

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் நல்ல பழக்க வழக்கங்களை இழக்கும் தவறான வழியில் பயணம் செய்ய எத்தனிக்காதீர்கள். அப்படி செய்து விட்டு, பின் அந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ நினைத்தாலும், மனம் அதற்கு மீள் முடியாமல் போகலாம்.
வாழ்க்கையில் ஏழ்மையாக வாழ்வது தவறில்லை. அந்த மாதிரி சூழ்நிலை ஒருநாள் கண்டிப்பாக மாறும் என்ற நம்பிக்கை வைத்து உழைத்து, சிக்கனமாக இருக்க பழகினால் நம் கண்முன்னே முன்னேறும் படிகள் தெரியும்.
எந்த தருணத்திலும் நம் மனதில் விரக்தி என்ற வார்த்தையை ஏற்றி விடாதீர்கள். அது தன்னோடு இயலாமை எனும் ஆமையை சுமந்து, ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்.
வாழ்க்கையில் உயர்ந்த சிந்தனை என்பது ஆலமரம் போன்றது. அதன் விழுதுகள் படர்ந்து விரிவதுபோல், நம் எண்ணங்களை பறந்து விரிந்து செயலாற்றும் வல்லமையை பன்மடங்கு உயர்த்தும் என்பதை புரிந்து கொண்டு, மனதில் எப்போதும் உயர்ந்த சிந்தனையை விதையுங்கள்.
எப்போதும் மற்றவர்களிடம் இருப்பது எதுவெல்லாம் நம்மிடம் இல்லை என்று எதிர்மறை எண்ணத்தில் சிந்திக்க வேண்டாம். அவர்களிடம் இல்லாதது எதுவெல்லாம் நம்மிடம் உள்ளது என்று நேர்மறையாக சிந்தித்து பார்க்கும் நிறைவான எண்ணத்தில் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நமக்கு எதுவுமே நல்லது நடக்க வில்லையே என்று வருத்தப் படாதீர்கள். அப்படி நினைக்க எத்தனிக்கும் போது, நம்முடைய மனம் உடைந்து போகும். நிச்சயம் ஒருநாள் நமக்கு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையை கை விடாதீர்கள்.
வாழ்க்கையில் எதை இழந்தாலும் அதற்குப் பதிலாக எதையாவது பெற்றுவிடுவாய். ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமே இல்லாமல் வாழ்ந்து ஓஹோ என்று வாழ்ந்தவர்களும் உண்டு. இதை அறிந்துகொண்டால், வாழ்க்கை புரியும்.
வாழ்க்கையில் அமைதியாக இருக்க முயற்சி செய். சிந்திக்கும் திறன் கூடும். பொறுமையாக இருக்க பழகிக் கொள். எண்ணத்திலும், செயலிலும் சாதிக்கும் சக்தி கூடும். நிதானமாக இருக்க கற்றுக்கொள்ள முயற்சி செய். உன் செல்லும்பாதை தீர்க்கமாக இருக்கும். இவைகள் அனைத்தும் உன்னிடம இருந்தால், உன் கடமைகள் தானே நிறைவேறும்.
இந்தப் பழக்க வழக்கங்களை என்றும் எப்போதும் சூடும் வாழ்க்கையில் சிந்தனை தன்மை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து, வெற்றி பயணத்திற்கான இலக்குகளை எளிதாகவும் வலிமையாகவும் எடுத்துச் செல்லும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்ற பழகுங்கள்.
வாழ்க்கையில் மனித சக்தி மகத்தான ஒன்று, மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்தது இறை சக்தி. எந்த நேரத்திலும், அது தாழ்ந்த நேரமோ அல்லது உயர்ந்த நேரமோ எதுவாக இருந்தாலும், இறைவனின் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் இறைவன் எதாவது ஒன்றை உ,ங்களிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை நிச்சயம் கொடுத்து விடுவான் என்பதை காலச் சூழல் நிச்சயம் உங்களுக்கு காட்டித்தரும் என்ற நம்பிக்கையோடு உழையுங்கள். வெற்றி நிச்சயம்!