

உயரம் தாண்டுவதற்கு, நீண்ட தூரம் ஓடிவந்துதான் தாண்ட வேண்டும். அதைப்போல்தான் வாழ்க்கை. சோதனை காலத்தை தாண்டிதான் சாதனை சிகரம் தொடமுடியும். அதற்கு உங்கள் மனம் ஆழ்கடல் அமைதிகொள்ள வேண்டும். அலைகள் போல் மனதை அலைய விடக்கூடாது. சோர்வும் விரக்தியும் அடையாமல், மெளனமாக செயலில் நம்பிக்கை வைத்து, தடங்கள் பதியும்போது, மன அழுத்தம் கொள்ளாமல், சாதனைகள் புரிய முயற்சி செய்ய வேண்டும்.
சோதனைகள் ஏற்படும்போது, தடம் மாறும் எண்ணம் சீண்டிப் பார்க்கும். அந்த நேரம் கவனமாக இருக்க வேண்டும். மனதில் ஒழுக்கம் மீறும் எந்த செயலுக்கும் இடம் தரக்கூடாது. இல்லை யென்றால் தூண்டிலில் விழுந்த மீன் போல், உங்கள் வாழ்க்கையும் ஆகிவிடும். எனவே எந்தநிலை வந்தாலும், தன்நிலை உணர்ந்து வேறு நிலை மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் எண்ணங்களை செயல்படுத்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சிறந்த வழியில் அந்த எண்ணங்களை கொண்டு செல்கிறோமா என்பதை அறிந்து புரிந்து, பின் செயலாற்றும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்னைகள் வராமல் இருக்காது என்பதை உணருங்கள். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா என்று மனதின் குரலாக ஒலித்து, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வெல்லும் வழியில் பயணிக்க முயற்சி செய்யுங்கள். தன் சூழ்நிலை அறிந்த மனிதன் மட்டும் தான், எதையும் தாங்கும் சக்தியோடு, வீறுநடை போடுவான் என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இயக்கப்படும் ரோபோக்கள் அல்ல, உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள். அதனால் எவரிடத்திலும், எந்த இடத்திலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசாமல், சாதுர்யமாக பேசவும், சகிப்புத்தன்மையோடு இருக்கவும் மனதை பக்குவமாக வைத்திருக்கும் கலையை கற்று, முன்னேறும் வழி சிந்தித்தால், சோதனையும், வேதனையும் மெழுகுவர்த்தியாக கரைந்து, சாதனை படைக்கும் ஆற்றல் திறன் வெளிச்சமாக வெளிப்பட்டு, முன்னேறும் சக்திகள் நம்மில் ஊடுருவும்.
களங்கப்படும் மனமும் குணமும் ஒருநாள் நல்வழியில் பயணிக்கும். எண்ணமும் செயலும் தடம் மாறினால், புயலில் சிக்கிய காற்றுப் போல், சோதனையும் வேதனையும் சுழன்று சுழன்று அடித்து, வாழ்க்கையே உருக்குலையச் செய்துவிடும். என்வே செய்த தவறுகளை தவிர்த்து, சாதனைப் படைக்கும் வல்லமை மனதில் ஏற்றி, வாழ்க்கை அகமும் புறமும் சிறக்க முயன்று, அதில் வெற்றி மகுடம் சூடுங்கள்.
அதிவேகமாக பயணிக்கும் காலம் இது. நீங்களும் அதற்கேற்ப மாறும் கலையை கற்று சாதனை நிகழ்த்துங்கள். இல்லையேல், சுயநலமும் சூழ்ச்சியும் நிறைந்த இவ்வுலகம் உங்களை வீழ்த்தி வேடிக்கை பார்க்கும்.
சீராக ஓடும் நதியும் வெள்ளத்தில் கரைகள் உடைந்து, பாதை மாறி பாதகம் செய்கிறது. தென்றலாய் வீசும் காற்றும் புயலாய் மாறி சேதம் விளைவிக்கிறது. மனித வாழ்வும் அப்படித்தான். நிலை மாறினால், நல்லதைச் தவிர, வேறு எதுவும் நடக்கும். இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். மனித வாழ்வியல் படித்து, நெறிமுறையோடு வாழ்ந்தால், சோதனைகள் விலகும். சாதனைகள் உங்களை உயர்த்தும்!