
தோல்வி வெற்றிக்கான முதல் படி என்பார்கள். “தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நிலைக்கலாமா” என்கிறது ஒரு திரைக் கவிதை. நாம் எடுக்கும் முயற்சி முதலில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றாலும், தொடர்ந்து முன்னேறுவதற்குத் தேவை, பொறுமை மற்றும் விடாமுயற்சி. சாதனையாளர்கள் பலர், வெற்றி பெற்றதன் காரணம் தோல்வியால் துவண்டுவிடாமல், அவர்கள் தங்கள் இலக்கைக் குறிவைத்து மனம் தளராமல் முயற்சி செய்ததுதான். அவ்வாறு சாதனை படைத்த சிலரின் வாழ்க்கை, நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். சில சாதனையாளர்களைப் பார்ப்போம்.
தாமஸ் ஆல்வா எடிசன்: மின்சார விளக்கைக் கண்டுபிடித்த எடிசன் அதீத பொறுமைசாலி என்று சொல்லவேண்டும். 1878 முதல் 1880 வரை சுமார் 300 கோட்பாடுகளை மையமாகக் கொண்டு ஒளிரும் விளக்கு உருவாக்க முயற்சி செய்தார். பலவித முயற்சிகள் செய்து, அவற்றில் தோல்வியைத் தழுவிய பின்னரே அவருக்கு வெற்றி கிட்டியது. அவருடைய பரிசோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தருணங்களில் அவருக்கு தோல்விதான் கிட்டியது. அவர் சொன்ன பதில், “நான் பத்தாயிரம் முறைகள் தோல்வி அடையவில்லை. பத்தாயிரம் முறைகளில் இது வேலை செய்யாது என்பதை வெற்றிகரமாக கண்டு பிடித்தேன் என்றார்.
வால்ட் டிஸ்னி: இந்த பெயரைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது “மிக்கி மௌஸ்”, “டொனால்ட் டக்” என்ற கார்ட்டூன் படங்கள். இந்த கம்ப்யூடர் யுகத்தில் கார்ட்டூன் படங்கள் எடுப்பது எளிதான வேலை எனலாம். ஆனால், கம்ப்யூடர் துணையில்லாமல், ஓவியங்கள் வரைந்து அவற்றின் துணையுடன் அனிமேஷன் திரைப்படம் எடுப்பது ஒரு வியத்தகு சாதனை என்று சொல்லலாம். அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார். அவர் சிறுவனாக இருந்த போது, கான்சாஸ் நகரத்தில் செய்தித்தாள் போடும் பையனாக தந்தைக்கு உதவி புரிந்து வந்தார்.
ராணுவத்தில் பணிபுரிந்தார், செய்தித் தாள்களில் விளம்பரம் எழுதி வந்தார். பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அவர் “மார்ட்டிமர்” என்ற கார்ட்டூன் பாத்திரத்தை உருவாக்கினார். மனைவின் அறிவுறுத்தலால் அதன் பெயரை “மிக்கி மௌஸ்” என்று மாற்றினார். அவருடைய போட்டியாளர்கள் ஒலியுடன் கூடிய அனிமேஷன் படங்கள் வெற்றியடையாது என்றனர். 1928 ஆம் வருடம் “வில்லி ஆன் த ஸ்டீம்போட்” என்ற படம் வெளியிட்டார். அந்தப் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.
ஆல்ஃப்ரட் நோபல்: நோபலின் முன்னோர்கள் பொறியாளர்கள், இராசயன வல்லுநர்கள், பல கண்டு பிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள். போஃபார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள். இராணுவத்திற்குத் தேவையான உபகரணங்களை உருவாக்கி வந்தார்கள். ஆல்ஃப்ரட் நோபல், நைட்ரோ கிளிசரின் உபயோகம் மற்றும் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வழிகள் பற்றி ஆராய்ந்து வந்தார். ஆனால், 1864ஆம் வருடம் பயங்கரமான வெடி விபத்து, அவர்களுடைய தொழிற்சாலையை அழித்துவிட்டது. இந்த விபத்தில், ஆல்ஃப்ரடின் தம்பி, மற்றும் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மனந்தளராத ஆல்ஃப்ரட், ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். டைட்டோமேசியஸ் எர்த் என்ற பூமியில் கிடைக்கும் பாறையைப் பொடித்து, நைட்ரோகிளிசரினுடன் கலப்பதன் மூலம் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டுபிடித்தார். 1867இல் கண்டறியப்பட்ட இந்தக் கலவைக்கு டைனமைட் என்று பெயர்.
