"சரியாக திட்டமிடாதபோது, நம்ம வாழ்க்கையில் இரண்டு நாட்களை மட்டும் நாம் உபயோகப்படுத்த முடியாமல் போய் விடுகிறது " என்று பவுத்த துறவி தலாய் லாமா சொல்லி இருக்கிறாராம்.
அது என்னவென்று தெரியுமா?!
அந்த இரண்டு நாட்களில் ஒன்று நேற்று ! இன்னொன்று நாளை!
இந்த நாட்களைதான் நாம் பயன்படுத்த முடிவதில்லை என்று சொல்கிறார்.
ஆகவே, எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடைய வேண்டுமெனில் , திட்டமிடுவது என்பது முக்கியமாக தேவைப்படுகிறது. அதுவும் 'நேர நிர்வாகம்' எனப்படும் 'டைம் மேனேஜ்மென்ட்' என்பதும் அதற்கு அவசியமாகிறது.
பொதுவாக நேர நிர்வாகம் பற்றி இப்படி சொல்லப்படுகிறது .
அதாவது ஒரு நாள் என்பது 24 மணி நேரம். அந்த 24 மணி நேரம் மட்டுமே நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மனிதனில் இருந்து நாட்டின் ஜனாதிபதி வரை, எல்லாருக்குமே ஒரு நாளுக்கு 24 மணி நேரம் தான் கிடைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் இயற்கை என்பது , எப்போதும் ஏழை ,பணக்காரன், சாதி மத ஏற்றத்தாழ்வை கொண்டு மாறுவது கிடையாது.
ஒருவருடைய 24 மணி நேரம் என்பதை கணக்கிட்டு பார்த்தால் 1440 நிமிடங்கள் அல்லது 86,400 வினாடிகளே ஆகும். அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், மில்லியன் பில்லியன் பணத்தை வைத்திருந்தாலும், அவரால் நேரத்தை நிறுத்தி வைக்க முடியாது.
அவரவருக்கு உள்ள நேரத்தை... சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் , படிக்கும் நேரம், வேலை பார்க்கும் நேரம் ..என்று பிரித்து பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர .. அதை நீட்டவோ குறைக்கவோ முடியாது.!
அதனால் அவரவருக்கு கிடைத்த நேரத்தை, எவ்வளவு புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தி வாழுகிறார்களோ... அதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடிகிறது.
"நேற்று என்பது கையில் இல்லை.
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே மிச்சம் உள்ளது"
என்று ஒரு திரைப்பட பாடல் கூட வந்துள்ளளது.
திரைப்பட நடிகர் அஜித்குமார், ஒரு திரைப்படத்தில் இப்படி சொல்லி இருப்பார்.
"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும். ஏன் ஒவ்வொரு நொடியும் ... நானா செதுக்கினதுடா!"
அவர் தனது வாழ்நாளில், ஒவ்வொரு நிமிடத்தையும் , நொடியையும் சிறப்பாக செதுக்கியதால், அவர் எதிர்பார்த்த பெயரும் புகழும் பெற்றிருக்கிறார் அல்லது சிகரத்தை தொட்டிருக்கிறார் என்று சொல்கிறார்.
அதைப்போல, பொதுவாக .. நாம் காத்திருக்கும் நேரத்தில் தான் நேரத்தின் அருமையை புரிந்து கொள்ள முடிகிறது.
"காதலிக்காக காத்திருக்கும் போது, கடிகாரம் மெதுவாக நகர்கிறது. அதுவே காதலியோடு பேசிக்கொண்டிருக்கும் போது கடிகாரம் வேகமாக நகர்கிறது"
யாரோ ஒரு கவிஞர் இப்படி சொல்லியிருக்கிறார். ஆம் .. அப்படி யோசித்துப்பார்த்தால் ....
'நமக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது மட்டும், நேரம் வேகமாக ஓடி விடுவது போல தெரியும். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்காதா என்று எதிர்பார்க்க வைக்கும்.! ஆனால் நமக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தாலோ அல்லது விருப்பம் இல்லாமல் காத்திருக்கும் போதோ.. நேரம் மிக மெதுவாக நகருவது போல் தெரியும்.!'
ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி , திரு கலியமூர்த்தி அவர்கள் தனது மேடை பேச்சில், நேரத்தின் அருமை குறித்து சிறப்பாக பேசி இருக்கிறார்.
அவருடைய சிந்தனை துளிகளை படித்தால் , நேர நிர்வாகத்தின் சிறப்பை நாம் நிச்சயம் உணர முடியும் .
"ஒரு மாதத்தின் அருமை... குறைமாதத்தில் பிள்ளை பெற்ற பெண்ணுக்குதான் தெரியும்.
ஒரு மணி நேரத்தின் அருமை... பரிட்சை எழுதிய பிள்ளைகளுக்குத்தான் தெரியும்.
ஒரு நிமிடத்தின் அருமை... ரயிலையோ விமானத்தையோ தவற விட்டவர்களுக்கு தான் தெரியும்.
ஒரு வினாடியின் அருமை.. ஒரு வினாடி கண் அயர்ந்த காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் கையையோ, காலையோ இழந்தவர்க்குதான் தெரியும்.
ஒரு மைக்ரோ செகண்டின் அருமை ...ஒலிம்பிக்கில் ஓடிய உசேன் போல்ட் போன்றவற்குதான் தெரியும் .."
அந்த மைக்ரோ செகண்டின் மதிப்பையும் அதில் எத்தனை கோடி சம்பாதிக்க முடியும் என்பதையும் அவர் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறார். இதுவரை அவர் ...199 மில்லியன் டாலர் சம்பாதிக்க 155 விநாடி மட்டுமே ஓடியிருக்கிறார். அப்படி என்றால் நேரத்தின் மதிப்பை நினைத்துப் பாருங்கள்.
‘நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஓய்வெடுக்க உபயோகப்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி சொல்லியிருக்கிறார்.
‘நம் அனைவருக்கும் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரம் தான்’ என்று காலஞ்சென்ற அமெரிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆக, நேரத்தை சரியாக பயன்படுத்த அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்! வாழ்க்கையில் மென்மேலும் முன்னேறுங்கள்!