புத்திசாலி பாட்டியும் - ஏமாற்ற நினைத்த வைத்தியரும்!

Grand mother and doctor
Grand mother and doctorImg credit: AI Image
Updated on

நேரடியாக எந்த விஷயத்தையும் பேசினால் சட்டென்று புரிந்து கொண்டு பதில் பேசி விடுவோம். ஆனால் சிலர் ஒரு விஷயத்தை மறைமுகமாக கூறுவார்கள். அதை சூசகமாக கூறுவது என்பர். அதன் உள்நோக்கத்தை சரியாக புரிந்து கொள்வது எல்லோராலும் இயலாது. சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்படுவர். புத்திசாலிகள் அதை அழகாக புரிந்து கொண்டு ஆச்சரியமூட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். ஆனால் அப்படி சொல்லும் வார்த்தைகள் திரும்பத் திரும்ப எல்லா இடத்திலும் அதே போல் சொல்வது போல் தோன்றும். அதை ஏன் வலியுறுத்தி அப்படி கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட ஒரு குழப்பத்தை கூறுவது தான் இந்த கதை. அந்தக் கதை இதோ:

அந்த கிழவி நல்ல உறுதியானவள். உடல் மட்டுமின்றி உள்ளமும் உறுதியானவள். ஆனால் அவளுடைய கண்பார்வை திடீரென்று இல்லாமல் ஆகிவிட்டது. அவள் வசதி படைத்தவள் என்பதனால் நிறைய அளவில் சாமான்கள் வாங்கி வைத்திருந்தார். சிறந்த முறையில் கண்பார்வையை பெற்று தருவதாக ஒரு வைத்தியர் முன் வந்தார். தனக்கு கண்பார்வை கிடைத்தால் தான் அந்த மருத்துவனுக்கு அவன் கேட்ட பணத்தைத் தர முடியும் என்றும் தன்னால் தம் பொருட்களை கண்கொண்டு பார்க்கும்படி அந்த மருத்துவர் தன் கண்களை குணப்படுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தன்னால் எதையும் கொடுக்க முடியாது என்றும் மிகவும் திட்டவட்டமாகக் கூறினாள்.

அந்த வைத்தியர் கிழவியின் உறுதியான பேச்சிற்கும், அவள் சொன்ன விதிகளுக்கும் உட்பட்டு குணப்படுத்துவதற்காக சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். ஆனால், கிழவிதான் கண் பார்வை அற்றவள் ஆயிற்றே என்று எண்ணிய அந்த வைத்தியர் ஒவ்வொரு முறை கிழவியின் வீட்டிற்கு வரும்போதும், வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விடுவார்; பார்வையற்ற கிழவி தானே இவள் தன்னுடைய பார்வையை பெறுவதற்கு முன்னால் அத்தனை பொருட்களையும் எடுத்துச் சென்று விட வேண்டும். அதன் பின்னர் அவள் பார்வை பெற்ற பிறகும் கிழவியிடம் இருந்து பேசியபடி பணத்தையும் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணியவராக பாட்டிக்கு குணம் கிடைக்கக் கிடைக்க அவள் வீட்டில் இருந்த பொருட்கள் பெரும்பாலானவை அப்புறப்படுத்தப்பட்டன.

கிழவிக்கு கண் பார்வை தெரிய ஆரம்பித்தது. அவள் வீட்டில் உள்ள முக்கியமான பொருட்கள் எதையும் காணவில்லை. அந்த வைத்தியர் தான் எடுத்துச் சென்றிருப்பார் என்பதில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே அந்த திருட்டுக் குணம் படைத்த வைத்தியருக்கு தான் பேசியபடி எந்தத் தொகையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு பண்ணி விட்டாள்.

ஒருநாள் மெல்ல வைத்தியர் வந்து கிழவியிடம் பணம் கேட்டார்.

"அம்மா நான் சொன்னபடி உங்கள் கண்கள் இரண்டையும் குணப்படுத்திவிட்டேன். ஆகவே, நீங்கள் சொன்னபடி எனக்குச் சேர வேண்டிய பணத்தைத் தாருங்கள்" என்றார்.

பாட்டி நிதானமாக பேசினாள்: "வைத்தியரே நான் என்ன தெரியுமா உங்களிடம் சொன்னேன். கண் பார்வை கிடைத்தும் என்னுடைய பொருட்களை எல்லாம் பார்க்க முடிந்தால் தாங்கள் கேட்ட பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டது உண்மைதான். முன்னால் கண் பர்வை இல்லாத காரணத்தால் எந்தப் பொருளையும் பார்க்க முடியவில்லை. இப்போதும் என்னால் எந்த பொருட்களையும் பார்க்க முடியவில்லை.

ஆமாம், பார்க்க முடியாத அளவில் செய்து விட்டீர்களே! நான் மிகவும் தெளிவாகச் சொன்னேன். என்னால் என் பொருட்கள் அனைத்தையும் பார்க்க முடிந்தால் தான் பணம் தருவேன் என்று திட்டவட்டமாகக் கூறினேன். இப்போது நான் கண்பார்வை பெற்றும் பெறாதவளாகத் தானே இருக்கிறேன். ஆகவே, பணம் எதுவும் தர மாட்டேன். நீங்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்" என்று உறுதிபடவும், கொஞ்சம் ஆத்திரமுடனும் கூறி முடித்தாள். பாட்டி இவ்விதம் கூறுவாள் என்று வைத்தியர் எதிர்பார்க்கவே இல்லை.