ரெனே லேனெக்: நான் ஒரு மருத்துவர். ஆனால், நோயாளியைத் தொடமாட்டேன் என்று ஒரு மருத்துவர் கருதினால், அவர் எப்படி அந்தத் தொழிலைச் சரிவரச் செய்யமுடியும். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நோயாளியின் சுவாசம் அல்லது இதயத்துடிப்பைக் கேட்க, மருத்துவர்கள் நோயாளியின் மார்புக்கு அருகில் காதுகளை வைத்துக் கேட்பார்கள். ஆனால், டாக்டர் ரெனே லேனெக் நோயாளியைத் தொடுவதற்குத் தயங்குபவர். ஒரு முறை, இரண்டு குழந்தைகள் குழிவான மரத்தின் தண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதன் வழியாக ஒலியைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். நோயாளியைத் தொடாமல் இதயத்துடிப்பைக் கேட்க அவர் மனதில் இது நல்ல வழி என்று நினைத்த டாக்டர் ரெனே மர உருளை ஒன்றைத் தேடி பரிசோதனை செய்தார். இதன் மூலம் நீண்ட தூரத்திலிருந்தும் இதயத் துடிப்பைக் கேட்க முடிந்தது. மருத்துவர்களுக்கு இன்றியமையாத அடிப்படைக் கருவியான ஸ்டெதாஸ்கோப் உருவானது.
லுட்விக் வான் பீத்தோவன்: இளம் வயதில் பீத்தோவனுக்கு இசை கற்பித்த ஆசிரியர்கள் அவர் சாதாரண இசைக்கலைஞர், மோசமான வயலின் கலைஞர் என்றார்கள். மேலும் அவருக்கு மெல்லிசை உருவாக்கும் திறமையில்லை என்றார்கள். ஆனால், பீத்தோவன் தந்தை அதை ஒத்துக்கொள்ளவில்லை. தன் மகனைக் கடுமையான இசைப்பயிற்சிக்கு ஈடுபடுத்தினார். அதன் விளைவாக, 1782ஆம் வருடம், 12வது வயதில், முதல் பியானோ இசையமைப்பை வெளியிட்டார் பீத்தோவன். 40வது வயதில் இசை உலகின் உச்சத்தைத் தொட்டார். ஆனால், முற்றிலும் காது கேளாதவராக ஆனார் பீத்தோவன். இந்த நிலையிலும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் மொத்தம் 138 படைப்புகள் வெளியிட்டார். இன்றும் இசை உலகில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பியானோ கலைஞராக மதிக்கப்படுகிறார்.
சார்லஸ் குட்இயர்: உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்த குட்இயர் எடுத்த சில வியாபார முடிவுகள் அவரது நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளியது. இருந்தாலும், வெப்பநிலை மாற்றங்களை எதிர்க்கும் செயற்கை ரப்பரை உருவாக்குவதில் தனது கவனத்தைச் செலுத்தினார். அவர் எடுத்த பல முயற்சிகள் அவருக்கு வெற்றியைத்தரவில்லை. ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது, தற்செயலாக எரியும் அடுப்பில் கந்தகம், ரப்பர் மற்றும் ஈயம் கலந்த கலவையைக் கொட்டினார். ஆனால், ஆச்சரியமாக அந்தக் கலவை உருகவில்லை. இந்த நிகழ்வுக்கு ரோமானியக் கடவுள் வல்கன் நினைவாக வல்கனைசேஷன் என்று பெயரிட்டார். இந்த கண்டுபிடிப்பு அவருக்கு பணத்தை வாரிக்கொடுக்கவில்லை. குட்இயர் கடனில் மூழ்கி இறந்தார். ஆனால், 1840ஆம் வருடம் அவர் கண்டுபிடித்த வல்கனைசேஷன் தொழில் நுட்பம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
ஜே.கே. ரவுலிங்: ஹாரி போட்டர் என்ற சிறுவனை மையமாக வைத்து, கற்பனை நாவலை எழுதிய ஹாரி போட்டர் வறுமையின் பிடியில் இருந்தார். ஹாரி போட்டர் தொடரின் முதல் கதையை எழுதி பல பதிப்பகங்களுக்கு அனுப்பிய போது, பலரும் அதை நிராகரித்தனர். ப்ளூம்ஸ்பரி, இந்தக் கதைக்கு 500 பிரதிகள் பதிப்பித்து 26 ஜூன் 1997 ஆம் வருடம் வெளியிட்டது. முதல் புத்தகம் உலகெங்கும் 450 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 7 புத்தகங்கள் எழுதினார். அவருடைய புத்தகங்கள் 84 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. மேஜிக் பற்றிய இந்த புத்தகம் செய்த மாபெரும் மேஜிக், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த இதன் ஆசிரியர் ரவுலிங், பில்லியனராக (100 கோடிகள் சொத்து மதிப்பு) உயர்த்தப்பட்டது. “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்” என்ற பழமொழி ரவுலிங் பொருத்தவரை உண்மையாகிவிட்டது.