

இவ்வுலகில் எல்லாம் தெரிந்த மனிதர் என்று யாரும் இல்லை; அதுபோல, எதுவுமே தெரியாத மனிதரும் இல்லை. ஆனால், சிலர் தனக்கு எல்லாமே தெரியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பார்கள். அது உண்மையான புரிதலுக்குப் பெரிய தடையாக இருக்கும். மாறாக, "தெரியாது" என்று ஒப்புக்கொள்பவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
ஸ்டீபன் ஹாக்கிங், என்ற இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ,உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர், “அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, அறிவு பற்றிய போலி மாயையே" என்று கூறினார். இந்த நவீன உலகிற்கு இந்த வார்த்தைகள் மிகச் சரியாகப் பொருந்துகின்றன.
போலியான உணர்வு:
இன்றைய இணைய உலகில் தகவல்கள் நாம் தேடிச் செல்வதைவிட, நம் விரும்பாமலேயே நம்மை வந்தடைகின்றன; கிட்டத்தட்ட நம் மீது திணிக்கப் படுவதாகவே இருக்கின்றன. கண்ணில் படும் செய்திகள், முப்பது வினாடி காணொளிகள் அல்லது அதைப் பற்றிய ஒருவரின் கருத்துக்கள் அனைத்துமே ஒரு சிக்கலான விஷயத்தைப் பற்றிப் பேசுவது அல்லது விவாதிப்பது போல வடிவமைக்கப்படுகின்றன.
இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நாம் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டோம் என்பதைப் போன்ற போலியான உணர்வை அவை உடனடியாகத் தந்துவிடுகின்றன.
தவறான தன்னம்பிக்கையின் விளைவு:
உலகப் பொருளாதாரம், மருத்துவ ஆராய்ச்சிகள் அல்லது அறிவியல் மாற்றங்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டே சிலர் தம்மை நிபுணர்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்தத் தவறான தன்னம்பிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று.
ஒரு விஷயத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்று நம்பத் தொடங்கும் நொடியில், நம்மிடம் உள்ள ஆர்வம் அமைதியாக வெளியேறிவிடும். எல்லாம் தெரிந்தபின் அல்லது நமது இலக்கை அடைந்து விட்டதாக நினைக்கும்போது, மேற்கொண்டு அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியதோ அல்லது ஆராய வேண்டியதோ என்ன அவசியம் இருக்கிறது?
தெரியாது என்பது பலவீனமல்ல:
சிலர் “எனக்குத் தெரியாது” என்று சொல்லும்போது, இந்த சமூகம் அவர்களை வேடிக்கையாகப் பார்க்கிறது. ஆனால், இதில் உள்ள சுவாரசியமான உண்மை என்னவென்றால், அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடும் நிபுணர்கள் எப்போதும் தங்களது முடிவுகளைப் பற்றி நூறு சதவீதம் உறுதியாகச் சொல்வதில்லை.
அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றியும், தற்போதைய ஆதாரங்களைப் பற்றியும் மட்டுமே கவனமாகப் பேசுவார்கள். நாளைய புதிய கண்டுபிடிப்பு இன்றைய புரிதலை மாற்றக்கூடும் என்பதை அவர்கள் எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், அரைகுறை அறிவுள்ளவர்களிடமிருந்தே உரத்த அழுத்தமான குரல்கள் வெளிவருகின்றன. அவர்கள் ஒருபோதும் "எனக்கு இது தெரியாது" என்று சொல்வதே இல்லை. அப்படிச் சொல்வதற்கு உண்மையான தைரியமும் அறிவுசார்ந்த அடக்கமும் தேவை. "எனக்கு எல்லாமே தெரியும்" என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் அறிவியலின் வளர்ச்சியைப் பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளது.
பழங்கால மருத்துவ முறைகள் முதல் பிரபஞ்சத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் வரை, மனிதகுலம் செய்த தவறுகள் அறியாமையினால் வரவில்லை; மாறாக, தான் நம்பிய தவறான கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்ததாலேயே வந்தன.
கற்றல் என்பது ஒருபோதும் முடிந்துவிடக்கூடிய இலக்கு அல்ல. நாம் அறிந்தவற்றை புதிய ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து பரிசோதித்துப் பார்க்கும் ஒரு நெடிய பயணம் அது. நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோம் என்று நினைக்கும் கணத்திலேயே, புதிய கண்டுபிடிப்புகளுக்கான கதவை அடைத்து விடுகிறோம்.
ஆரோக்கியமான சந்தேகம்:
இன்றைக்கு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான திறன், அதிகத் தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; நமது சொந்த முடிவுகள் மற்றும் நம்பிக்கைகள் மீது ஒரு ஆரோக்கியமான சந்தேகத்தை வைத்திருப்பதுதான்.
"எனக்கு எல்லாமே தெரியும்" என்கிற அறிவிப்பில் உண்மையான ஞானம் தொடங்குவதில்லை; நாம் தவறான பாதையில் செல்கிறோமோ என்று நிறுத்தி யோசிக்கும் நொடியில்தான் அது தொடங்குகிறது. எனவே, அறியாமை என்பது பலவீனம் அல்ல, பலம் தான்; அதற்கான விடையைத் தேடிக்கண்டுபிடிக்கும்போது அந்த அறியாமையே நமக்கு வெளிச்சம் தருகிறது.