

முன்னேற முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு, எதிர் கொள்ளும் திறமை போன்றவைகள் அவசியம் தேவை. இன்றைய வெகுவேகமாக நகர்ந்து செல்லும் போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் தாக்குப் பிடித்து முன்னேறுவது என்பது அவ்வளவு சுலபமான செயல் இல்லை என்று பெரும்பாலனோர் அறிந்த ஒன்றாகும்.
பல்வேறு காரணங்களால் மாற்றங்கள் எங்கோ நடைப்பெற்றாலும் துரிதமாக பரவி விடுகின்றது. அதனால் நன்மைகள் இருந்தாலும், விரைவாக காலாவதியாவதை (outdated) தவிர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே முன்னேறுவது இன்றைய கால கட்டத்தில் பலவகை சிக்கல்கள், இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இவற்றை சமாளித்து கடந்து செல்ல உறுதியான மனது, திடமான திட்டமிடுதல், சூழ்நிலை, நிகழ்வுகளுக்கு ஏற்ப குறுகிய காலத்தில் திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்தி முன்னேற வேண்டிய திறமை, கட்டமைப்பு, கையாள வேண்டிய தைரியம், சப்போர்ட் சிஸ்டம் ஆகியவை தயார் நிலையில் இருப்பது அவசியம் மட்டும் அல்லாமல் தேவையும் ஆகும்.
இவைகள் தடங்கல் இல்லாமல் முன்னேறி செல்ல உதவும் சமயத்தில், முன்னேற துடிக்கும் மற்றும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளும் நபர் முக்கியமாக கவனத்தில் கொண்டு தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டிய இரண்டை பற்றி இங்கு காண்போம்.
ஒதுக்கவும், ஒதுங்கவும்
பழகிக்கொள்வது குறிப்பாக இன்றைய போட்டிகள், பொறாமைகள் தலை தூக்கி நிற்கும் சூழ்நிலைகளுக்கு அத்தியாவசியமாகின்றது என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.
மற்றவர் முன்னேறுவதை தடுக்கவும், தாண்டி செல்லவும் போட்டியாளர்கள் கட்டாயம் முயல்வார்கள் என்பதில் மாற்று கருத்து குறைவாகவே இருக்கும். தகுதியானவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலையில் ("Survival of the fittest") மற்றவர்கள் முன்னேறி செல்வதை தடங்கல்களாக கருதுபவர்கள் அத்தகைய தடங்கல்களை தவிர்க்க அல்லது களை எடுக்க எல்லா வகை முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.
அப்படிப்பட்ட நபர்கள் முன்னேற முயலும் தனி நபரின் வளர்ச்சி குறித்தும், திட்டங்கள், செயல்பாடுகள், அவர்களுடைய வாடிக்கையாளர்கள், தொழில் சம்பந்தமான பல முக்கிய தகவல்கள், விவரங்களை அறிந்துக் கொள்ளவும், திரட்டவும் இந்த நபரின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளது போல நெருங்கி பழகி தங்களுக்கு தேவையானவற்றை அறிந்துக் கொண்டு இவரது முன்னேற்றம் நடைபெறாமல் செய்து விட்டு நகர்ந்து செல்வார்கள்.
அத்தகைய எண்ணங்கள் கொண்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவது (ignore / avoid) மிகவும் அவசியம். அதே போல் தீய எண்ணங்களுடன் கூட்டு சேர முற்படும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது (keep away) சால சிறந்தது. அத்தியாவசியமும் கூட. இப்படிப் பட்ட நபர்கள் தங்கள் பேச்சு மற்றும் வாத திறமைகளால் கவர்ந்து இழுக்கும் படி தேன் ஒழுக இனிமையாக பேசி, புள்ளி விவரங்கள் மேற்கோள்கள் காட்டி அசத்தி கூட்டு சேர்ந்து குறிப்பிட்ட நபரின் அதி முக்கிய தகவல்களை அறிந்துக் கொண்டு நட்டாற்றில் விட்டு விட்டு சென்று தவிக்க விட்டு விடுவார்கள்.
மேலும் இன்னல்கள், சிக்கல்கள், பணம், நேரம், பொருள் விரயங்கள், இழப்புக்கள் இவற்றை சந்தித்து கடக்க வேண்டியிருக்கும். எனவே முன்னேற நினைப்பவர்கள் ஒதுக்கவும், ஒதுங்கவும் அறிந்து, தெரிந்துக் கொண்டு லாவகமாக கையாள்வது இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமாக அமையும். ஒதுக்குவதையும், ஒதுங்குவதையும் தொடர்ச்சியாக மறக்காமல் கடைபிடிப்பவர்களால் முன்னேறி செல்வது இயல்பாக அமையும்.