

மற்றவர்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக அதாவது முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்றால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகள், சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளில் சில முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் வாழ்க்கையின் மூலமே மற்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.
1. உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது:
செய்வதை சொல்வது சொல்வதை செய்வது என்றபடி, நாம் சொல்லும் வார்த்தைக்கும் செய்யும் செயலுக்கும் இடையே ஒற்றுமை இருக்கவேண்டும். எதை சொல்கிறோமோ அதை முதலில் செய்து காட்ட வேண்டும். மற்றவர்கள் நம்மை நம்பும் வகையில் நம் செயல்பாடுகள் உண்மையானதாக இருக்கவேண்டும்.
சொல்வதற்கும் செய்வதற்கும் இடையில் வேறுபாடு இருக்கக் கூடாது. நம் வார்த்தைகளில் உள்ள நேர்மை மற்றவர்களை நம்மை மதிக்க வைக்கும். எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைப்பிடிப்பது மற்றவர்களிடம் நமக்கு பெரிய மரியாதையைப் பெற்றுத்தரும்.
2. தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பு:
தோல்விகளைக் கண்டு தொய்வடையாமல், கடினமாக உழைத்து முன்னேறுவதை மற்றவர்கள் பார்க்கும் பொழுது நம் செயல்களால் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். அத்துடன் எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
தோல்விகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு எப்படி முன்னேறுகிறோம் என்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். நம் கடின உழைப்பு மற்றவர்களுக்கு உத்வேகத்தை தரும்.
சவாலான சூழ்நிலைகளிலும் பின் வாங்காமல் நேர்மறையான எண்ணத்தோடு செயல்படுவதுடன், நம்மைவிட வயதில் சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ அனைவரையும் சமமாக மதித்து நடத்தும் மனப்பான்மை வேண்டும்.
3. சிறந்த கேட்பாளராக இருப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும்:
சுயநலம் இன்றி மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதும், எளியவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதும் நம்மை ஒரு சிறந்த தலைவனாகக் காட்டும். எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றாலும் எளிமையாகவும், அணுகக் கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.
மற்றவர்கள் கூறுவதை பொறுமையாகக் கேட்டு அவர்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது ஒரு நல்ல முன்மாதிரியின் அடையாளமாகும்.
4. தவறுகளை ஒப்புக்கொள்ளுதல்:
தவறுகள் செய்வது மனித இயல்பு. நம்மிடம் தவறு இருந்தால் அதை மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதை திருத்திக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது தினசரி பழக்க வழக்கங்கள், நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படும் நேர மேலாண்மை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பொறுமை ஆகியவை மற்றவர்களைக் கவரும்.
நம்மிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பது நம் மீது நம்பிக்கையையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும். வார்த்தைகளைவிட நம் செயல்களே சத்தமாகப் பேசும். எனவே நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே மற்றவர்களுக்கு நாம் தரும் ஆகச்சிறந்த பாடமாகும்.
5. சுயநலமின்றி செயல்படுவது:
சுயநலம் இன்றி மற்றவர்களின் வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வதும், பிறரது திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களை அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்குவிப்பதும் என நம் அன்றாட நடவடிக்கைகளில் இந்த பண்புகளை வளர்த்துக் கொள்வது நம்மை ஒரு சிறந்த ரோல் மாடலாகத் திகழவைக்கும். சுயநலம் இன்றி செயல்படுவது நம்மை ஒரு சிறந்த தலைவராக்கும்.
கோபம் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளிலும் நிதானமாக முடிவு எடுக்க பழகவேண்டும். நாம் மற்றவர்களிடம் எந்த மாதிரியான நல்ல குணங்களை எதிர்பார்க்கிறோமோ அந்த குணங்களின் வடிவமாக நாம் மாறுவதே ஒரு சிறந்த ரோல் மாடலுக்கான இலக்கணம் ஆகும்.
ரோல் மாடல் என்பது ஒரு நல்ல திசையைக் காட்டுகிற காம்பஸ் போன்றது. ஆனால் அந்தப் பாதையில் நம்முடைய சொந்த காலில், நம் ஸ்டைலில் நம்முடைய தனித்தன்மை மறைந்து போகாமல் நடப்பதுதான் உண்மையான வெற்றி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
படிப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடிய குணங்களை மாற்றுவதன் மூலம், வாசகர்கள் தங்கள் சமூகத்தில் இயற்கையான தலைவர்களாகவும், போற்றப்படும் முன்மாதிரிகளாகவும் மாறுவதற்கான வழிகளை அறிந்துகொள்கிறார்கள்.