

பலருக்கும் தோல்வியைத் தாங்கும் சக்தி இருப்பதில்லை. வெற்றி வந்தால் ஆனந்தக் கூத்தாடுபவர்கள் தோல்வி வந்தால் மட்டும் உலகமே இருண்டு விட்டது போல் முகத்தை தொங்க விட்டு ஒளிந்து கொள்வார்கள் .நம்மிடம் என்ன குறை? ஏன் எனக்கு வெற்றி கிட்ட வில்லை? என்றெல்லாம் சிந்தித்து புலம்பித் தள்ளுவார்கள். ஆனால் தோல்வியைக் கடந்து வந்தவர்களே இந்த உலகில் பெரும் சாதனையாளர்களாக இருந்துள்ளார்கள்.
ஆம் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் இந்திய விமானப்படையில் சேரும் முக்கியமான ஒரு வாய்ப்பை தவறவிட்டார். தெரியுமா? ஆனால் அந்தத் தோல்வியே அவருக்கு மாபெரும் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தது என்பதுதான் சிறப்பு.
விமானப்படையின் பைலட் தேர்வு நேர்காணலில் அவருக்கு ஒன்பதாவது இடம் கிடைத்தது. முதல் எட்டுப் பேர்களை மட்டுமே தேர்வு செய்ததால் இவர் நிராகரிக்கப் பட்டார். தனது கனவு நொறுங்கிப் போய்விட்டதே என்ற மிகுந்த விரக்தியில் கலாம் ரிஷிகேஷுக்கு சென்று கங்கைக் கரையில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டார். விமானம் ஓட்ட வேண்டும் என்ற தனது சிறு வயது இலட்சியம் வீணாகியதை அவரால் ஏற்க முடியவில்லை. அப்போது அவர் வாழ்க்கையே திசை திருப்பப் போகும் ஒரு மாபெரும் சம்பவம் அங்கு நடந்தது.
கலாம் கண்களில் மிக அழகான கட்டிடம் தெரிய அங்கு சென்றவர் பீடத்தில் அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சுவாமி சிவானந்தரின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.
சுவாமி சிவானந்தா அவர்கள் சோர்ந்திருந்த கலாமிடம் அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கனிவாக விசாரித்தார். கலாம் தான் பைலட் தேர்வில் நிராகரிக்கப் பட்டதை சொன்னார். அவரின் வருத்தத்தை பொறுமையாக கேட்டார் சுவாமிஜி.
பின் சொன்னார் “உங்கள் விதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும். ஒரு வாய்ப்புத் தட்டிப் போய்விட்டது என்றால் அதைவிட மேம்பட்டது உங்களுக்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை விதி உங்களுக்கு உணர்த்துகிறது.
உங்களுடைய இந்தச் தோல்வியை அலட்சியப்படுத்தி, அதை முழுவதும் மறந்து விடுங்கள். நான் உங்களுக்கு ஒரே ஒரு மந்திரம்தான் உபதேசிப்பேன் – “தோல்வியைத் தோற்கடி” என்பதே அது.
இதைக் கேட்ட கலாம் கிருஷ்ணரிடம் அர்ஜூனன் பெற்ற உபதேசம்போல சித்தம் தெளிந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.
விமானப்படையில் சேரும் வாய்ப்பு தனக்கு நழுவி விட்டது என்று புரிந்தது. தன் ஏமாற்றத்தை உதறிவிட்டு எழுந்தார். இருட்டிலிருந்து வெளியே வந்த மாதிரி ஒரு தன்னம்பிக்கை மனதில் ஏற்பட்டதை உணர்ந்தார்.
அறிவியல் துறையில் புகுந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ராணுவக்கணைகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சியில் பெரும் பங்குடன் ஈடுபட்டார். ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தலில் அவர் ஆற்றிய பங்களிப்பின் விளைவாக இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று பெயர் பெற்றார். அரசியலிலும் ஈடுபட்டு நம் நாட்டின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தார். மக்களுக்காக பல வழிகளில் அவர் பணியாற்றி மக்கள் மனங்களில் வெற்றியாளராக உயர்ந்து நிற்கிறார்.
நாமும் தோல்வி வந்தால் காரண காரியங்களை ஆராய்ந்து துவளாமல் அதை மறந்துவிட்டு, சுவாமி சிவானந்தா சொன்ன “தோல்வியை தோற்கடி“ என்ற மந்திரத்தை நினைவில் கொண்டு செயல்படுவோம்.