"அம்மா இதுதான் உங்கள் முடிவா? நான் உங்கள் மீது வழக்கு தொடர்ந்து தான் பணம் வாங்க வேண்டும் என்று நீங்களே சொல்லுகிறீர்கள். ஆகவே அப்படியே செய்கிறேன். நான் வழக்குத் தொடர்வதைப் பற்றி நீங்கள் பிறகு என் மீது வருத்தப்படக்கூடாது" என்றார் வைத்தியர்.

"ஒரு வருத்தமும் இல்லை. நான் நீதிபதியிடம் இதைத்தான் சொல்லப் போகிறேன் அவர் எவ்விதம் தீர்ப்பளிக்கிறார் என்று பார்ப்போம்" என்றாள்.

வைத்தியர் சொன்னது போன்று பாட்டியின் மீது வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி பாட்டியை விசாரித்த போதும் அதையே தான் கூறினாள். "நீதிபதி அவர்களே நான் என்னுடைய வாக்குப்படித்தான் இப்போதும் கூறுகிறேன். என்னுடைய கண்பார்வையைப் பெற்று நான் என்னுடைய பொருட்களை எல்லாம் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோபத்தில் ஏன் கத்துகிறோம்? - ஒரு வாழ்வியல் பார்வை!
Grand mother and doctor

அதாவது பொருட்களை எல்லாம் பார்க்க முடியும் அளவில் என் கண் பார்வை இருந்தால் தான் நான் பணம் தருவேன் என்றேன். இப்போது எந்த பொருட்களையுமே என்னால் பார்க்க முடியவில்லையே, நான் எவ்விதம் இவருக்குப் பணம் கொடுப்பேன்? அதாவது நான் பார்க்கும் வண்ணம் என்னுடைய வீட்டில் இருந்து இவர் எடுத்துச் சென்ற பொருட்களை எல்லாம் திரும்ப கொண்டு வந்து வைத்து விட வேண்டும். அப்படி (வைத்த பொருள் வைத்தபடி என்பதை கூறாமல்) இருந்தால் உடனடியாகப் பணத்தைக் கொடுத்து விடுவேன்" என்றாள்.

நீதிபதிக்கும் கொஞ்சம் குழப்பம் தான் ஏற்பட்டது. பின்னர் சூசகமாக பாட்டி சொல்வதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு உண்மைதானே என்று எண்ணிப் பார்த்தார்.

"என்ன வைத்தியரே, பாட்டி சொன்னது உண்மைதானே? நீர், அவர்களுடைய வீட்டிலிருந்து பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றதாகவும் இப்போது எதுவும் இல்லாததால் தான் இவர்கள் பணம் தர மறுக்கிறார்கள் என்றும் தெளிவாகக் கூறுகிறார்கள். அவர்கள் சொன்னது போன்று அவர்களுடைய பொருட்களை எல்லாம் கொண்டு கொடுத்து விட்டு, அவர்களிடமே உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்; பாட்டி சொன்னது நியாயம் தான். சட்டப்படி இந்த பாட்டி தான் உங்கள் மீது வழக்கு தொடர வேண்டும். தனக்குக் கண் பார்வை இல்லாதிருந்த வேளையில் அவர்களுடைய வீட்டில் இருந்து அத்தனை பொருட்களையும் திருடி விட்டதாக, நல்ல காலமாக உம்மை விட்டு வைத்திருக்கிறார். பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுச் செல்லலாம்" என்று நீதிபதி கூறிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
உறவுகள் திடீரென உடைய இதுதான் உண்மையான காரணம்! அதிர்ச்சியூட்டும் உளவியல் உண்மைகள்!
Grand mother and doctor

ஏமாற்ற எண்ணியதுடன், வார்த்தையின் அர்த்தம் புரியாதது போல் நடித்த அந்த மருத்துவர் தலைகுனிந்த வண்ணம் எதுவுமே பேச முடியாமல் சென்றார். பாட்டி, தான் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியுடனும், நன்றிப் பெருக்குடனும் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்து விட்டுச் சென்றாள்.

வைத்த பொருள் வைத்தபடி இருக்க வேண்டும் என்று பாட்டி நேரடியாகக் கூறி இருந்தால் விவாதத்திற்கு வேலையே இருந்திருக்காது. கிராமத்தில் அப்பொழுதெல்லாம் பள்ளிக்குச் சென்று விட்டு வரும் சிறுவர், சிறுமிகளை அழைத்து மறைமுகமாக ஒரு கேள்வியை கேட்பார்கள். ஒரு கோழிக்கு எத்தனை கால்கள் என்பார்கள். நாம் இரண்டு கால் என்போம். அப்போ ஒன்ற கோழிக்கு என்பார்கள் மூன்று கால் என்று சொல்லி மாட்டிக் கொள்வோம். அப்புறமாகத்தான் கூறுவார்கள் மழை பெய்தால் ஒண்டிக் கொள்கிறதே அந்த கோழிக்கு என்று. பிறகு இரண்டு கால்கள் தான் என்று நாம் சொல்லுவோம். அந்த சொல்லில் உள்ள சூசகத்தைப் புரிந்து கொண்டு எந்த இடத்திலும் விழிப்பாக, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட மோட்டிவேஷனல் கதைகள் தான் இவை.

logo
Kalki Online
kalkionline.com