

அன்றாட வாழ்க்கையில் பல நிகழ்வுகளை நாம் சந்தித்து வருகிறோம். அவையனைத்தும் ஏதாவது சில விளைவுகளை நமக்குள் ஏற்படுத்தும். அது நல்லதா... நல்லது அல்லாததா.. என்று நம் மனம் தான் தீர்மானிக்கும்.
சில விஷயங்களில் மனம் உடனுக்குடன் தீர்ப்பு சொல்லும். இப்படி மனசுக்குள் வந்து சேர்ந்த விஷயங்களால் சில நேரம் சோர்வு வரும். அந்த நேரத்தில் ஒரு குயில் 'குக்கூ...குக்கூ..' இனிமையாக கூவுவதை கேட்டால் எப்படி இருக்கும். உடல் முழுவதும் ஒரு பரவசம் வரும். அந்த நிலை ஏற்படவில்லை என்றால் மனம் காயப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
குயிலோசை அந்த காயத்திற்கு சிறந்த மருந்து. இலக்கியங்களில் குயிலுக்கு தனியிடமுண்டு.
"கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே..."
திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை போற்றி மாணிக்கவாசகர் பாடிய 'திருப்பள்ளி எழுச்சி' பாடல் ஆகும். குயில் கூவுவதை தான் முதன்மையாக சொல்லி உள்ளார்.
இயக்குனர்கள் சந்தான பாரதி, பி.வாசு இருவரும் இணைந்து இயக்கிய 'மெல்லப் பேசுங்கள்' படத்தில் 'செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு' பாடலின் ஆரம்ப வரிகளாக வரும். படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி. இறைவனுக்கான ஒரு பாடலை கொஞ்சம் கூட மாற்றாமல் தேவையான வரிகளை எடுத்துக் கொண்டு அழகான மெட்டமைத்து காதல் பாட்டாக மாற்றினர். இன்றுவரையில் அனைவரும் பாடும் பாடலாக இருக்கிறது.
ராஜாவின் ராஜாங்கத்தில் குயிலுக்கு தனியிடமுண்டு.
"குயிலே.. குயிலே.. பூங்குயிலே..." (ஆண்பாவம்)
"குயிலே குயிலே குயிலக்கா... (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)
"குயில் பாட்டு ஓ வந்ததென்ன... (என் ராசாவின் மனசிலே)
"குயிலுக்கு குப்பம் குயிலுக்கு குப்பம் (என்னுயிர்த் தோழன்)
"குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் (காதல் ஓவியம்)
இந்த இனிமையான குயில் பாட்டுகள் அனைத்தும் இசைஞானி தந்தது. குயில் என்றதும் மகாகவியின் 'குயில் பாட்டு' நினைவுக்கு வரும்.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை அருகில் இருந்த ஒரு தோப்புக்கு பாரதி அடிக்கடி சென்று வருவார். அங்கு குயில் கூவுவதை தினமும் கவனித்து வந்தார். குயில் பாட்டு உருவானது.
"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
குயில் பாட்டின் பிரபலமான வரிகள் இதுதான். குயிலுக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் பல கவிஞர்கள் காதல் பாடல்களில் குயிலை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.
'காணிநிலம் வேண்டும்' என்று பராசக்தியிடம் கேட்கும் போது கூட
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் பட வேண்டும்..." என்று பாடியுள்ளார்.
நாவல் போட்டி ஒன்றில் பரிசு பெற்ற நாவல் 'பப்பா மம்மா குக்கூ'. அதை எழுதியவர் வேலூரை சேர்ந்த திரு.வெ.ராம்குமார் அவர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை அவளின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக வேலூர் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள்.
இயற்கை சூழலோடு அமைந்திருக்கும் அந்த மருத்துவமனையின் மரம் ஒன்றில் பறவைகள் அமர்ந்து சத்தமிட்டு கொண்டிருக்க, அங்கே ஒரு குயில் அமர்ந்திருந்து 'குக்கூ..' என்று அழகாக கூவி கொண்டு இருப்பதையும், அந்த சத்தத்தில் ஈர்க்கப்பட்ட அந்த பெண் நின்று அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து மகிழ்ச்சியுடன் அவளும் 'குக்கூ..' என்று உச்சரிக்க முயற்சி செய்து சில வினாடிகளில் சரியாக உச்சரிப்பதாகவும், ஓரிரு வார்த்தைகளை தவிர உச்சரிக்காத அவள் முதல் முறையாக இன்னொரு வார்த்தையை உச்சரிக்க அந்த குயில் காரணமாக இருப்பதாகவும் அந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறார். மனநலம் பாதித்தவர்களையும் ஈர்க்கும் சக்தி குயிலுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
குயிலுக்கும் நம் மனதுக்கும் மிகப்பெரிய பந்தம் இருக்கிறது. அது நமக்கு இலவச சிகிச்சை அளிக்கும் ஒரு மனநல மருத்துவர். 'கூவின பூங்குயில்' இந்த இனிமையான ஆரம்ப வரிகளை எடுத்து நமது செல் போனில் சேமித்து நெருக்கடியான நேரங்களில் கேட்டோம் என்றால் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது.