

வாழ்க்கையில் மன அழுத்தம் பற்றி நின்றுவிட்டால், முன்னேற்ற கதவுகள் மூடிவிடும். மனம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உங்களுக்குள் உறவாடும். வாழ்க்கையில் முதலில் நாம் தவிர்க்கவேண்டியது மன அழுத்தம் என்பதை உணர்ந்து அதனிடமிருந்து விடுபடுங்கள்!
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் அமைதியோடு போராடினால், வெற்றி நிச்சயம். மன அழுத்தத்துடன் செயல் ஆற்றினால் என்றும் அதன் பிடி இறுகுமே தவிர, நாம் அடையும் இலக்கை எட்ட முடியாது. என்றுமே அமைதியாக இருக்க பழகுங்கள்.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டவேண்டாம். தயக்கம் எனும் புகை மூட்டுக்கள் சூழ்ந்து கொண்டால், தடங்கள் தடுமாற்றம் அடையும். எனவே எடுக்கும் முடிவுகளை தயங்காமல் எடுங்கள். உங்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
வாழ்க்கையில் தனக்கான அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஆனால் தனக்கு முன்னாலும் பின்னாலும் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ யாராவது பேசினாலும் அதனை கடந்து, நீங்கள், உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள். உங்கள் முன்னால் வெற்றி நிச்சயம்.
வாழ்க்கையில் எப்போதும் இயல்பாக இருக்குப் பழகுங்கள். அப்போது தான் உங்களுக்குகான தனித்துவம் மிக்க தனித்தன்மை வெளிப்படும். உங்கள் பார்வையும் அதனை தழுவியே இருந்தால், இன்னும் கூடுதல் பலம்.
வாழ்க்கையில் சிலசமயம் தனிமை கிடைக்கும்போது, அதனை நீங்கள் மெளனமாக கடந்து செல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை. அப்போது யோசித்துப்பாருங்கள். கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்கள் தெரியும். நீங்கள் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் புரியும். தனிமை என்பது, தன்னையே உரசிப் பார்த்துகொள்ள உதவும் நண்பன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் சொன்னது போல் எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது ஒரே மாதிரியானதே.
பிறப்பால் அனைவரும் சமம். இதை உணர்ந்த மனித மனங்களில் என்றும் ஏற்றத் தாழ்வு என்பது வராது எனில், ஒன்றாகும் மனிதகுலம். பன்மடங்கு உயர்வாகும் மனிதவளம். இதில் தெளிவாக இருப்போம். வாழும் காலம் மனிதனாக இணைந்து வாழ்ந்தால் மனங்கள் சிறக்கும், மன அழுத்தம் விலகும் என்பதை உணர்வோம்.
வாழ்க்கையில் எதிர்காலம் என்பதை என்னவென்று அறியாமல் தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போகிறார்கள். நன்றாக புரிந்து கொள்ள முயன்றால் விடை தானாக கிடைக்கும். அது வேறொன்றும் இல்லை. நிகழ்கால சரியான திட்டமிடலே எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம். இது புரிந்துவிட்டால் வரும் காலம் உங்கள் கைகளில்.
வாழ்க்கையில் முதலில் எதிலும் அகலக் கால் வைப்பதைத் தவிருங்கள். நம் கையில் இருப்பை அறிந்து அதற்கேற்ப நீங்கள் செயல் ஆற்றுங்கள். மனதில் பட்டதை பலமுறை யோசியுங்கள். ஒருபோதும் அடுத்தவரிடம் எதிர்பார்ப்பு தவிருங்கள். இவை அனைத்தும் உங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு தேவையான காரணிகள்.
வாழ்க்கையில் மனதில் கவலைகளை ஏற்றாதீர்கள். தன்னை மீறி நடக்கும் நிகழ்வுகளை கண்டு அஞ்சாமல் இருக்கப்பாருங்கள். ஒருவருடைய வாழ்க்கையில் உழைப்பு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்லும். அதை தக்க வைத்துக்கொள்ள, சரியான நேரத்தில் தூக்கம் போடுங்கள். இவ்விரண்டும் இருக்கும் இடத்தில் நிம்மதி நிலைத்து நிற்கும். ஒழுக்கமற்ற செயல்களுக்கு நிரந்தரத் தடை போட்டு வாழுங்கள். மன அழுத்தம் இன்றி இனிதே நிறைவுற்று வாழ்க்கையை வெல்லுங்கள்!