
“வெற்றியேயன்றி வேறெதும் பெறுகிலேம்”
மகாகவி பாரதியார் (சத்ரபதி சிவாஜி பாடலில்)
வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைவோருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
வெற்றியாளர் எப்போதும் ஒரு விடைக்கான பகுதியாக இருப்பார்.
தோல்வியாளரோ எப்போதும் பிரச்சினைக்கான ஒரு பகுதியாக இருப்பார்
வெற்றியாளருக்கு எப்போதுமே ஒரு செயல்திட்டம் உண்டு.
தோல்வியாளருக்கு எப்போதுமே செய்ய முடியாததற்கு ஒரு மன்னிப்பு உண்டு.
வெற்றியாளர் எப்போதும் சொல்வது: உனக்காக நான் நிச்சயமாக இதைச் செய்கிறேன்.
தோல்வியாளர் எப்போதும் சொல்வது : இது என்னுடைய வேலை இல்லை!
வெற்றியாளர் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் காண்பார்
தோல்வியாளர் ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையைக் காண்பார்.
வெற்றியாளர் சொல்வது: இது கஷ்டம் தான் என்றாலும் முடித்து விடலாம்.
தோல்வியாளர் சொல்வது: இது முடியக் கூடியது தான் ஆனால் இதை முடிப்பது மிக மிக கஷ்டம்; முடியாத காரியம்!
தோல்விக்கான காரணங்களில் முதல் முக்கிய காரணம் நமது கவலைதான்!
ஆனால் நமது கவலைகளை அலசிப் பார்த்தால் பெரும்பாலும் அவை நடப்பதே இல்லை. கவலையைப் பற்றிய அறிவியல் அலசல் இதோ:
40 சதவிகிதம் : கவலை சோர்வான மனத்திலிருந்து எழும் ஒன்றாகும். நமது கவலைகளில் 40 சதவிகிதம் ஒரு போதும் நடப்பதே இல்லை.
30 சதவிகிதம்: பழைய முடிவுகளுடன் 30 சதவிகிதம் தொடர்பு கொள்கிறது. அவை மாற்ற முடியாதவை.
12 சதவிகிதம்: கடுமையான எதிர்மறை விமரிசனங்களை 12 சதவிகிதம் கொண்டிருக்கிறது. அவை உண்மையானவையே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொள்வோரிடன் மனத்திலிருந்து பொங்கி வரும் எரிச்சல் மொழிகள் அவை.
10 சதவிகிதம்: ஆரோக்கியத்துடன் 10 சதவிகிதம் தொடர்பு கொண்டுள்ளது. அது கவலைப்படுவதால் ஆரோக்கியத்தை இன்னும் அதிகமாகப் பாதிக்கும்.
8 சதவிகிதம் : வாழ்க்கையில் நிஜமாக ஏற்படும் பிரச்சினைகள் 8 சதவிகிதமே. தேவையற்ற மற்ற கவலைகளை நீக்கி விட்டால் இந்த நிஜமான 8 சதவிகிதப் பிரச்சினைகளை சுலபமாக எதிர்கொண்டு வென்று விடலாம்.
பிரச்சினையை இதயத்திலிருந்து கழட்டி விடு!
டாக்டர் பில்லி கிரஹாம் எழுதிய ஒரு சிறுகதை அழகிய உண்மையை விளக்குகிறது.
ஒரு சிறுவன் ஒரு நாள் குறுகிய வாயுள்ள ஒரு பூ ஜாடியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அதன் உள்ளே கையை விட்டான். கையை மீண்டும் வெளியே எடுக்க முடியவில்லை. அவனது தந்தை வந்து கையை இழுத்துப் பார்த்தார். கை வெளியே வரவில்லை. சரி பூ ஜாடியை உடைத்து விடலாம் என்று எண்ணினார் அவர். மகனைப் பார்த்து, “இன்னும் ஒரே ஒரு முறை முயற்சி செய்து பார். என்னைப் பார். கைகளை நன்றாக விரி. உன்னுடைய விரல்களை ஒன்றாகக் குவி. பிறகு வெளியே எடு” என்று எப்படி எடுக்க வேண்டும் என்று ‘டெமோ’ செய்து காட்டினார்.
உடனே அந்தச் சிறுவன் சொன்னான்: “அப்பா! நீங்கள் செய்வது போல என்னால் செய்ய முடியாது. கையை விரிக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய கையில் இருக்கும் காசு உள்ளே விழுந்து விடுமே” என்றான்.
இதைப் படித்தால் சிரிப்பு வருகிறதில்லையா! ஆனால் உலகில் உண்மையில் இந்தச் சிறுவனைப் போலத்தான் எல்லோரும! காசு போன்ற அல்பமான ஒரு காரணத்தைக் கையில் பிடித்துக் கொண்டு விடுதலை அடைவதில்லை.
“கையில் இருக்கும் சின்ன தொந்தரவை அல்லது பிரச்சினையை இதயத்திலிருந்து கழட்டி விடு. பிறகென்ன, கடவுள் இருக்கிறார், அவரைச் சரணம் அடை. வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் அடையலாம்.” - இதுவே கதை சொல்லும் நீதி!
இந்தக் கதை சொல்வது வாழ்க்கை வெற்றிக்கு வழிகாட்டும் நீதி அல்லவா!
அதனால் வெற்றியைப் பெற்றுக் கொள்; தோல்வியில் கற்றுக் கொள்!