

சிகரத்தைத் தொடும் வரை விடாதிருக்க சில வெற்றி உத்திகள்.
தட்டின எந்த கதவும் திறக்கவில்லையென்றால், இன்னும் சில கதவுகள் இருக்கின்றன. அவைகளையும் தட்டவேண்டும். இதுதான் விடாமுயற்சி. வளர்ச்சியே காணாதது பிராணிகள். வளர்ச்சி காண்பவர்கள் மனிதர்கள். நான்கு பேரை வளர்ச்சி அடையச் செய்பவர்கள் மாமனிதர்கள்.
ரிஸ்க் எடுப்பது துணிவின் அடையாளம். தகுதிக்கு மிகாமல் ரிஸ்க் எடுப்பதும், எச்சரிக்கையுடன் ரிஸ்க் எடுப்பது அறிவின் அடையாளம். ரிஸ்க் எடுத்து ஜெயித்துக்காட்டுவது சாதனையின் அடையாளம். கிடைத்ததை வைத்துக்கொண்டு நாட்களை கழிப்பது குளத்துக்குள் விளக்கை எரிய வைப்பது போன்றது. கிடைக்க வேண்டியவைகளை அடைந்து காட்டுவது கோபுரத்தின் மேல் தீபம் ஏற்றுவது போன்றது.
மலையேறும்போது மலையின் அடியில் நாம் இருப்போம். ஏறி முடித்ததும் மலைகள் காலடியில் இருக்கும் லட்சியப் பயணங்களும் அப்படித்தான் ஆரம்பத்தில் சிரமங்களைத்தான் பார்க்க முடியும் இறுதியில் சிகரங்களையே தொடமுடியும்.
ஆற்றல் எனும் வாகனத்தில் உழைப்பு எனும் பெட்ரோலை போட்டு அறிவு எனும் டிரைவரிடம் ஒப்படைத்தால் வெற்றி என்ற ஊரைத் தவிர வேறெங்கு போகமுடியும். விரும்பியதை செய்து காட்டுவது வெற்றி. வெற்றிகளை விஸ்தரித்துக்கொண்டே இருப்பது கனவு.
படிப்பிருந்தால் போதும். பல படிகள் ஏறிவிடலாம் என்பது சற்று சந்தேகத்துக்குரியது. ஆனால் துடிப்பிருந்தால் தொண்ணூறு சதவீதம் ஏறிவிடலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தோல்விக்கு அடுத்தது வெற்றிதான். இரண்டையும் இணைப்பது தொடர்ந்த முயற்சிதான்.
ஓட ஓடத்தான் தெரியும். ஓடுவதற்கு இன்னும் இடம் இருக்கிறது என்பது. உழைக்க உழைக்கக்தான் தெரியும் திறமைக்கு வேலை இருக்கிறதென்று. தகுதிக்கும் திறமைக்கும் குறைவான வேலையே கிடைத்தாலும் அதுவும் அந்தத் துறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் முதல் படியாக தந்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து துரத்தும் தெம்பு இருந்தால் வெற்றிக்கும் உங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்துதானே ஆகவேண்டும்.
ஒரே சமயத்தில் ஒன்பது விஷயங்களில் கவனம் செலுத்துவது திறமைதான். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பது ஆற்றலை ஆழமாக விதைக்கிறது வெற்றியை வேகமாகவும் கொண்டு வருகிறது.
வெற்றி என்பது கோபுரத்தின் கலசம். எல்லோர்க்கும் தெரியும். தோல்விகள் என்பது கோபுரத்தின் அஸ்திவாரம். வெளியே தெரியாது. தொடர்ந்து கிடைத்த தோல்விகளுக்குப் பிறகு வந்த முதல் பெரிய சாதனைகளுக்கு விதையாக ஆகும். முதல் வெற்றியை ருசிக்கும் வரையில் முயற்சிகளை தொடர்ந்து செய்யவேண்டும்.
லாபத்தை குறைத்தால் வியாபாரம் பெருகும். தரத்தைக் குறைத்தால் வியாபாரம் சுருங்கும். செய்வதையே செய்துகெண்டிருக்கும் வரையில், புதிதாக எந்த முயற்சியும் எடுக்காத வரையில் பெரிதாக வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
போட்டியில் ஜெயிக்க வேண்டுமானால் எல்லா விஷயத்திலேயும் திறமைசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உனது போட்டியாளர் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறானோ அந்த விஷயத்தில் மட்டும் நீ திறமையை கூட்டிக் கொண்டாலே போதும்
காலத்துக்கு ஏற்பவும், மக்களின் ரசனைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக் கொள்ளத் தெரிந்திருப்பது ஒரு வியாபாரிக்கான விழிப்புணர்வு. குறிக்கோளை விட்டு அகலாத பயணம், பிரிவுகளைக் கண்டு சேர்வடையாத மனம், சோம்பலுக்கெதிரான சுறுசுறுப்பு, இவை போதும் குறிக்கோளை தொட்டு விடலாம்.
இந்தக் கருத்துக்களை உள்வாங்குவதன் மூலம், தோல்விகளைப் பாடங்களாகக் கருதி, பயத்தைத் தாண்டித் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் மனநிலையைப் பெற்று, உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட உயரத்தை எட்டுவீர்கள்.