எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் 'இந்த' ஒரு பக்குவம் இருந்தா போதும்!

வாழ்க்கையில் வரும் எதைக் கண்டும்கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருக்க உதவும் ரகசிய மனநிலை.
மனம்
மனம் Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனசு என்பது வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்கள், தடைகள் அல்லது விமர்சனங்களைக் கண்டு அதிகம் உணர்ச்சிவசப்படாமல் அவற்றை இயல்பாக, அமைதியாக, பக்குவமாக எதிர்கொள்ளும் ஒரு பக்குவப்பட்ட மனநிலையைக் குறிக்கும். இதை ஆன்மீகத்திலும் உளவியலிலும் "சமநிலை" (equanimity) என்று அழைப்பார்கள். மற்றவர்களின் பாராட்டுகளுக்கும், ஏளனப் பேச்சுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து இரண்டையும் மனதில் ஏற்றாமல் கடந்து செல்லும் நிலை இது.

எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனசு இருந்தால், இந்த உலகத்தில் நம்மைவிட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுதான் உண்மை. சிறிய விஷயங்களுக்கெல்லாம் கவலைப்படுவதை தவிர்த்து விடுவதால், தேவையில்லாத மன அழுத்தம் குறைந்து நம் உடல் நலமும் மேம்படும். எந்த சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ளும் தைரியமும் கிடைக்கும்.

எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் பொழுது உடனடியாக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசிக்க வைக்கும்.

எல்லாமே நம் விருப்பப்படி நடக்காது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்களை உடனே மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்.

நடந்து முடிந்ததைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை மனப்பக்குவம் அல்லது சமநிலை என்று கூறலாம்.

வாழ்க்கையில் பதற்றமில்லாமல் எதையும் அதன் போக்கில் ஏற்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் இன்பம் துன்பம் எது வந்தாலும் மனம் பரபரப்பு அடையாமல் நிம்மதி கொள்ளும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கும்.

வெற்றியைப் பார்த்து துள்ளாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கும் பக்குவம் கிடைக்கும். "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பதுபோல் நடப்பவை யாவற்றையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் குணமும், எந்த ஒரு சிக்கலையும் பூதாகரமாக பார்க்காமல் கடந்து போகும் துணிச்சலும் உண்டாகும். இந்த மனநிலை தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அழுத்தம் இல்லாமலும் வாழப் பெரிதும் உதவும்.

மனம்
மனம்Gemini image

வாழ்வில் எதிர்பாராத ஏமாற்றங்களோ அல்லது தோல்விகளோ ஏற்படும் பொழுது சட்டென்று உடைந்து போகாமல், 'இதுவும் கடந்து போகும்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பிரச்னை வரும்பொழுது சிறிதும் பதற்றம் அடையாமல் அதை எப்படி சரி செய்யலாம் என்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நகைச்சுவை உணர்வு ஏன் அவசியம்? வாழ்க்கை மாற உதவும் ரகசியம்!
மனம்

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாமல் சாதாரணமாகக் கடந்து செல்ல தேவையற்ற சண்டைகளும், மனக்கசப்புகளும் தவிர்க்கப்படுவதுடன் நம் மன அமைதியும் காக்கப்படும்.

இது நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்துவது அல்லது எதிர்காலத்தை நினைத்து அளவுக்கு அதிகமாக பயப்படுவது என்று நேரத்தை வீணடிக்காமல் கையில் இருக்கும் தற்போதைய தருணத்தை மகிழ்ச்சியாக ரசித்து வாழலாம்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லதுதான். அதற்காக "எடுத்தோம் கவிழ்த்தோம்" என்று பொறுப்பில்லாமல் இருப்பது என்று இதனைப் பொருள் கொள்ளக்கூடாது. நமக்கான முக்கிய கடமைகள், உறவுகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து தவறி விடுவதோ, அலட்சியமாக இருப்பதோ மற்றும் முக்கியமான வாழ்க்கை முடிவுகளில் அலட்சியம் காட்டுவதோ கூடாது. சரியான நேரத்தில் பொறுப்புடனும் அதே நேரத்தில் மன அழுத்தம் இல்லாமலும் இருப்பதே மிகச்சிறந்த சமநிலையாகும்.

இதையும் படியுங்கள்:
எதைப் பேசக் கூடாது தெரியுமா? வாழ்க்கையை மாற்றும் சிறந்த அமைதியின் ரகசியம்!
மனம்

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து, தேவையற்ற விஷயங்களை மனதில் ஏற்றாமல் இருப்பதே எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனதின் ரகசியமாகும். எந்த சூழ்நிலைகளும் நம்மை ஆள அனுமதிக்காமல், நம் மனதை நாம் ஆளும் ஒரு மிகச்சிறந்த குணம் இதுவாகும்.

பொறுப்பற்றிருப்பதற்கும், அநாவசியமான சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு கலங்காமல் அமைதியாகவும் மனம் அழுத்தம்கூட இல்லாமலும் இருப்பதற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை வாசகர்கள் இதில் தெரிந்துகொள்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com