
கோடை விடுமுறை ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரமோ, ஒரு மாதமோ உறவினர் வீட்டிற்குப் போகணும்ன்னு பிளான் போட்டாச்சா? அங்கு பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் இருந்தால் பரீட்சை முடிந்த பின் விஜயம் செய்யுங்கள். ஒரு வாரம் முன்னரே போகும் தேதியையும், கிளம்பும் நாளையும் தகவல் சொல்லிவிடுங்கள். அவர்கள் தயாராகவும், அவர்களுடைய பயணங்களையும் திட்டமிடவும் வசதியாக இருக்கும்.
சரி. பயணம் முடிவாயிருச்சு. கையை வீசிக்கொண்டு வீட்டிற்குள் நுழைவது ரசிக்காது. உங்க ஊரு ஸ்பெஷல், சாப்பிடுற ஐட்டம், நினைவுப் பொருட்களை வாங்கிச்சென்று, மகிழச் செய்யுங்கள்.
அங்கு இருப்பது சில தினங்களே. உங்கள் வீட்டு வசதிகளை எதிர்பார்ப்பது சரியல்ல. சிரமங்களை ஒதுக்கிவைத்து, ஏற்றுக்கொள்ளுங்கள். உணவு விஷயத்திலும் கடைபிடியுங்கள்.
கெஸ்ட்டாக வந்திருக்கோம். எதற்கு வேலை செய்யணும்ன்னு நெனச்சா நல்லாவா இருக்கு. கிச்சனில் ஒத்தாசை செய்தால் கூடப் போதும். ஹேப்பியாயிடுவாங்க. விருந்தோம்பலும் மணக்கும்.
வெளியிடங்களுக்கு உங்களை அழைத்துப் போகும்போது செலவுகளில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.
உணவு விஷயத்தில் கண்டிப்பாக தேவையில்லை நெகட்டிவ் கமெண்ட்ஸ். சமையலில் ஒவ்வொருவருக்கும் தனிப்பக்குவம் இருக்கும். அதை விமர்சிப்பது அழகல்ல. ருசி முன்னே, பின்னே இருந்தாலும் ரசித்து சாப்பிடுங்கள்.
உங்கள் பொருட்களை அங்கங்கே இரைந்து கிடக்க விடாதீர்கள். உடனுக்குடன் பெட்டியில் வைத்துவிடுங்கள். விட்டுக்கொடுங்கள்... எதற்கு? மொபைலை சார்ஜில் போடுவதில். சார்ஜில் இருக்கும் போன் வயரை கழற்றிவிட்டு உங்கள் போனை சார்ஜில் போடுவது நாகரிகமல்ல. பவர் பேங்க்கை எடுத்துச் செல்லுங்களேன். அவசரத்துக்குப் பயன்படும்.
ஸ்கூல் பீஸ், யூனிபார்ம் செலவுகளுக்குத் தயாராக வேண்டிய குடும்பங்களுக்கு விசிட் செய்கிறீர்களா? அவர்களின் பொருளாதாரச் சிரமத்தை நாசுக்காக குறைக்கலாம். காய்கறிகள், எக்ஸ்ட்ரா பால் போன்ற சின்னச் சின்ன செலவுகளை விரும்பி ஏற்றுக்கொண்டாலே போதும். விருந்தோம்பல் இனிக்கும்.
உங்களைச் சந்தோசப்படுத்த, கோயில், மற்றும் பிரசித்தியான இடங்களுக்கு அழைத்துச் சென்றால், செலவுகளில் உங்கள் பங்கும் இருக்கட்டும். அவர்கள் விரும்பவில்லையா? டோன்ட் ஒர்ரி. ஹோட்டல் பில், நுழைவுக் கட்டணங்களுக்கு உங்களுடைய பர்ஸைத் திறக்கலாமே.
எக்காரணம் கொண்டும் குடும்பப் பிர்ச்னைகளில் நுழையாதீர்கள். உங்களிடம் அவர்கள் பகிர்ந்தாலும் கேட்டுக்கொள்ளுங்கள். தேவையென்றால் ஆறுதல் சொல்லுங்கள். முடிந்தவரை மௌனமே உத்தமம். அவர்கள் மனதில் நீங்கள் உயர்வீர்கள்.
இரவில், நெடுநேரம் லைட்டை எரியவிட்டு சப்தமாக மொபைலை பயன்படுத்தாமல் இருக்கலாமே. வீட்டில் உள்ள முதியோர்களிடமும், அப்பப்போ சில மணித்துளிகளைச் செலவிட்டால் சிறப்பு.
கிளம்பும்போது, உங்கள் உடைமைகளை சரி பார்த்து பொறுப்பாக எடுத்துக்கொள்ளுங்கள். கவனமின்றி விட்டுச் சென்று, அவர்களுக்கு டென்ஷன் ஏத்தாதீர்கள். கிளம்பியாச்சா... குடும்பத்தினர்
ஒவ்வொருவரிடமும், விருந்தோம்பலின் சிறப்பைக் கூறி, மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து படியிறங்க வேண்டும்.
இல்லம் சென்றதும், மறக்காமல் அழைத்து நன்றி சொல்ல வேண்டும். மெசேஜைத் தவிர்க்கவும். பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.