நமது நண்பர்கள் வட்டத்திலோ அல்லது குடும்பத்திலோ சிலரை நாம் கவனித்திருக்கலாம். அவர்கள் மற்றவர்களின் கஷ்டங்களை மணிக்கணக்கில் காது கொடுத்து கேட்பார்கள். ஆனால் அவர்களிடம் உங்கள் பிரச்சனை என்ன என்று கேட்டால் நான் நன்றாக இருக்கிறேன் என்று மிகவும் சுருக்கமாக பதிலை முடித்துக்கொள்வார்கள்.
தங்களுக்குள் எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். எதனால் இவர்கள் இப்படி அனைத்தையும் தங்களுக்குள்ளேயே ரகசியமாக பூட்டி வைக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..
தனிமையை விரும்பும் மனநிலை!
இந்த மனநிலையை உளவியல் நிபுணர்கள் செல்ப் கன்சீல்மென்ட் (Self-Concealment) என்று கூறுகிறார்கள். அதாவது தங்களின் கஷ்டங்களை மற்றவர்கள் முன்னால் சொல்வதை இவர்கள் ஒரு பலவீனமாக கருதுகிறார்கள். வேலையிழப்பு அல்லது கடுமையான குடும்ப பிரச்சினை வந்தாலும் அதை தாங்களே தனித்து நின்று தீர்க்க வேண்டும் என்று தீவிரமாக நினைப்பார்கள்.
இது ஒரு வகையான ரகசிய பாதுகாப்பு கவசமாக அவர்களுக்கு செயல்படுகிறது. பரிதாபத்தை தேட இவர்கள் எப்போதுமே விரும்ப மாட்டார்கள்.
முந்தைய காலங்களில் இவர்கள் தங்களின் உணர்வுகளை யாரிடமாவது பகிர்ந்து அதன் மூலம் பெரிய ஏமாற்றத்தையோ அல்லது விமர்சனங்களையோ சந்தித்திருக்கலாம். அந்த கசப்பான அனுபவமே இவர்களை தங்களின் பிரச்சனைகளை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற மனநிலைக்கு தள்ளியிருக்கும்.
இதன் விளைவாக நான் என் பிரச்சனைகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்ற மனப்பான்மை இவர்களுக்குள் ஆழமாக பதிந்து விடுகிறது. இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க முற்படுவார்கள்.
பயம் & தயக்கம்!
பலரும் தங்களின் வலிகளை வெளியே சொல்ல தயங்குவதற்கு முக்கிய காரணம் மற்றவர்களின் விமர்சனங்கள் மீதான பயம் தான். நாம் அழுது புலம்பினால் நம்மை ஒரு பலவீனமான ஆளாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்ற ஒரு பெரிய தயக்கம் இவர்களுக்குள் எப்போதுமே இருக்கும்.
மேலும் நாம் சொல்லும் கஷ்டங்கள் மற்றவர்களுக்கு ஒரு பெரிய பாரமாக மாறிவிடுமோ என்று அதிகம் கவலைப்படுவார்கள். இத்தகைய தயக்கத்தால் தனிமையில் தொடர்ந்து தவிக்கிறார்கள்.
சிலர் தங்களுக்குள் நடக்கும் வலிகளை வெளியில் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே போட்டு புழங்குவார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். இதனால் இவர்களின் மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. தங்களின் உணர்ச்சிகளை ஒரு பெட்டிக்குள் வைத்து மூடுவதால் இவர்களின் உண்மையான மனநிலை என்ன என்பது இவர்களுக்கே சில நேரங்களில் புரியாமல் போய்விடும். இதனால் சமூக உறவுகளில் பெரிய இடைவெளி விழும்.
சரியான தீர்வு!
ஒருவர் தங்களின் கஷ்டங்களை யாரிடமும் பகிரவில்லை என்றால் அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று நாம் உடனே முடிவு செய்யக்கூடாது. அனைவருக்கும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு வலுவான எல்லைக்கோடு இருக்கும்.
சிலருக்கு தங்களின் பிரச்சினைகளை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவது பிடிக்கும். இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பேசுவது பிடிக்கும். இது முற்றிலும் இயல்பான ஒரு விஷயமே.
அதே நேரத்தில் உதவி தேவைப்பட்டும் யாரிடமும் பேசாமல் தனிமையில் வாடுவது நிச்சயமாக ஆரோக்கியமான ஒரு மனநிலை கிடையாது. உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் உங்களின் உணர்வுகளை கொட்டித் தீர்ப்பது மனதிற்கு மிகப்பெரிய நிம்மதியைத் தரும்.
உங்களுக்கான ரகசிய பாதுகாப்பு எல்லையை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எல்லைக்குள் நீங்களே தனிமையில் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் மனதை எப்போதுமே சுதந்திரமாக பறக்க விடுங்கள்.