

வாழ்க்கையில் வேகம் பலப் பல தடைகளைப் போட்டு, காயப்படுத்தும். விவேகம் சிந்திக்கும் நேரத்தையும், செயலாற்றும் திறனையும் தந்து, பல ஏற்றங்களை காணச்செய்யும். உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், மேலே சொன்ன மகத்தான உனண்மையை உங்களால் உணரமுடியும். ஆகவே, வாழ்க்கையில் வேகம் அல்லது அதிவேகம் தவிர்த்து, விவேகத்துடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் முன்னேற அனுபவங்கள் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறோ, அதேபோல்தான் விவேகமும். உயரிய சிந்தனைகளை சிந்திக்கவும், யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும், நம் தகுதிக்கேற்ப செயல் வடிவத்தை செம்மை படுத்தவும், தவறுகளை தவிர்க்கவும் இப்படிப்பட்ட நல்ல வழித்தடங்களில் உங்களை இட்டுச் செல்லும் காரணிகளை, உங்கள் பார்வையில் பதிவிறக்கம் செய்ய உதவும்.
நீங்கள் செய்யும் செயலை வேகத்துடன் செயல்படுத்துவது ஆவலில் எழும் துடிப்பு, அதில் தவறில்லை. ஆனால், அது விவேகம் எனும் துடுப்பு போட்டு, இலக்கை அடையவேண்டும் என்று மனதில் உணருங்கள். ஐயன் வள்ளுவன் தன் குறலில், 'ஞாலம் கருதினுங் கைகூடுங்காலம் கருதி இடத்தாற் செயின்' எனும் குறலில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அதாவது மனதில் தோன்றுவதை உடனே வேகத்துடன் செய்ய தீர்வுகாண நினைக்காமல், தகுதியான காலத்தை விவேகத்துடன் அறிந்து, இடத்திற்கு ஏற்றார்போல் செயலாற்றினால், உலகத்தையே அடைய நினைத்தால் அதுவும் சாத்தியமே, இதுதான் அந்தக் குறலின் சாராம்சம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வரைமுறை இல்லாமல் சிந்தித்து, செயலாற்றும் தன்மை, விவேகம் எனும் பிரேக் இல்லாமல் பயணிப்பது, காட்டாற்று வெள்ளம்போல் இருக்கும். அது எந்தவிதமான நன்மையை விளைவிக்காமல், தீவினைகள் மட்டுமே ஆற்றும் என்பதை உணர்ந்து, கரைக்குள் ஓடும் நதியைப்போல் விவேகத்துடன் சிந்தித்து, செயலாற்றும் போதுதான் முழுமையான தீர்வு எட்டப்படும் என்று நினையுங்கள்.
அனைத்து உயிர்களும் வேகம் என்ற சொல்லில் பயணிக்கிறது. ஆனால், ஆறாவது அறிவில் விவேகத்துடன் பயணிக்கும் பண்பான எண்ணம் மனிதனுக்கு மட்டுமே உரியது என்பதை நன்கு உணர்ந்து, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற வீபரித செயலில் அல்லது முயற்சியில் ஈடுபட்டு, கால விரயம் செய்து, தோல்வியை தோள் சுமந்து, கவலை கடலில் விழாமல் இருக்க, விவேகம் எனும் கவசம் அணிந்து, அறிய வழியில் தளராது பயணித்து, வாழ்க்கை கடலில் வெற்றி என்னும் முத்தெடுங்கள்.
சிறு சிறு கடல் அலைகள் விவேகத்துக்கு உதாரணமாக திகழ்கிறது. தன்னை அண்டி வருபவர்களின் கால்களை வருடி, அவர்களின் மன அழுத்தத்தையும், கவலை களையும் விலக்கி, தென்றல் காற்றாய் இதம் அளிக்கிறது. ஆனால் ஆழிப்பேரலைகள் வேகத்துக்கு உதாரணமாக விளங்குகிறது. வேகத்துடன் எழும்போதே, அழிவின் கோர முகத்தோடு பயணித்து, இடர்களையும் இன்னல்களையும் தந்து, உயிர்களையும், உடமைகளையும் அழிக்கிறது.
வேகமும் விவேகமும் இருகரங்களாக ஒன்றிணைந்து செயலாற்றும் தன்மை உருவாக்குவோம். ஆறறிவு ஆற்றல் கொண்ட மனிதர்கள் என்பதை அறிந்து செயல் ஆற்றி, நாம், அதனை உள்வாங்கி, அதன் வழியில் பயணித்து, விழிப்புணர்வு எண்ணங்கள் கலந்து, வளமுடன் வாழ கற்றுக் கொண்டு, ஏற்றமும், வளமும் நிறைந்து வான் வரை உயர்ந்து வாழ்வோம்!