

அனைவரின் வாழ்க்கையும் 'நாலு சுவருக்குள்' தான் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. நாலு சுவரைத் தாண்டி வெளியே சென்றாலும், அனைத்துச் சாலைகளும் நம்மை அழைத்துச் செல்வது இன்னொரு நாலு சுவருக்குள் தான். 'நான்கு சுவர்கள்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவரின் நடிப்பில், 'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் அவர்களின் முதல் வண்ணப் படமாக வெளிவந்தது.
வழக்கும் வாழ்க்கையும் 'நாலு பேர் என்ன சொல்வாங்க...' - இந்த வாசகம் வழக்கில் இப்போது அதிகம் இல்லையென்றாலும், நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் இதைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. "நாலு நல்ல விஷயங்களைக் கத்துக்கணும்... நல்லதை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்கணும்..." என்று அடிக்கடி சொல்வார்கள். "நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை..." - 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் இந்தப் புகழ்பெற்ற வசனம் இன்றும் பலரைக் கவர்ந்து வருகிறது.
இப்படி அந்த 'நாலு'(power of four) நம்மை விட்டு விலகிப் போவதில்லை. "நான் யார்? நான் யார்?" என்ற தத்துவப் பாடலின் அடுத்த வரி, "நாலும் தெரிந்தவர் யார்? யார்?" என்பதுதான்.
நாளும் கோளும் இன்னொன்று 'நாள்'. இன்றைய 'நாள்' பலன்களை ஜோதிடர்கள் தினசரி தொலைக்காட்சியில் சொல்லி வருகிறார்கள். திருமணம், கிரகப்பிரவேசம் தொடங்கி அனைத்து நல்ல காரியங்களுக்கும் நல்ல 'நாள்' பார்த்துத்தான் நடத்தி வருகிறோம். "இதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று சொல்பவர்கள் கூட, ரகசியமாக நாள் பார்ப்பார்கள்.
இந்த 'நாலும்' 'நாளும்' இரட்டையர்களோ என்று நினைக்கக் கூட வைக்கும். எல்லா இடங்களிலும் இவை இரண்டும் நீக்கமற நிறைந்திருக்கும். கே.பாலச்சந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தில், நாயகி 'அனு'வாக சுஜாதா நடித்திருப்பார். அவளின் முன்னாள் கணவன், முன்னாள் காதலன், ஒருதலையாகக் காதலிக்கும் ஒருவன் என நான்கு பேரை மையமாக வைத்து அந்த அற்புதமான படத்தைத் தந்திருப்பார். கதாநாயகி என்ன முடிவெடுப்பாள் என்பதை, "அங்கும் இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்தப் பக்கம்?" என்று கவியரசர் கண்ணதாசன் தன் பாடலில் கேட்டிருப்பார்.
நால்வர் காட்டும் உறவுச் சிக்கல்கள் "என் அப்பா யாருக்கு மாமனாரோ... அவருடைய மருமகளின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால்... எனக்கும் அவருக்கும் என்ன உறவு?" - 'அபூர்வ ராகங்கள்' படத்தில் இப்படி ஒரு விடுகதையைச் சவாலாகக் கேட்டிருப்பார் பாலச்சந்தர். பாடகி எம்.ஆர்.பைரவி, அவருடைய மகள் ரஞ்சனி, பிரசன்னா, அவரின் தந்தை மகேந்திரன் என இந்த நால்வரைச் சுற்றியே கதை அமைந்திருக்கும். "கேள்வியின் நாயகனே... இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா?" என்று கிளைமாக்ஸில் இந்தப் பாடல் மூலம் விடை தந்தார் அவர். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்திலும் மூன்று பெண்கள், ஒரு ஆண் என நால்வரைச் சுற்றியே கதை நகரும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
காலமும் மாற்றமும் சாதாரண விஷயங்கள், சிக்கலான பிரச்சனைகள் என அனைத்தும் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். அந்த 'நாள்' நல்ல நாளா? அந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக இருக்குமா? புதிதாக வேலைக்குச் சேரும் ஓர் இளைஞனுக்கு அந்த நாள் ஒரு 'பொன்னாள்'. அதே நாளில், அதே அலுவலகத்தில் பணிநிறைவு பெறும் ஒருவருக்கு அது வருத்தத்தைத் தரும் நாளாக இருக்கலாம். அனைவரோடும் சந்தோஷமாகப் பணிபுரிந்துவிட்டு, நாளை முதல் அதையெல்லாம் இழக்கப் போகிறோம் என்று நினைக்கும்போது வருத்தம் வருவது இயற்கை.
இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் 'அந்த 7 நாட்கள்' திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஒரு பாடமாக இருந்து வருகிறது. ஒருவரைக் காதலித்து, குடும்பச் சூழல் காரணமாக இன்னொருவருக்கு மனைவியாகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை, அந்த ஏழு நாட்களில் எப்படி மாறிப் போகிறது என்பதை அது காட்டும். 'ஒரு நாள் முதல்வர்' என்ற புதுமையைச் சங்கர் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு நாள் ஒரு சாதாரண மனிதனை, அசாதாரண சாதனை புரியும் மனிதனாக மாற்றுகிறது என்பதைப் பிரம்மாண்டமாகத் திரையில் பார்த்தோம்.
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது புகழ்பெற்ற பழமொழி. இதில் 'நாலு' என்பது நாலடியாரைக் குறிக்கும். "நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை" என்பது நாள் தொடர்பான பழமொழி. நீர், நிலம், நெருப்பு, காற்று எனப் பஞ்சபூதங்களில் இந்த நான்கும் நம்மைச் சுற்றியே ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டே இருக்கும். பிரிக்க முடியாதது எதுவென்றால் அது 'நாலும்... நாளும்...' தான்.
சிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், சிறந்த விக்கெட் கீப்பர் என இந்த நால்வர் ஒரு அணியில் இருந்தால் போதும்; மூன்று முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் டி20 கோப்பையை நாம் வெல்லலாம். அந்த நாட்கள் எல்லாம் நம் நாட்டுக்கு நல்ல நாட்கள்தான்.
நாலும் நாளும் எப்போதும் நமக்கு நன்மை தந்து கொண்டே இருக்கும் என்ற நேர்மறை எண்ணம் நமக்குள் இருந்தால், "திருமகள் தேடி வந்தாள்... எங்கள் இல்லம் குடிபுகுந்தாள்..." என்ற 'இருளும் ஒளியும்' படப் பாடல், நம் இல்லந்தோறும் தினமும் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.