

இன்றைய காலகட்டத்தில் பலரும் மன அழுத்தம், பதற்றம், தேவையில்லாத மனக்கவலைகள் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேர்வு பயம் கொண்ட மாணவர்கள், இலக்குகளை நோக்கி ஓடும் மனிதர்களுக்கு வெற்றியும், குடும்பத்தைப் பராமரிக்கும் இல்லத்தரசிகளுக்கு மன அமைதியும், நிம்மதியும் தேவைப்படுகிறது.
‘நான் பேசுவதையோ அல்லது சொல்வதையோ யாருமே காது கொடுத்துக் கேட்பதில்லை; எனக்குச் சமூகத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை’ என மனதிற்குள் ஏங்கும் மனிதர்களுக்கு ‘உஜ்ஜையி மூச்சுப் பயிற்சி’ (Ujjayi Pranayama) ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
உஜ்ஜையி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ‘உஜ்ஜையி’ என்றால் "வெற்றி பெறுவது" அல்லது "வெற்றியைக் கொண்டு வருவது" என்று பொருள். நமது மூச்சைக் கட்டுப்படுத்தி மனதை வெல்ல உதவுவதால் இதற்கு இப்பெயர் வந்தது.
பயிற்சி செய்யும் முறை:
தரையிலோ அல்லது நாற்காலியிலோ பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். முதுகுத்தண்டும் கழுத்தும் நேராக இருக்க வேண்டும். கண்கள் மூடியிருக்க வேண்டும்.
பொதுவாக நாம் நாசித் துவாரங்கள் வழியாகத்தான் சுவாசிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பயிற்சியில் மூக்கின் வழியாகக் காற்றை உள்ளே இழுத்தாலும், தொண்டைப் பகுதியில் மூச்சுவிடும் துவாரங்கள் இருப்பது போல மனதிற்குள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
தொண்டைப் பகுதியில் லேசான சுருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாயை மூடிக்கொண்டு, தொண்டையைச் சுருக்கியபடி மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். காற்று தொண்டைக் குழியின் வழியே உரசிக் கொண்டு செல்லும்போது, அது கடலலையின் ஓசை போன்றோ அல்லது தூங்கும்போது வரும் லேசான குறட்டை ஒலி போன்றோ ஒரு மெல்லிய சத்தத்தை எழுப்பும்.
அதே போன்று தொண்டையைச் சுருக்கியபடியே மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
பயிற்சியின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்:
மனக்கவலைகள் அகலும்: பல வருடங்களாக மனதில் தேங்கிக் கிடக்கும் கவலைகள், வருத்தங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, மனதை லேசாக்க இது உதவுகிறது.
ஆளுமைத் திறன் கூடும்: தொண்டைப் பகுதி தூண்டப்படுவதால் குரல் வளம் தெளிவடையும். "நான் பேசுவதை யாரும் கேட்பதில்லை" என்று வருந்து பவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தெளிவான பேச்சுத் திறனையும் தந்து மற்றவர்களைக் கவரும் ஆளுமையை இது தருகிறது.
உடனடி நிம்மதி: நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைப் போக்கி மனதிற்கு உடனடியாக நிம்மதியைத் தரும்.
கவனமும் நினைவாற்றலும்: தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் மற்றும் வெற்றியை இலக்காக வைத்துச் செயல்படும் மனிதர்களுக்கு இது நல்ல பலன் தரும். பயிற்சி செய்யும்போது எழும் மெல்லிய ஓசை, மூளையின் கவனத்தை மூச்சின் மீது குவிக்கிறது. இதனால் கூர்மையான கவனமும் சிறந்த நினைவாற்றலும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்: தொண்டைப் பகுதி சுருங்கி விரிவதால் தைராய்டு சுரப்பி சீராகத் தூண்டப்படுகிறது. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியால் நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரித்து ஆஸ்துமா, சளி போன்ற சுவாசப் பிரச்சனைகள் கட்டுப்படும்.
புத்துணர்ச்சியும் தூக்கமும்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பை அளிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்.
குறிப்பு: இப்பயிற்சியை வெறும் வயிற்றில் செய்வது மிகச் சிறந்தது. ரத்த அழுத்தம் மிக அதிகமாக உள்ளவர்கள் மற்றும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் வழிகாட்டலோடு செய்ய வேண்டும்.
இந்தப் பயிற்சியை தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் செய்வதன் மூலம் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் நீங்கி, தெளிவான பேச்சாற்றலும், தன்னம்பிக்கையும், மன அமைதியும் கிடைக்கும்.