

'காலம் பொன்போன்றது; கடமை கண்போன்றது' என்ற நல்மொழியே உண்டு, காலம் பொன்னைவிட, பூமியைவிட மேலானது. பிறந்து கொண்டேயிருக்கும் காலத்தின் கணங்கள், விநாடிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
அடுத்தடுத்து காலங்கள் வந்து ஓய்ந்து மறைந்து விடுகின்றன காலத்தின் அருமை அறிந்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் காலம் பொன் போன்றது என்றால் பொன்னைத் திரும்ப வாங்கி விடலாம். காலம் உயிர் போன்றது. உயிர் போனால் திரும்ப பெறமுடியாது. எனவே உரிய காலத்தில் செய்யவேண்டியதை உடனே செய்யவேண்டும்.
பருவத்தே பயிர் செய் என்கிறார்கள் நம் முன்னோர். உரிய பருவத்தில் உழவு செய்து நாற்று நட்டு கதிர் முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். அதற்குரிய ஒவ்வொரு பருவத்திலும் காலத்திலும் என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.
உழுகிற நாளில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிறநாளில் அரிவாளைத் தூக்கிச் சென்றானாம்' என்று காலத்தின் அருமை தெரிந்த சிற்றூர் மக்கள் இப்படியொரு அருமையான மணிமொழியைக் கூறுவார்கள்!
காலம் கடந்தால் கடந்ததுதான். அதனைத் திரும்பவும் நிச்சயம் பெற முடியாது. எனவே அதற்குரிய முறையில் காலம் அறிந்து உடனுக்குடன் செயல் புரியவேண்டும்.
அதேசமயம் காலம் கடந்து விட்டதா? அதைப் பற்றியும் அதிகமாக வருத்தம் கொண்டு அதிலேயே மூழ்கிக் காலத்தை மேலும் வீணாக்கி விடக்கூடாது.
இதோ இப்போதிருக்கும் காலத்தை - இதோ வந்து கொண்டிருக்கும் காலத்தைப் பயனுடையதாக - சாதனைகளைக் குவிப்பதாக ஆக்க வேண்டும்.
காலத்தின் அருமை தெரிந்து அதனைச் சீராக செம்மையாகப் பயன்படுத்தி கடமையாற்றுபவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. காலம் வெகுவிரைவாகச் செல்வது போலத்தோன்றும்.
ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம் போதாதே என்று கூட அங்கலாய்த்துக் கொள்வார்கள் சிலர். அவர்கள்தான் உண்மையான உழைப்பாளர்கள். அவர்கள் கைகளில்தான் உயர்வு தென்றலாகத் தழுவும் -தேனாகப் பொழியும்!
காலத்தைக் கொன்றழிக்கும் கொடியநோய் சோம்பல். அது நம் பொன்னான காலங்களையெல்லாம் விழுங்கிவிடும். சாதனைகளைக் குவிக்க வேண்டிய நம்மை சோதனைக்குள்ளாக்கி வேதனைகளில் வீழ்த்துவதுதான் சோம்பல்.
இந்த உலகம் உருண்டுகொண்டே இருக்கிறது. கணநேரம் கூட சுற்றுவதை செயலாற்றுவதை நிறுத்தவில்லை. அப்படியிருக்க உலகத்தில் பிறந்த நாம் மட்டும் சுறுசுறுப்பாக செயலாற்றாமல் சோம்பித் திரிந்தால் வீட்டில் முடங்கிதான் கிடக்க வேண்டும்.
காலத்தின் அருமை உணர்ந்த ஜான்சன் என்பவர் கூறுகிறார். மிக விரைவில் பறந்து செல்லும் காலத்தைப் பற்று, அது உன்னை விட்டு அகலும்போதே பயன்தரும் வண்ணம் பயன்படுத்து. வாழ்க்கையோ மிகக் குறுகிய கோடைக்காலம். அதில் மலர்ந்த மலர்தான் மனிதன். எனவே நீ காலத்தை நன்றாகப் பயன்படுத்து' என்கிறார்.
உயிரிலும் மேலான காலத்தின் அருமையை உணர்ந்து வாழ்வில் உயர்வோமாக!