அதிகம் பேசுபவரா நீங்கள்? உங்கள் வெற்றியைத் தடுப்பது இதுவாகக் கூட இருக்கலாம்!

A man doing meditation | Benefits of Silence
A man doing meditation | Benefits of SilenceAI Image
Updated on

'பேச்சைக் குறை! பேச்சைக் குறை!' என்று வீடுகளில் அந்தக் காலத்தில் பெரியவர்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்கலாம். காரணம், அமைதியாக இருக்கும்போதுதான் தெளிவாகச் சிந்திக்க முடியும்.

ஓர் இயந்திரம் நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும்போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும்; அது வேலை செய்யும் திறன் பழுதுபடும்போதுதான் சத்தம் அதிகரிக்கும். இது இயந்திரங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால், அவர்கள் பெரும்பாலும் அமைதியானவர்களாகவே இருப்பார்கள்.

மௌனம்: கருணையின் வடிவம்

நாம் கோவில்களுக்குப் போகிறோம்; அங்கே அருளாட்சி புரியும் தெய்வங்கள் நமக்கு மௌனமாகத்தானே அருள் புரிகின்றன? இந்த மௌனம்தான் கருணையின் உச்சக்கட்டம் என்று மகான்கள் கூறுகிறார்கள். மகான்களிடம் பக்தர்கள் தங்கள் குறைகளைச் சமர்ப்பித்துத் தீர்வு வேண்டும்போதும், அவர்கள் மௌனத்திலேயேதான் பதிலளிக்கிறார்கள்.

எப்போதெல்லாம் மௌனமாக இருக்க வேண்டும்?

  • பிரச்சினையின் போது: நீங்கள் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது மௌனமாக இருங்கள். அப்பொழுதுதான் அதைப் பற்றி உங்களால் நிதானமாக அலசி ஆராய்ந்து சிந்திக்க முடியும்.

  • அறிவு போதாத போது: உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லாதபோது மௌனமாக இருங்கள்.

  • உணர்ச்சிகளைக் கையாள: பதற்றமாக சத்தம் போட்டுச் சண்டை போடும் மனநிலை ஏற்படும்போது அவசியம் மௌனம் தேவை.

  • உறவுகளைக் காக்க: உங்கள் வார்த்தைகள் ஒரு நட்பைக் குலைத்துவிடுமென்றோ, தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்றோ நினைக்கிறீர்களா? கோபத்தில் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படுகிறதா? அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் நிச்சயம் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • பிறருக்குச் செவிமடுக்க: நாமே எப்போதும் பேசிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் பேச்சை எப்படிச் செவிமடுப்பது? இதற்கும் மௌனம்தான் வழி.

மௌனத்தின் ஆற்றல்கள்

மௌனத்திற்கு எவ்வளவு ஆற்றல்கள் இருக்கின்றன தெரியுமா? நாம் பேச்சைக் குறைக்கும்போது, முதலில் நம்மை ஓர் அமைதி சூழ்ந்துகொள்கிறது; எதிர்மறை எண்ணங்கள் விலக ஆரம்பிக்கின்றன. மனம் திறந்து கொள்கிறது. திறந்த மனம் வாழ்க்கையில் வேண்டுவன, வேண்டாதனவற்றை அலசி நமது வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

இதையும் படியுங்கள்:
அரை டம்ளர் தண்ணீர் கதை உங்களுக்குத் தெரியுமா? – உங்கள் வாழ்க்கைத் தத்துவத்தையே மாற்றும்!
A man doing meditation | Benefits of Silence

நாம் மௌனமாக இருக்கும்போது நமது குறைகள் நமக்குப் புலப்படுகின்றன. நேர்மறை எண்ணங்கள் மலர ஆரம்பிக்க, குறைகளை எவ்வாறு நீக்கி வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்கத் தொடங்குகிறோம்.

இதே மௌனத்தில்தான் நம்மால் எதிராளியையும் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை நம்முடைய கண்ணோட்டத்திலேயே வாழ்வைப் பார்த்துப் பழகிய நாம், முதன்முறையாக மற்றவர்களின் பார்வையில் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிப்போம். அவர்களிடம் நமக்குத் தென்படாத நல்ல விஷயங்களை மௌனம் 'முத்துக் குளித்து' நமக்குப் பெற்றுத் தரும்.

மௌனத்தின் பயன்கள்

நமது உள்ளுணர்வு, நாம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களுக்கான ஆணைகளை மௌனத்தின் வாயிலாகவே பிறப்பிக்கிறது. மௌனத்தில் ஆழ்ந்த மன அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர முடியும். மனம் ஆனந்தத்தில் நிறையும்போது உடல் ஆரோக்கியமும் சீராகிறது.

அதுமட்டுமல்ல, நீங்கள் பேச்சைக் குறைத்து மௌனம் சாதிக்க ஆரம்பித்தால், உங்களுக்கென்று ஒரு தனி மரியாதையைச் சமுதாயம் கொடுப்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். ஏனெனில், மௌனம் சாதிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

சுருக்கமாகச் சொன்னால்: மௌனத்தை விட மிகச் சிறப்பானதாக இருந்தால் மட்டுமே வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்!

logo
Kalki Online
kalkionline.com