
மாற்றம் ஒன்றே மாறாதது. நாம் அனைவரும் அறிந்த தத்துவம் தான் இது. மாறாத ஒன்றென்று எதுவுமே இல்லை இந்தப் பிரபஞ்சத்தில். சூழல் மாற்றம், சுற்றி இருப்பவர்கள் மாற்றம், இவையெல்லாம் புற மாற்றங்கள். இவை தானாக நடந்துவிடும். நம்முள் நிகழும் மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதைத் தான் இக்கட்டுரை விளக்கவுள்ளது.
1. Breaking Point
மாறியே ஆக வேண்டும் என்ற புள்ளிக்கு ஒரு கட்டத்தில் நாம் வந்து சேருவோம். அது நாம் செயல்படும் விதத்தில் தேவைப்படும் மாற்றமாக இருக்கலாம். நம் நடத்தையில் தேவைப்படும் மாற்றமாக இருக்கலாம். நம் முயற்சிகளில் தேவைப்படும் மாற்றமாக இருக்கலாம். நம் சூழலில் தேவைப்படும் மாற்றமாக இருக்கலாம். எதுவாயினும் தற்போது இருப்பதில் இனி தொடர முடியாது; புதியதாய் வேறொன்று வேண்டும் அல்லது இருப்பதையே மேம்படுத்திப் புதிதாக்க வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாய் நீங்கள் உணர்ந்துகொள்வதே மாற்றத்தின் முதல் படி. இந்த breaking point, சில சமயம் உங்களை உடைக்கக்கூடியதாகக் கூட இருக்கலாம்.
2. அதிர்ச்சி Shock
இருப்பது சரியில்லை என்று தெரிந்து கொண்ட பிறகு முதலில் வருவது அதிர்ச்சி. ஏனென்றால் ‘இப்போது இருப்பதை’ உருவாக்க நிறைய நேரமும் பணமும் ஆற்றலும் நாம் முதலீடு செய்திருப்போம். அது சரியாக இல்லை என்பதை நாம் உணரும்போது நிச்சயமாக அதிர்ச்சிக்கு உள்ளாகுவோம்.
3. மறுப்பு Refusal
மனம் ஒரு குரங்கு தானே. இத்தனை நாளாக உருவாக்கியது சரியில்லை என்று உணர்ந்து கொண்டாலும் அதை மனம் உடனே ஏற்றுக் கொண்டுவிடுமா? இல்லை. இருப்பது சரியாகத்தான் இருக்கிறது என்று மனம் வாதாடும். இருப்பதை மாற்ற வேண்டாம் என்று மன்றாடும். மாற்றத்துக்கு முதலில் மறுப்பு சொல்வதே மனித இயல்பு.
4. பதற்றம் Anxiety
இருப்பது சரியில்லை. மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்ற கட்டம் வந்த பிறகு மனம் பதற்றமடையும். மீண்டும் முதலில் இருந்தா? என்று மனம் அங்கலாய்க்கும். இழப்புகளைப் பட்டியல் போட்டுப்பார்க்கும். பதறும்.
5. Emotional Fall
மாற்றத்தின் போது இருப்பதை இழந்தாக வேண்டுமே. இழப்பு நம்மை உணர்வெழுச்சிக்கு உள்ளாக்கலாம்.
6. மன அழுத்தம் Stress
உணர்வெழுச்சி நிலை மன அழுத்தம் வரை நம்மைக் கொண்டு போகலாம். மன அழுத்தம், நம்மை நாமே தகுதியற்றவராய் நினைத்துக் கொள்ளத் தூண்டும். குற்ற உணர்வு கொள்ளச் செய்யும். மாற்றத்தைக் கண்டு அஞ்சும். மாற்றத்தை எதிர்க்கும். மன அழுத்தம் ஆட்டிப்படைக்கும்.
7. முடிவு Decision
காற்றழுத்தம் கரை கடந்துதானே ஆகவேண்டும். மன அழுத்தமும் மங்கி, மாறித்தான் ஆக வேண்டும் / மாற்றித்தான் ஆக வேண்டும் என்ற உண்மையை ஒருவழியாக மனம் ஒப்புக் கொள்ளும். சரி மாறலாம்/மாற்றலாம் என்ற முடிவினை எடுக்கும். இனி இருப்பதைப் பிடித்துக்கொண்டு தொங்குவதில்லை என்று முடிவு செய்யும்.
8. கோபம்/பழிவாங்கல் Anger
மாற்றத்தை நோக்கிப் போகும் வழியில் கோபங்களைப் பதிவு செய்யவும் பழி தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு வாய்த்தால் விடுவதில்லை நம் மனம்.
9. மாற்றம் Change
இந்தப் படிநிலையில் தான் உண்மையில் நாம் மாற/மாற்ற ஆரம்பிப்போம். Transformation நடைபெறும்.
10. நம்பிக்கை, முன்னேற்றம், புதுமை Progress
கொண்டுவந்திருக்கும் மாற்றம் நன்மைக்கே என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படும். அந்த மாற்றம் முன்னேற்றப் பாதைக்கு நம்மை இட்டுச் செல்லும். புதியவைகள் வந்திணையும். மாற்றம் தவிர்க்க முடியாதது. திறந்த மனதோடு மாற்றத்தை விரும்பி ஏற்கும் போது முன்னேற்றம் தானாக வரும்.