

காலை கண்விழிக்கும் போதே ஏதோ ஒரு ரூபத்தில் சிக்கல் வலை பின்னிக் கொண்டிருக்கும். சரி... சிக்கலிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம்ன்னு கேட்கிறீர்களா...?
"ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டும் செய்யுங்கள்"
சமையலறையில் காய் வெட்டும் போது, அதை மட்டுமே செய்யுங்கள். அந்த சமயம் பாலை காய்ச்ச அடுப்பில் வைத்தால் பால் பொங்கி வழியும் அல்லது கத்தி விரலை வெட்டும். தவிர்க்க, ஒரு நேரம் ஒரு வேலை மட்டும் போதுமே.
"பிறர் சொல்லும் விஷயத்திற்கு செவிகளை கொடுங்க"
பேத்தியாவும் இருக்கலாம். பெரியம்மாவும் இருக்கலாம். பேத்தி, தோடு திருகு லூசாக இருப்பதை தெரிவிக்க, பாட்டி, கம்மல்ன்னு ஆரம்பிக்கும் போதே எரிச்சலை காட்டினால், பயந்து போய் நிறுத்தி விட, தோடு தொலைந்து விடும். பெரியம்மா, பார்வை மங்குகிறதுன்னு சொன்னால், டி.வி பார்க்குறதை நிறுத்துன்னு சொல்லாம, விசாரிங்க. காட்ராக்ட் வந்திருக்கலாம்.
"கேள்வி கேளுங்க"
சின்ன சந்தேகமானாலும் கேள்வி கேட்டு, தெளிவு படுத்திக்கோங்க. அதுல கிடைக்கும் விடையில் பிரச்னையே தொடர்பு எல்லைக்கு அப்பால் போகவும் வாய்ப்பிருக்கு. கிப்ட் வாங்கும்போது, யாருக்காக வாங்குகிறோமா அவர்களிடம் அந்த பொருள் இருக்குமோன்னு தோணுச்சுன்னா கேட்டு தெளிவு படுத்துவது தப்பில்லையே.
"மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்"
நேற்று வரை பட்டன் போன். இன்று ஆன்ட்ராய்டு போன். இது தான் மாபெரும் மாற்றம் இன்று. முதலில் குழப்பம் கும்மியடிக்கும். அப்படித்தான் இருக்கும்ன்னு மனசுக்கு சொல்லிக்கோங்க. அதற்கு பழகிக்கோங்க... மகிழ்ச்சி டான்ஸ் ஆடும்.
"தப்பை ஒப்புக் கொள்ளுங்கள்"
யாருமே 100% பர்பெக்ட் கிடையாது. ஆமா... அர்ஜன்ட்டா அனுப்ப வேண்டிய கொரியரை மற்ற வேலையில மறந்துட்டேன்னு பாஸ்கிட்ட ஒப்புக் கொண்டு ஸாரி கேட்கும்போது, பாஸ் மன்னிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
"சுத்தி வளைத்து பேச வேண்டாம்"
சுருக்கமாக நறுக்கு தெரித்தாற் போல் பேசுங்கள். பிரியாணி ரெடின்னு இரண்டே வார்த்தையில் சொல்ல வேண்டிய விஷயத்தை எந்தக் கடையில் காய் வாங்கியது என்பதிலிருந்து, ஹாட் பாக்ஸில் வைத்தது வரை சொல்ல வேண்டாமே...
"அமைதி அவசியம்"
கடலே பொங்கினாலும் கரையில் உடல் அலுங்காமல் நிற்கணும். உங்களோட, முயற்சி தவறு என யாரேனும் சொன்னால் கோபம் வரும். அதை வெளிக்காட்டாமல் கம்முனு இருந்து ஜெயிச்சுக் காட்டுங்க.
"இயலாமையை உணர்த்துங்கள்"
உங்களால், முடியாத காரியத்தை தயக்கமில்லாமல் சொல்லி, மாற்று ஏற்பாடு செய்யலாம். பணியிடத்தில் அதிக வேலை. களைப்புடன் வீட்டிற்கு வந்து, அப்பாடான்னு ஷோபாவில் உட்காரும் போது அழைப்பு மணி அழைக்கும். சோர்வுடன் கதவை திறந்தால், கும்பலாக விருந்தினர். எப்படி சமாளிப்பது? டோன்ட் ஒர்ரி.. அவர்களிடம், ரொம்ப டயர்டா இருக்கு.. எல்லோரும் ஹோட்டலுக்குப் போவோமே? என உங்கள் நிலையை தன்மையாக கூறி கேட்டால், அவர்களும் புரிந்து ஓகே சொல்லி விடுவார்கள்.
"புன்னகையுங்கள்"
முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கட்டும். அது தரும் நம்பிக்கை வேற லெவல்..பார்றா... இந்த முகம் எப்பவும் மலர்ச்சியா இருக்குன்னு பிரச்னைகள் அண்ட அஞ்சும். அப்புறமென்ன! எல்லா நாளும் உங்களுக்கு இனிய நாள் தான். ஆல் தி பெஸ்ட்.!