங்கள் என்ன முட்டாளா என்று ஒரு தெனாவட்டுடன் அலட்சியமாக பார்த்துவிட்டு செல்வதுண்டு.
ஆனால் தகுந்த நேரத்தில், தகுந்த விதத்தில் சொல்லப்படும் அறிவுரைக்கு தகுந்த மதிப்பும் இருக்கவே செய்கிறது.
ரமேஷ் படித்து முடித்தபின் எதை செய்வது என்ற குழப்பத்தில் இருந்தான். பெரிய உறவுக்கூட்டம் ஆளாளுக்கு அட்வைஸ் தந்தது வேறு அவன் குழப்பத்துக்கு காரணம்.
ஊருக்கு வந்த ஒரு ஞானியை சந்தித்த அவன் "ஐயா என் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று புரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அறிவுரை சொல்கிறார்கள். நான் எதை கடைபிடிப்பது என்பது குழப்பமாக இருக்கிறது. அறிவுரையைக்கேட்டால் வீணாகி விடுவேன் என்ற பயம் இருந்தாலும் கேட்காமல் போனால் நல்ல விஷயத்தை இழந்து விடுவோமோ என்ற குழப்பமும் வருகிறது நான் என்ன செய்ய?" கேட்டான்.
அந்த ஞானி உடனே சொன்னார் " நான் அடுத்தவர் சொன்னார் என்பதற்காக காடு மேடு சுற்றவில்லை என்னுடைய உள்மனம் தேடல் இருந்தது நான் காடு காடாக சுற்றினேன். தேடி அலைந்தேன். குருவாக ஒருவரை ஏற்று அவர் அறிவுரைப்படி ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டே நின்று ஞானியாக உன் முன்னால் நிற்கிறேன்.
இதில் அனைவரின் அறிவுரையும் கேட்டு அதன்படி நடப்பது என்பது இயலாத ஒன்று . ஆனால் அதே சமயம் உன்னுடைய வாழ்க்கைக்கு அவர்கள் சொல்லும் அறிவுரை ஏற்றதாக இருந்தால் நிச்சயம் கடைப்பிடி. ஏனெனில் உன் குழப்பமான மனது தெளிவாக மாறுவதற்கான ஒரு வாய்ப்பாக அந்த அறிவுரை அமையும். எதையும் அனாவசியம் என்று தள்ளித் தவிப்பதை விட அவசியமானது என்றால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. நான் என் குருவின் அறிவுரை ஏற்றதுபோல் என்றார்.
அந்த இளைஞனின் மனம் இப்போது சற்று குழப்பத்திலிருந்து வெளிவந்தது. ஞானி அறிவுசார் பதில் அவனுக்குத் தெளிவு தந்தது. அத்துடன் அவன் பெரியப்பா ஒருவர் அவன் திறமை அறிந்து முன்னேறுவதற்கான வழி ஒன்றை சொல்லியிருந்தார். அதை அப்படியே கடைபிடிக்கலாம் என்று அவன் தீர்மானித்தான்.
சிலரோ அறிவுரை சொல்பவர்களை ஏற்கவே மாட்டார்கள். அறிவுரை சொல்பவர்களை எதிரிகளாக பார்க்கும் மனப்பான்மையை விட்டால்தான் அவர்கள் சொல்வது புரியும்.
நமக்கு அறிவுரை சொல்பவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று சொல்வதும் மிகத்தவறு. ஏனெனில் பாதிக்கப்பட்டவர் சொல்லும் அறிவுரைகளில் நிறைய அனுபவ உண்மைகள் இருக்கும். தீ சுடும் என்று தாய் தன் குழந்தைக்கு சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளாத குழந்தை தீயைத்தொட்டு காயம்பட்ட பின்தான் தாயின் அறிவுரையை கேட்கும்.
அவசியமற்ற அறிவுரைகளை விடுத்து அவசியமான அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளூங்கள். ஆனால் அந்த அறிவுரை சரியானதுதானா என்று ஆராய்ந்து பார்ப்பதில்தான் உங்கள் அறிவுக்கு வேலை இருக்கிறது. சரியான அறிவுரையைப் பின்பற்றி மகிழ்வான வெற்றி பெறுவோம்.