நம் நாடான இந்தியா, உலகின் மூன்றாம் இடத்தை நோக்கி பயணிக்கிறது; இன்னும் சில ஆண்டுகளில் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி விடும் என்கிற சொல்லாடலை தினந்தோறும் கேள்விப்படுகிறோம்.
நாம் சுதந்திரம் பெற்று ஆண்டுகள் நிறைவடைய போகும் தருணத்தில் இது போன்று பேச்சுக்கள், செயல்கள் நிகழ்வது பற்றி சற்று சிந்திப்போம். ஒரு தனி மனிதன் தனது வயதை நெருங்குவது என்பது முதுமை என்றும், போற்றுதலுக்கு வணங்குவதற்குறிய வயது என்றும் கொள்ளலாம். ஒரு நாட்டிற்கு அப்படி சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் வளர்ச்சியும், தனிமனித வளர்ச்சியையும் ஒப்புநோக்கி அலசுவோம்.
ஒரு நாட்டிற்கு சுதந்திரத்தின் முன்னும் பின்னும் வரலாறும் வாழ்வியலும் இருந்தாலும், தனக்கான ஒரு அடையளத்தை, சட்ட திட்டங்களை, வளர்ச்சி பாதையை, வகுத்துக்கொள்ள சுதந்திரமே ஆரம்பப்புள்ளி.
அதே போல, தனிமனித வாழ்வு என்பது முற்பிறவியின் தொடர்ச்சி, பாரம்பரியத்தின் நீட்சி என்று சொன்னாலும், ஒருவருக்கு பிறப்பு தான் தொடக்கத்தை கொடுக்கிறது. அவனது தனிப்பட்ட வாழ்க்கை தொடங்கும் இடமும், நேரமும் அதுவே.
கிட்டதட்ட ஒரே சமயத்தில் ஒரே பிராந்தியத்தில் இடம்பெற்றாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வித வளர்ச்சி மற்றும் கலாச்சார மாறுபாடுகளை கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு சில குறியீடுகளில் நிரம்ப வளர்ச்சியும் மற்ற சிலவற்றில் தேவையான வளர்ச்சியை எட்டாமலும் இருக்கிறன்றன சில நாடுகள்.
சீரான பரவலான வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் பெற்று முன்னேற 80 ஆண்டுகள் போதுமானது தான். சிறிய நாடுகள் பலவும் இவற்றை ஐம்பது வருடத்திற்குள் அடைந்து விட்டதையும் நிதர்சனமாக நாம் பார்க்கிறோம். அரிதான எண்ணெய் வளங்கள், மற்றும் கனிம வளங்கள் பெற்ற நாடுகள் துரிதமான வளர்ச்சியை அடைகின்றன.
கல்வி, சுகாதாரம், வாய்ப்புகள் போன்றவை தனிமனிதனுக்கு தடையின்றி தட்டுப்பாடின்றி சமமாக கிடைப்பதே ஒரு நாட்டு மக்களுக்கு சீரான வளர்ச்சியை தரும். ஆள்பவரின் திறன், நாட்டு மக்களின் உழைப்பு, அற்பணிப்பு ஆகியவை இன்றியமையாத காரணிகள் என்றாலும், பொருளாதார வளர்ச்சி, தன்னிறைவான உணவு, கட்டமைப்பு, பாதுகாப்பு, வளமை பெருக்கம் ஆகியவை நாட்டின் வளர்ச்சியின் அளவுகோல்கள். இயற்கையாகவோ தருவிக்கப்பட்டோ கனிம வளங்கள், உற்பத்தி திறன், வர்த்தக வாய்ப்புகள், பல துறைகளில் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியினை ஏற்படுத்தும்.
வளர்ச்சியில், அடிமட்டத்திலிருந்து மேலெழுதல், சமமான மட்டத்திலிருந்து மேலெழுதல், மேலிருந்து கொண்டே சில சரிவுகளுக்கு பிறகு மீண்டெலுதல் என்று மூன்றுவிதம் உண்டு. இது தனிமனிதனுக்கும் நாட்டுக்கும் பொருந்தும். இதனை அடைய முயற்சியும் உழைப்பும் திட்டமிடலும், செயலாற்றலும் முக்கியம்.
இலக்கை, காலத்தின் குறியீடுகளுடன் ஒப்புநோக்கி வளர்வது என்பது முறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நோக்கத்தையும் காலத்தையும் திட்டமிட்டால் பாதை வகுக்க உதவும். அந்த வகுக்கப்பட்ட பாதையில் நேர்மையாக முயன்று உழைத்தால் முன்னற்றம் சாத்தியமாகும். திட்டமோ, பாதையோ, முயற்சியோ, உழைப்போ தெளிவாகவும் ஸ்திரமாகவும் இருந்தால் வளர்ச்சி என்பது இயற்கையான வெளிப்பாடாக மலரும் என்பதில் ஐயமில்லை.
ஒழுக்கமும் கட்டுப்பாடும் கண்காணிப்பும் அரணாக அமைதல் மிக அவசியம்.
சில சமயங்களில் சில குறிக்கீடுகள் காரணமாக திட்டத்தையும் செயலையும் மாற்றி, கூட்டி செயல்பட வேண்டி வரலாம். அதற்கும், மாற்று வழிமுறைகளையும் கண்டுணர்ந்து இருத்தல் அவசியம். சிறிய வெற்றிகளை உணர்ந்து உத்வேகம் கொண்டு வேகம் எடுக்க வேண்டும். அதனை கொண்டாடும் தருணமாக மாற்றி கேளிக்கைகளில் இறங்கி வளர்ச்சியின் வேகத்தை தடைப்படுத்தி விடக்கூடாது.
இது ஒரு நீடித்த பயணம் என்பதால் நிறைய சக்தியும் சகிப்பும் விடாமுயற்சியும் அவசியம். அழ்ந்த பற்றும் தன்னம்பிக்கையும் சோர்வில்லா உழைப்பும் நேர்மையுமே நம்மை வழிநடத்தும் காரணிகளாக இருத்தல் வேண்டும்.
பல மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்கலாம். ஆனால் நமது பாதையும் பயணமும் தனியானது என்ற உணர்வு வேண்டும். வேகமான வளர்ச்சியை விட நிதானமான திட்டமிட்ட வளர்ச்சியே நீடித்த திடமான வளர்ச்சியையும் உண்மையான உயர்வையும் தரும்.
நாடோ தனி மனிதனோ தமக்கு வாய்க்கும் சூழல்களை சாதகமாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். சறுக்கலும் திசை திருப்பும் சம்பவங்களும் கடந்தே இதனை சாதித்து காட்ட வேண்டும்.
ஏன் இதனை செய்யவேண்டும்? வளர்ச்சி என்பது தான் பிறந்ததின் சூத்திரம். தேங்கிகிடந்தால் சோம்பிக்கிடந்தால் பிறந்ததன் பயன் என்ன? நம் படைப்பிலேயே இந்த சூட்சமம் பொதிந்து கிடக்கிறது. யாரும் பிறந்த குழந்தை போல உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் நின்று விடுவதில்லை. படிபடிப்படியாக தொடர்ந்து உயர்ந்து வளர்ந்து தேர்ச்சிபெற்று தான் முன்னேறுகிறோம். அதனை சரியான சீரான விரும்பத்தக்க வளர்ச்சியாக மாற்றி செயல்பட வேண்டியது ஒவ்வொரு நாட்டின், தனி மனிதனின் இன்றியமையாத நோக்கமாக இருக்க வேண்டும்.