

இன்றைய அவசரமான உலகில், ஒவ்வொரு மனிதருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணிநேரம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. பலரும் முக்கியமானவற்றிற்கு நேரம் ஒதுக்காமல், வீணான விஷயங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இந்தச் சவாலைச் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெற, நமது நேரத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நேரம், ஆற்றல், மற்றும் கவனத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் ஒருவர் தான் விரும்பியதை அடையவும், வாழ்வில் முன்னேறவும் முடியும்.
5 சக்திவாய்ந்த விதிகள்
1. நேரத்தைப் பூட்டுதல் (Time Blocking)
நம்மில் பலர் நாள் முழுவதும் வேலை செய்கிறோம். ஆனால் முக்கியமான வேலைகளை செய்ய முடியாமல் போகிறது. நேரத்தை நிர்வகிப்பதை விட, ஆற்றலை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். உற்சாகமாக இருக்கும் காலை நேரத்தில் கடினமான வேலைகளை செய்ய வேண்டும். உணவிற்குப் பிறகு சற்றே சோர்வாக உணரும்போது சாதாரணமான அல்லது எளிமையான வேலைகளை செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முக்கியமான வேலைகளை மட்டும் நிர்ணயித்து, அவற்றைச் செய்ய நேரத்தைப் பூட்டிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் யாரையும் சந்திக்காமல், வேறு வேலைக்கு மாறாமல், மொபைல் போன் பார்க்காமல் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
2. வேலைகளைப் பிரித்தல்
உங்கள் வேலைகளை அவசரம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நான்காகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
1. உடனே செய்ய வேண்டியவை (அவசரமும் முக்கியமும் வாய்ந்தது)
2.திட்டமிட வேண்டியவை (முக்கியம் + அவசரமில்லை), இதை உடனே செய்ய வேண்டியது இல்லை.
3. வேலையை குறைத்தல்- இதை பிறரை செய்ய சொல்லலாம். இது அவசரம்,ஆனால் முக்கியமில்லை.
4. நீக்குதல் - அவசரமும் இல்லை, முக்கியமும் இல்லை.
இந்த முறையைப் பயன்படுத்தினால், உங்கள் நேரம் வீணாவதைத் தவிர்த்து, எதைச் செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்து முடிப்பீர்கள்.
3. இரண்டு நிமிட விதியும் 80% நிறைவும்!
இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கக் கூடிய ஒரு வேலை இருந்தால், அதைப் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செய்துவிட வேண்டும். ஒரு வாட்ஸ்அப் மெசேஜுக்குப் பதிலளிப்பது போன்ற சிறிய பணிகளை உடனே செய்யவும். அதேபோல், ஒரு வேலையை 100% சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துத் தாமதிக்காமல், 80% நிறைவு போதுமானது என்ற மனநிலையுடன் வேலையைத் தொடங்க வேண்டும். இதுதான் வேலையைத் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க உதவும்.
4. போலி காலக்கெடு மற்றும் 'நோ' சொல்லப் பழகுதல்
வேலையை விரைவாக முடிக்க, உண்மையான காலக்கெடுவுக்கு முன்பே ஒரு போலி காலக்கெடுவை நிர்ணயம் செய்யுங்கள். உதாரணமாக, வெள்ளிக்கிழமைக்குள் முடிக்க வேண்டிய வேலையை புதன்கிழமைக்கு இலக்காக வையுங்கள். இதனால் வேலை விரைவாக முடிவதோடு, கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும். மேலும், உங்கள் நேரத்தை பிறருக்காக வீணடிக்கக் கூடாது. உங்கள் இலக்குகளைப் பாதிக்கக்கூடிய, எதிர்பாராத கோரிக்கைகளுக்கு மரியாதையுடன் 'இல்லை' என்று சொல்லப் பழகுங்கள். இந்தச் சுயக்கட்டுப்பாடு மிக முக்கியம்.
5. வெகுமதி அளித்தல் மற்றும் கட்டுப்பாட்டைக் கையாளுதல்
திட்டமிட்ட வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்தவுடன், உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் காபி குடிப்பது அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற ஒரு சின்ன வெகுமதி, உங்கள் மனதிற்கு உறுதி அளித்து, அடுத்த வேலைக்குத் தூண்டும்.
நேரம் என்பது ஒரு வாகனம் போன்றது. வாழ்க்கை பயணத்தில், ஒரு விமானியா அல்லது பயணியா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நேரத்திற்கு கட்டுப்படும் பயணியாக இல்லாமல், இலக்குகளை நோக்கி நேரத்தை ஓட்டிச் செல்லும் விமானியாக இருப்பதன் மூலம், நீங்கள் வெற்றி பெற்ற ஆளுமை மிக்க நபராக மாற முடியும்.