

வாழ்க்கையில் தலை நிமிர்ந்து வாழ எறும்பை பார்த்து கற்றுக்கொள்ள ஆசைப்படுங்கள். எங்காவது ஓய்வெடுக்கும் எறும்பை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி ஒரு நிகழ்வை நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது. எறும்பு சுறுசுறுப்பின் மொத்த உருவம்.
எறும்பு தன் எடையை விட அதிகமாக சுமக்கும் வலிமை கொண்டது. இல்லாத வயிற்றுக்கும் சுறுசுறுப்போடு இரைத் தேடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் வரிசையாக சென்று, நமக்கு விழிப்புணர்வு தரும். இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு எந்த பள்ளிக்கூடத்தில் படித்துக் கற்றுக்கொண்டது.
நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை வடிவமைத்து, ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையில் இதன் தாக்கத்தை பற்றிய செய்தி உண்டு. ஆனால் நம்மால் நடைமுறை படுத்த ஒவ்வொருத்தருக்கும் மனம் இல்லாமல், அது செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
வாழ்க்கையில் நாமும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு முயற்சி செய்வோம். அதேபோல் முயற்சியில் இடர்படும் தவறுகளை பற்றிக் கவலை படாதீர்கள். தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
மனித வாழ்க்கையில் இயக்கம் என்பது மிகவும் அவசியம். மனித பிறவிக்கு இயக்கம் இல்லையேல், வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எங்காவது தனக்கான எதிர்கால வாழ்க்கை காத்திருக்கும் கடல்போல் ஓரிடத்தில். இறை தேடும் எறும்பு போல, தேடுங்கள். நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் மனித சக்தியால் செய்யமுடியாத எந்த ஒரு செயலையும் இறைவன் யாருக்கும் கொடுப்பது இல்லை. நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
அதேபோல் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மன அமைதி என்பது மிகவும் தேவையான ஒன்று. ஒரு மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் இருந்தால், வாழ்க்கை வெறுப்பாகவும், சுமையாவும் இருக்கும்.
வாழ்க்கையில் ஒரு திருப்தி இல்லாமலும், கார்மேகத்தின் கருமை போல், மனதில் கவலைகளும் சூழ்ந்து கொள்ளும். இவைகளின் பிடி இறுகும்போது, தேவை இல்லாத மனஅழுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக மனதில் வியாதியாக உருக்கொள்ளும். ஆகவே எந்த தருணத்திலும், எந்த நிலையிலும் நிம்மதி மட்டும் இழந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் இவைகள் அனைத்தும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க தவறினால், தவறான முடிவு எடுப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள். இதற்கு உங்களிடம் உறுதியான மனமும், நிலையான மனமும் இல்லையென்றால், இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் உருவாக ஏதுவாகிறது.
வாழ்க்கையில் தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஒருபோதும் விதியை நொந்து கொண்டு, நம்மையே வீழ்த்தும் எதிர்மறை எண்ணங்களால் மனதை பலவீனமாக வைத்துக் கொண்டு வீண் போகாமல், வலிமையாக மனதை மாற்றிக்கொண்டு செயலாற்றும் தன்மைக்கு மாறுங்கள்.
வாழ்க்கையில் எனக்கான விதி, தனக்கு ஏதோ ஒரு பாடத்தை சொல்லித் தருகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதனை எப்படி எதிர்கொள்வது என்று நேர்மறையாக சிந்திக்கும் திறன் கொண்டு அணுகுங்கள். வாழ்க்கையில் எப்போதும் மனநிறைவோடு வாழப் பழகுங்கள். வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்!