
இன்றைய நவீன வாழ்வில் கவலை, மன அழுத்தத்துக்கு உள்ளாகாத மனிதர்களே இல்லை எனலாம். "கவலை என்பது பொருளாதாரப் புற்றுநோயைப்போல. அது தொடர்ந்தால், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்கள் தவறுகளே உங்களை மண்ணில் விழவைக்கும்" எனவே கவலைப்படுவது, அதன்மூலம் மன அழுத்தத்துக்கு உள்ளாவதை இன்றே, இப்போதே நிறுத்துங்கள். அதற்கான 8 வழிகள் இப்பதிவில்
1.உங்களுக்கு நீங்களே உறுதியளியுங்கள்
கவலைகள், பிரச்னைகளை விட்டு ஓடி ஒளியாமல் அவற்றை நேருக்கு நேராக எதிர்கொள்ளுங்கள். எதற்காக வருந்துகிறோம், பயப்படுகிறோம் என்று ஆழ்ந்து யோசித்துப் புரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக்கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று உங்களுக்கு நீங்களே உறுதியளியுங்கள். கவலையின் உச்சத்தில் நாம் கற்பனை செய்வதுபோல் எல்லாம் பொதுவாக நடப்பதில்லை.
2.கவலைகளை உதறுங்கள்
கவலைப்படுவதை உடனே நிறுத்துங்கள். முன்பு இதேபோல ஒரு பிரச்னை சூழலில் நீங்கள் திக்கித் திணறியதையும், கடைசியில் எல்லாம் எளிதாக முடிந்ததையும் நினைவில் கொண்டுவாருங்கள். கவலைகள் மேகமூட்டமாய் மனதில் கவிவதைத் தடுத்து, நிம்மதியாக மூச்சுவிடுங்கள
3. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தத்தைப் போக்க ஒரு சிறப்பான வழி. உடற்பயிற்சி, நீங்கள் அலுவலகத்தில் இருந்தால், அவ்வப்போது குறுநடை போடுங்கள். நெட்டி முறிப்பது கூடப் பலன்தரும். மன அழுத்தம் கூடுவதாகத் தோன்றினால், சற்றுதூரம் நடந்து வாருங்கள்.
4. ஆழ மூச்சை இழுங்கள்
பயம், படபடப்பு ஏற்படும்போது மூச்சுவிடும் வேகம் அதிகரிக்கும். நுரையீரலில் குறைவான ஆக்சிஜன் இருப்பது திணறலை ஏற்படுத்தும். வேகவேகமான சுவாசத்தைச் சீர்ப்படுத்த, நிறுத்தி, கவனத்தோடு மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். இயல்பாகவே அமைதியாகிவிடுவீர்கள்.
5.பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் கவலைகள், பிரச்னைகளை உங்களின் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிரச்னையை மனந்திறந்து பேசும்போதுதான் அது நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் அளவு மலை போன்ற ஒன்றல்ல என்பதை உணர்வீர்கள்.
6. 'ஷவரில்' குளியுங்கள்
அதீதமான கோபம் அல்லது மன அழுத்தத்தின்போது, 'ஷவரில்' நனைந்து குளிப்பது நல்லது. ஒரு நல்ல குளியல், உங்கள் மனதையும், உடம்பையும் 'ரிலாக்ஸ்' செய்யும். புத்துணர்வூட்டும். அதன்பின் உங்களால் சீராகச் சிந்திக்க முடியும்.
7.எழுதுங்கள்
உங்கள் கவலைகளை கைப்பட எழுதுங்கள். அதனால் 'டைரி' எழுதும் பழக்கத்தைப் பலரும் பரிந்துரைக் கிறார்கள். பிரச்னையை எழுத்தில் கொட்டுவது, உங்கள் ஆழ்மனதை எட்ட உதவும். அது, உங்கள் கவலையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்க வழிகாட்டும். கவலைகளை எழுதும் பழக்கம் மிகவும் உதவிகரமான, நேர்மறையான ஒரு முறையாகும். இந்தப் பழக்கத்தை நீங்கள் தொடரத் தொடர, கவலைகளின் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள்.
8.மனோபாவத்தை மாற்றுங்கள்
வாழ்வின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள முடியாததாலும், போலி கவுரவத்துக்காக வாழ முயலுவதாலும்தான் கவலைகள் பிறக்கின்றன என்று நமக்குத் தெரியும். எனவே உங்களை, உங்கள் மனோபாவத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் வழக்கமாகச் சிந்திக்கும் முறையை மாற்றிப்பாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றம் மலரும்.