குட்டி ஸ்டோரி: விலைமதிப்பற்ற இரு கற்கள்!

வாழ்க்கையில் நேர்மையும் சுயமரியாதையும் சூடுங்கள்!
The Merchant and the Camel Seller
The Merchant and the Camel SellerImg credit: AI Image
Updated on

ஒரு நேர்மையான வியாபாரி சந்தைக்கு சென்று, தன் பயணத்தின் தேவைக்காக ஒட்டக வியாபாரியிடம் தனக்கு பிடித்த ஒட்டகம் ஒன்றை பேரம் பேசி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.

வியாபாரி தன் இல்லத்திற்கு வந்ததும் தன்னுடைய வேலைக்காரனை அழைத்து, ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன்னுடைய வேலையாளை விட்டு ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான். ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், 'பொத்' என ஏதோ கீழே விழுவதை கண்டு அதனை எடுத்துப் பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. அதனை பிரித்துப் பார்த்த வேலைக்காரனுக்கு, ஆச்சரியத்தில் அவன் கண்கள் அகன்றன. அந்த பையினுள் விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள் இருந்தன. அதை எடுத்து முதலாளியிடம் கொடுத்தான்.

அவனிடமிருந்து அந்த பையை வாங்கிய வியாபாரி, அதனுள் நவரத்தின கற்கள் இருந்ததை பார்த்துவிட்டு, மனம் கொஞ்சமும் சஞ்சலம் அடையாமல், உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அந்த பையுடன் கிளம்ப எத்தனித்தான்.

"ஐயா, இந்த பொக்கிஷம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானித்து, இதனை தங்களுக்கு கிடைக்கும்படி செய்து இருக்கிறான். இது என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. என் குடும்பம் மூன்று தலைமுறையாக உங்கள் குடுபத்தோடு வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை எந்த குறையும் இல்லாமல் உங்கள் குடும்பம் எங்களுக்கு நிறைவாக வாழ்க்கை தந்து வருகிறது. அதனால் நான் இதை வெளியே யாருக்கும் சொல்லமாட்டேன் ஐயா. தானாக வந்த இந்த பொக்கிஷத்தை தாங்களே வைத்து கொண்டால் என்ன?" என்று வற்புறுத்தினான்.

இதையும் படியுங்கள்:
மறைந்த பூசணிக்காயும் நிலைத்த தர்மமும்...
The Merchant and the Camel Seller

வியாபாரியோ தன் வேலையாளிடம் அதற்கு தக்க பதிலடி கொடுத்தார். "நீயும் சரி, இதற்கு முன் வேலை செய்த உன்னுடைய முன்னோர்களும் சரி, நேர்மையாக உழைத்து வந்ததை நினைவு கூர்ந்து, நீ இப்படி பேசலாமா?" என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போனார்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், 'இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா..!' என்று வியந்து, "உங்கள் நேர்மையை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்" என்று சொல்லிட்டு, "தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள்" என்று நீட்டினான் அந்த ஒட்டக வியாபாரி.

அந்த வியாபாரியோ சிரித்துவிட்டு, பிறகு, "ஐயா.. உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே நான் இரண்டு விலை மதிப்புமிக்க ரத்தினங்களை வைத்து கொண்டேன்" என்றான்.

உடனே, ஒட்டக வியாபாரிக்கு சந்தேகம் வந்தது. பையில் இருக்கும் கற்களை எண்ணி பார்த்தான். அதில் எதுவும் குறையாமல் சரியாக இருந்ததைக் கண்டு மனம் குழம்பினான்.

"ஐயா.. நீங்கள் ஒண்ணும் குழம்ப வேண்டாம். உங்கள் நவரத்தினங்கள் எதையும் நான் எடுக்கவில்லை. நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும்... அவை நேர்மை மற்றும் சுயகெளரவம்" என்றான் கம்பீரமாக.

ஒருவன் நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தாமல் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் நேர்மையையாய் வாழ்ந்து, அதன் அருமையும் பெருமையும் நாம் உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையையும் சுயகெளரவத்தையும் விட்டு இம்மி அளவுகூட அதிலிருந்து விலகமாட்டேம் என்பதை இந்தக்கதை நமக்கு பாடம் சொல்லும்!

logo
Kalki Online
kalkionline.com