

வாழ்க்கையில் சிலர் எதையும் கண்டுகொள்ளாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதை பெருமையாக நினைப்பவர்களும் உண்டு. சிலர் அடுத்தவர்கள் வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பிரச்னைகளை சந்திப்பதும் உண்டு.
வாழ்க்கையில் தனித்துவம் வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால், அதை மற்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ள முயற்சி செய்யாமல், தன்நிலை உணர்ந்து, அதற்கேற்ப தன்னை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து, தன் வழித்தடங்களில் பயணிக்கும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வாழ முயலுங்கள்.
வாழ்க்கையில் உதவி கேட்கும் நிலை வந்தால், அதை எப்படி, யாரிடம் கேட்பது என்பதை ஒரு முறைக்கு, பல முறை யோசித்து முடிவு எடுங்கள். அப்போதுதான் ஏமாற்றம் வந்தாலும் அதன் தாக்கம் உங்களை பாதிக்காது.
வாழ்க்கையில் தக்க நேரத்தில் உதவிய கரங்களை மறந்துவிடாதே. உதவி செய்தது பணமாக இருந்தால், தன்நிலை மாற்றிய அந்த தருணத்தை உணர்ந்து, செய்நன்றி மறக்காமல் அவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்றும் கவனச் சிதறல் படாதீர்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களின் ஸ்திரத்தன்மைக்கு, தங்கள் உழைப்பே முதல் அடித்தளம் என்பதை உணர்ந்து கொண்டால், தங்களை, வாழ்க்கை எத்தனை முறை புரட்டி போட்டாலும் மீண்டு வரமுடியும். அந்த தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கண்டிப்பாக உங்கள் உழைப்பின் வியர்வையில் துளிர்க்கும்.
வாழ்க்கையில் அழும் நேரம் வரும்போது, இது நிரந்தரமல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதுவாகவே விலகிப் போகும். மகிழ்ச்சியான நேரம் வரும்போது, இது உங்களுடைய கடினமான சூழ்நிலையை கடந்து வந்தபோது, நம் முகத்தில் பூத்தது என்று நினைத்து, தன்னடக்கம் கொண்டால், வாழ்க்கையில் அதுவே நிலைத்து உங்களோடு உறவாடும்.
வாழ்க்கையில் வெற்றி வரும்போது மமதைக் கொள்ளாத மனதை சீர்மை படுத்திக்கொள்ளுங்கள். அந்த நிலை, உங்கள் நிலை மாற்றமல் பார்த்துக்கொண்டு, உங்களுடைய உயர்வை உயர்த்திப் பிடிக்கும்.
வாழும் ஒவ்வொரு நாளும், இது தன்னுடைய நாள், இது தனக்கான வாழ்க்கை என்று நினைத்து கொண்டு வாழ்ந்தால், நேர்மறை எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் உங்களுக்குள் அழுத்தமாக பதியும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் வேரூன்றி வளரும்.
வாழ்க்கையில் கோபம் வரும்போது வார்த்தைகளை விடாதே. குழப்பமான சூழ்நிலை வரும்போது அவசரப்படாதே. தோல்வி வரும் போது வீழ்ந்து விடாதே. கோபத்தில் சூடாக வரும் வார்த்தைகளில் அன்பு இருக்காது. குழப்பத்தில் அவசரப்படும்போது, நிதானம் இருக்காது. தோல்வியில் வீழ்ந்து விட்டால், நேர்மறை சிந்தனை வற்றிப் போகும்.
வாழ்க்கையில் உங்களை வெறுப்பவர்களைக் கண்டு வேதனை படாதீர்கள். அவர்கள் உங்களைப் பொறுத்த வரை பட்டமரம். உங்களை நேசிப்பவர்களைக் கண்டு, வியந்து போகாதீர்கள். அவர்கள் உங்களைப் பொறுத்த வரை, உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வேர்கள்.
ஊர் என்ன நினைக்கிறது என்று நினைத்து வாழாமல், ஊர் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திக்காமல், ஒவ்வொருவரும் உயரும் உணர்வுகளோடு வாழுங்கள். ஊர் என்ன, ஊர் மக்கள் என்ன... இந்த உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும்!