

ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்நாளில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அதற்கு ஆரம்ப புள்ளியாக, முதலில் நீங்கள் விரும்பும் காரியத்தை காரண காரியத்தோடு செய்ய வேண்டும்.
அப்படி நீங்கள் விரும்பிச் செய்யும் செயலில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது என்பதை உணருங்கள். அந்த செயலை செய்யும் போது, முதலில் நீங்கள் அதிகமாக பேசுவதை நிறுத்திக் கொண்டு, செயலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் சோகத்தை சுமந்து விட்டால், அதை இறக்கி வைப்பது மிகவும் கடினமான செயலாகும். எந்நேரமும் நாம் சுகமாக வாழ்வது கடினமான காரியம் என்று நினைத்து விட்டால், உங்கள் சுமை தானாக உங்களிடம் இருந்து விலகிப் போய் விடும்.
வாழ்க்கையில் நாம் கண் சிமிட்டும் நேரம் அறிந்து வாழ்வது இல்லை. ஏனென்றால் அது இயற்கையாக நடக்கும் செயல் என்பதேயாகும். அந்த இமைகள் மூடும் நொடி, அடுத்தக் கட்ட வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வுக்கானது என்பது போல் தான் வாழ்க்கையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் இந்த அதிசய நிகழ்வு நடைபெறும் போது, நமக்கான பார்வையில் எந்த தடங்களும் தெரிவது இல்லை. அதேபோல் உங்கள் வாழ்க்கையில் நோக்கத்தின் மீதுள்ள கவனம் சிதராமல் இருந்தால், இடர்படும் கவலைகளும் நொடியில் மறைந்து போகும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும், அன்றைய நாளில் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் செயல்பாடு எப்படி இருக்கிறதோ, அதனைக் கொண்டே, அவர்களுக்கான வெற்றியின் ரகசியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்களை மட்டுமே விதையுங்கள்.
வாழ்க்கையில் சிலர் புகழுக்காக வாழ்கின்றனர். சிலர் பணத்துக்காக வாழ்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களுக்காக வாழ்கின்றனர். இதன் தாக்கத்தால் எவரும் மனிதனாக, அதில் கொஞ்சம் மனிதம் கலந்து வாழவோ மறந்து போய் விடுகிறார்கள்.
ஏனென்றால் நாம் வாழும் வாழ்க்கை சிறப்பாக இருந்தால் புகழ் தானாகவே வந்து சேரும். உழைப்பின் வியர்வை துளிகள் மண்ணில் விழும் போது, பணம் தானாக கரங்களை பற்றும். அதோடு நேர்மை மற்றும் ஒழுக்கம் பேணி வாழ்ந்தால், இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையில் மகுடம் சூட்டும்.
வாழ்க்கையில் அடுத்தவர்களுக்காக வாழ நினைத்தால், உங்கள் மதிப்பு கை நழுவி போகும். மேலும் அடுத்தவர்களை நம்பி வாழ்ந்தால் உங்கள் சுயம் கரைந்து போகும். ஆகவே வாழ்க்கையை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்று நினைத்து வாழுங்கள்.
நதியின் ஆற்றலை பாருங்கள். கரைபுரண்டு ஓடும் போது, தண்ணீர் தந்து மனித வாழ்வாதாரத்தோடு இரண்டறக் கலந்து தன் பணியை செய்கிறது. அதுவே வற்றிவிடும் காலங்களில், மணல் தந்து மனித வாழ்வாதாரத்தோடு நிலைத்து நிற்கிறது.
அதேபோல் தான் மனித வாழ்க்கையும் என்பதை புரிந்து கொண்டு வாழப் பழகுங்கள். ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய ஸ்திரத்தன்மையை அல்லது தனது பங்களிப்பை விடாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஏற்றத்தில் மனிதம் கலந்து வாழுங்கள். இறக்கத்திலும் மனித மனத்தோடு இருக்கப் பழகுங்கள்!