
இடைவிடாத வேலை, தொடர்ந்த போன் கால்கள்ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாது சீரியல்களைப் பார்த்தல். வீடுகளில் நெருக்கி அடித்து வைக்கப் பட்டிருக்கும் மேஜை நாற்காலிகள் எல்லா மூலைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கான பூச்செடிகள். அப்பப்பா...
வாழ்க்கையில் ஒரு நிம்மதி வேண்டாமா வேண்டும் என்று உடனே தலையை ஆட்டினால் நாம் செய்ய வேண்டியது ஜப்பானிய உத்தியான மா வைத் தான்.
மா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு இடைவெளி என்று பொருள்.
எங்கும் மா! எதிலும் மா! – இதைக் கடைப்பிடியுங்கள் என்கிறது இந்த ஜப்பானிய உத்தி.
தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு அலுப்புடனும் சலிப்புடனும் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வப்பொழுது சற்று இடைவெளி விடுங்கள். மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு சென்று அமைதியாக இருங்கள் என்கிறது மா.
நவீன உள்வியல் ஆய்வுகள் கூட இப்படி தொடர்ந்த வேலைக்கு நடுவே அவ்வப்பொழுது சற்று சும்மா இருப்பது கவன சக்தியை அதிகரிக்கும் வேலையில் திறனைக் கூட்டும் என்கின்றன.
வீட்டில் முழு இடத்தையும் எதையாவது வைத்து ஆக்ரமிக்காமல் நிறைய இடைவெளி விடுவது அழகைக்கூட்டும்.
ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் கூட இடைவெளி விடுவது ஜப்பானிய மரபு. சமையலறையில் மா வைக் கடைப்பிடித்தால் ரிலாக்ஸாகச் செய்யப்படும் சமையலின் தரம் நிச்சயம்கூடும்.
சளசளவென்று பேசாமல் நடுவில் சற்று இடைவெளி விடுங்கள். பேச்சில் மெருகு கூடும்.
இசையில் கூட ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்க்கலாம். நோட்ஸின் நடுவே உள்ள இந்த இடைவெளிகள் இசையை உயரத்தில் தூக்கி நிறுத்துபவை.
டிஜிடல் உலகத்தில் எப்போதும் போன். இதைத் தவிர்த்து தூங்கும்போது படுக்கை அறையின் வெளியில் போனை வைத்தால் அதுதான் மா தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடைவெளிவிட்டால் அதுதான் மா.
மா வைப் பின்பற்றுவதால் லயம் கூடுகிறது. வாழ்க்கையில் சமச்சீர் தன்மை ஏற்படுகிறது.
ஜப்பானியக் கட்டிடக்கலையிலும் ஓவியக்கலையிலும் கூட இந்த மா ஒளிர்விடுகிறது.
மேற்கத்தியக் கட்டிடங்களில் ஆடம்பரமும் அலங்காரமும் இருக்கும். ஆனால் ஜப்பானியக் கட்டிடக் கலையிலோ எளிமை தாண்டவமாடும்.
நிறைய இடைவெளிகள் விட்டு விசாலமான கூடங்கள் அமைக்கப்படும். ஓவியத்திலும் கூட வண்ணங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பூசி மெழுகாமல் ஆங்காங்கே இடைவெளி இருக்கும்ஓவியத்தின் சீர்மையைக் கூட்டும்.
ப்ரஜ்ஞானபாரமித ஹிருதய சூத்ரா என்பது புத்தமதத்தினர் அனைவராலும் ஓதப்படும் ஒரு சூத்திரம். அதன் ஆரம்பமே சூன்யமே வடிவம். வடிவமே சூன்யம் என்ற பேருண்மையைச் சொல்லி ஆரம்பிக்கிறது. இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சூன்யமும் கூட. ஆகவே எதிலும் ஒரு இடைவெளி வேண்டும். இந்த சூத்திரத்தின் செய்முறையே மா.
அரக்கப்பரக்க ஓடாமல் கசமுசவென்று எதையும் அடுக்காமல் நிதானமாக உரிய இடைவெளியை விடுங்கள். இதை கற்றுக்கொள்வதற்கு தியானம் பெரிதளவும் உதவும். தக்கவர்களிடம் முறையாகப் பயிற்சி பெற்ற மூச்சுப் பயிற்சியும் உதவும்.
உணர்வுடன் கூடிய மௌன அநுஷ்டானம் மாவின் பயனைத் தரும்.
சும்மாதான் இந்த சும் மா இருப்பதைக் கடைப்பிடித்துப் பாருங்களேன். அம் மா ஆ.. இவ்வளவு பயன் இதற்கு உண்டா என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள்.