

வார்த்தைகளின் வலிமையை விளக்கும் இந்த கட்டுரை, நம் உள்ளத்தில் நாமே விதைக்கும் சொற்கள் எவ்வாறு நம்பிக்கையையும் உடல் வலுவையும் உருவாக்கி முன்னேற்றத்துக்கு வழி வகுக்கின்றன என்பதைச் சொல்கிறது. “எனக்கு யோகமில்லை” என்ற எதிர்மறை எண்ணங்களை விட, “நான் முடிப்பேன்” என்ற தன்னம்பிக்கை வார்த்தைகள் வெற்றியின் விதையை மனதில் ஊன்றுகின்றன. பெற்றோர், ஆசிரியர், போட்டியாளர்கள் என அனைவரின் பேச்சும் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது என வலியுறுத்துகிறது.
வார்த்தைகள் வலிமை மிக்கவை. மனதிற்குள் புகுந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிந்து, செயல்படுவதற்கான வாய்ப்புக்களை கண் முன்னே நிறுத்தும். எனக்கு யோகமில்லை. நினைத்தது எதுவும் எனக்குக் கிடைக்காது என்று கீறல் விழுந்த கிராமப்போன் இசைத்தட்டு போல் சொல்லிக்கொண்டேயிருந்தால், முன்னேற்றம் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான்.
அதை விடுத்து, நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்… நான்… என அடிக்கடி சப்தமிட்டுச் சொல்லிக் கொண்டிக்கும்போது, மனசுக்குள் வெற்றியின் விதை விழுந்து விடுகிறது. அங்கு ஊன்றிய விதை உள்ளிருந்தே முயற்சிக்கு வேண்டிய நம்பிக்கையையும், உடல் வலுவையும் தந்து விடுகிறது.
இந்த விஷயம் நமக்கு ஒத்து வராது என்று பின் வாங்குபவர்கள் ஒரு போதும், சிகரம் ஏறமுடியாது. அது அடுத்த தெருவிலிருக்கும் பலசரக்குக் கடைக்கு போவதாகட்டும். அடுத்த ஊரிலிருக்கும் கோவிலுக்கு செல்வதாக இருக்கட்டும். உன்னால் முடியும்ன்னு ஆழ் மனதிற்குள் சொல்லி, நமக்கு சாதகமாக நினைக்க வைத்து காரியத்தை எளிதாக்கிவிடலாம்.
அன்றாடம், நம் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் பாஸிட்டிவாக இருக்கணும். அந்த சொற்கள் மற்றவர்களை நம் மீது நல்ல அபிப்பிராயம் கொள்ள வைத்துவிடும். அவர்கள், நம் செயல்களில் அக்கறை கொண்டு, பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவார்கள். தடுமாற்றம் வரும்போது, சுட்டிக்காட்டி, புரியவைத்து வழி காட்டுவார்கள்.
தொலைக்காட்சிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் எல்லோருமே உதிர்க்கும் சொல், "நான் டைட்டில் வின்னர்" ஆவேன். மூன்று பேர் கலந்து கொண்டாலும் சரி… முப்பது பேர் போட்டியிட்டாலும் சரி..அவர்களுக்கு தெரியும் ஒருவர் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். ஆனாலும் கடைசி வரை பொறுமையாக காத்திருக்கிறார்கள். முடிவு அறிவிக்கும் வரை சொல்கிறார்கள், "நான் ஜெயிப்பேன்". பரிசு கை நழுவினாலும், அதே தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள்.
பெரியவர்கள் சொல்வார்கள், "ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்"ன்னு. காலைல சூரிய வெளிச்சம் முகத்துல விழுற வரைக்கும் தூங்குறதப் பாரு, நீயெல்லாம் உருப்படவே மாட்டேன்னு பிள்ளைகளை பெற்றோர் திட்டுவதை பல வீடுகளில் காணலாம். அதைக்கேட்ட குழந்தை அதான் அவங்களே சொல்லிட்டாங்களே நாம ஏன் மெனக்கெடணும்ன்னு மெத்தனமாய் மெதுவாகவே எழுந்து, அன்றைய நாளையே வேஸ்டாக்கி விடுகிறார்கள்.
அதற்குப் பதிலாக, அதே குழந்தையிடம், "கண்ணா...சீக்கிரமா எழுந்து சூரியனுக்கு குட் மார்னிங் சொல்லு. சூரியனைப்போல நீயும் பிரகாசமாய் இருப்பே"ன்னு சொல்லிப் பாருங்களேன். உங்க பிள்ளைக்கு ஒளி மயமான எதிர்காலம்தான்.
சிலருக்கு மென்மையாக பேச வராது. எப்பவும் அவங்க பேச்சில அதிகாரம் இருக்கும். அதையும் தாண்டி அக்கறை இருக்கும். அதுக்கு உதாரணம் முருகேசன் தாத்தா தான். ஸ்கூல் படிக்கும்போது, அவங்க பேரன், "தாத்தா, பரீட்சைக்குப் போறேன்.
திருநீறு பூசி விடுங்க" என்பான். தாத்தாவும், "கணேசா.. பார்த்து ஒழுங்கா எழுதணும்"ன்னு மிரட்டி , "நீதாண்டா முதல் மார்க் வாங்குவே" ன்னு சொல்லி விபூதி பூசி விடுவார். "நாந்தான் பர்ஸ்ட் மார்க் வாங்குவேன்'னு நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டே பரீட்சை ஹாலுக்குள் நுழைவான். முதலிடம் அவனுக்குத்தான். அடிக்கடி சொல்வான், "தாத்தா தான் என் வளர்ச்சிக்குக் காரணம்."
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. மற்றவர் வாழ்வை வளமாக்கும் வல்லமை நிறைந்தவை. தெளிவான வார்த்தைகளால் சிக்கல்களை தீர்க்கலாம். ஆறுதல் வார்த்தைகளால் துயரத்தைத் துடைக்கலாம். ஊக்கப்படுத்தும் வார்த்தைகளால் சிகரம் தொடலாம். அன்பான வார்த்தைகளால் உறவின் சிறகுகளை விரிக்கலாம். நன்மை பயக்கும் வார்த்தைகளால் வாழ்க்கையைக் கொண்டாடலாமே...!
இந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் அன்றாடப் பேச்சில் உள்ள எதிர்மறைச் சொற்களைக் கண்டறிந்து நீக்கி, உங்கள் ஆழ்மனதை வெற்றியின் திசையில் இயக்கும் மனநிலையைப் பெறுவீர்கள். இது உங்கள் சுயமரியாதையை உயர்த்தி, இலக்குகளை எளிதில் அடைய உதவும்.