
இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 1956 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாளன்று, புத்த சமயத்தைத் தழுவினார். தற்போது அந்தப் பகுதி, தீக்சாபூமி (Deekshabhoomi) என்றழைக்கப்படுகிறது.
'தீக்சா' என்ற புத்த சமயத்தினர்களின் சொல், அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. 'பூமி' நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் புத்த சமயத்தை ஏற்றுக் கொள்ளும் இடம் என்று கொள்ளலாம்.
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் எடுத்த முடிவைப் பின்பற்றி, புத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள தீக்சாபூமியில் இருக்கும் புத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாக இருக்கும் தீக்சாபூமி, இந்தியாவிலுள்ள புத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாற்றம் பெற்ற அக்டோபர் 14 ஆம் நாளிலும், அசோக விசயதசமி நாளிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ்விரு நாட்களில், இங்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறிய பின்னர், தனது தொண்டர்களுக்கு, தம்மா தீட்சை வழங்கினார். இந்நிகழ்வில் மும்மணிகள் மற்றும் ஐந்து நல்லொழுக்கங்கள் வழங்கப்பட்டபின், அம்பேத்கர் வழங்கிய 22 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. அவை:
1. பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேசுவரன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
2. கடவுளின் மறுபிறப்பாக நம்பப்படுகின்ற, ராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
3. கௌரி, கணபதி மற்றும் இந்துக்களின் ஏனைய ஆண் மற்றும் பெண் கடவுளர் மீது நான் நம்பிக்கை கொள்ளவோ அல்லது அவர்களை வழிபடவோ மாட்டேன்.
4. கடவுளின் மறுபிறப்பில் நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன்.
5. புத்தர் விஷ்ணுவின் மறுபிறப்பு என நான் நம்பவோ கருதவோ மாட்டேன். இது ஒரு அடிமுட்டாள்தனம் என்றும் பொய்ப் பரப்புரை எனவும் நான் நம்புகிறேன்.
6. நான் சிரார்த்தமளிக்கவோ, பிண்டமளிக்கவோ மாட்டேன்.
7. நான் புத்தரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மீறும் வகையில் நடக்க மாட்டேன்.
8. பிராமணர்களால் ஆற்றப்படும் எந்த நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்.
9. நான் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என நம்புகிறேன்.
10. நான் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குப் பெருமுயற்சி எடுப்பேன்.
11. நான் புத்தரின் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றுவேன்.
12. நான் புத்தரால் முன்மொழியப்பட்ட பத்துப் பாரமிதாக்களைப் பின்பற்றுவேன்.
13. நான் அனைத்து உயிர்களிடமும் இரக்கமும் அன்பும் செலுத்துவதோடு அவற்றைப் பாதுகாப்பேன்.
14. நான் திருட மாட்டேன்.
15. நான் பொய்யுரைக்க மாட்டேன்.
16. உடலின்பத்தினால் தூண்டப்பட்ட பாவங்களைச் செய்ய மாட்டேன்.
17. மது, போதைப்பொருள் போன்ற மதிமயக்கும் பொருட்களை உட்கொள்ள மாட்டேன்.
18. நான் நாளாந்த வாழ்வில் உன்னதமான எண்வகை மார்க்கங்களைப் பின்பற்றவும், இரக்கம் மற்றும் அன்பைப் பொழிவதற்கும் பெருமுயற்சி எடுப்பேன்.
19. சமத்துவமின்மையை ஊக்குவிப்பதன் மூலம் மனித இனத்துக்கு எதிராகவும், மனித இனத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டையாகவும் உள்ள இந்து மதத்தை நான் துறக்கிறேன். பௌத்த மதத்தை எனது மதமாக ஏற்றுக்கொள்கிறேன்.
20. நான் புத்தரின் தம்மமே உண்மையான ஒரே மதம் என உறுதியாக நம்புகிறேன்.
21. நான் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளதாகக் கருதுகிறேன்.
22. நான் இதன் பின்னர், எனது வாழ்வை புத்தரின் தம்மத்தின் போதனைகளின் வழியே முன்னெடுப்பேன்
என உளத்தூய்மையுடன் உறுதியளித்து வெளிப்படுத்துகிறேன்.