

தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு சிறப்பு உண்டு. ஆடி மாத வழிபாடு என்பது தெய்வீக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே சிறப்பானது என்றாலும் ஆடிப் பௌர்ணமிக்கு (Aadi Pournami) தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. ஆடி பௌர்ணமி என்பது ஒரு சடங்கு அல்ல. அது நம் கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கைகளின் கலவையாகும். பொதுவாக ஆடி பௌர்ணமி நாளில், முழு மனதுடன் வழிபடுவதன் மூலம், நம் வாழ்விலும், குடும்பத்திலும் அமைதியும், செல்வமும், ஆரோக்கியமும், குடும்ப ஒற்றுமை மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான (2026) ஆடி மாதப் பௌர்ணமி நாளை மறுநாள் புதன்கிழமை (ஜூலை 29-ம் தேதி) அன்று வருகிறது. ஜோதிட ரீதியாக, சூரியனும் சந்திரனும் எதிரெதிர் ராசியில் சஞ்சரிக்கும் நாள்தான் பௌர்ணமியாகும். மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு உரியது என்பதால், பௌர்ணமி நாளில் அம்பிகையை வழிபடுவது மன அமைதியையும், குடும்ப செழிப்பையும் தரும்.
இந்த ஆண்டு (2026) ஆடி மாத பௌர்ணமி நாளை மறுநாள் புதன் கிழமை (ஜூலை 29) அனுஷ்டிக்கப்படுகிறது .
பௌர்ணமி திதி நாளை செவ்வாய் கிழமை (ஜூலை 28) மாலை 6:18 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (ஜூலை 29) இரவு 8:05 மணி வரை நீடிக்கிறது.
ஜூலை 28-ம்தேதி மாலையே பௌர்ணமி திதி துவங்கினாலும், சூரிய உதய நேரத்தில் என்ன திதி இருக்கிறதோ அதுவே அன்றைய நாளுக்கான திதி என்பதால் ஜூலை 29-ம்தேதியே ஆடி பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி, தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதால் மிகவும் மங்களகரமான, புண்ணியத்தை அதிகரிக்கும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் புனித நதிகள், கடல் அல்லது கோவில் தீர்த்தங்களில் நீராடி சிவபெருமான், அம்பாள், சந்திர பகவான் ஆகியோரை வழிபடுவது விசேஷமாகும். பல அம்மன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பௌர்ணமி பூஜைகள் நடைபெறும்.
சில கிராமப்புறங்களில், பெண்கள் ஆடிப் பௌர்ணமி அன்று கௌரி விரதம் இருப்பார்கள். இந்த விரதம் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் கிடைப்பதற்காகவும் மேற்கொள்வார்கள். பார்வதி தேவியை வழிபட்டு, சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்களைக் கொடுத்து ஆசிபெறுவார்கள்.
அன்றைய தினம் நாள் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் இருந்து மாலையில் சிவன் அல்லது அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
பௌர்ணமி அன்று மாலையில் வீட்டில் தீபம் ஏற்றிப் பிரார்த்தனை செய்வதால் குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.
அன்றைய நாள் முழுவதும் “ஓம் நமசிவாய”, “ஓம் சக்தி”, “ஓம் கம் கணபதயே நம:” போன்ற மந்திரங்களை ஜபிப்பது ஆன்மிக பலனை அதிகரிக்கும்.
மேலும் ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
ஆடி பௌர்ணமி சிறப்புகள்
* அறிவு, கல்வி மற்றும் ஞானத்தின் கடவுள்களில் ஒருவராக அறியப்படும் ஹயகிரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி நாளில் தான் என்பதால் அன்றைய தினம் ஹயகிரீவரை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும்.
* அதேபோல் ஆடி பௌர்ணமி, புதன் அன்று வருவதால், விரதம் இருந்து மகாலட்சுமி வழிபாடு செய்வது, லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது ஆகியவை விசேஷமானது.
* இந்த நாளில் சந்திரன் முழு ஒளியுடன் காட்சியளிப்பதால், மன அமைதி, ஆன்மிக சக்தி மற்றும் இறை அருள் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
* பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்திர பகவானை தரிசித்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
* இந்த நாளில் பூரண நிலவு ஒளியில் இறைவனை நினைத்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வது உடல் மற்றும் மன ஆற்றலை அதிகரிக்கும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஜூலை 28-ம்தேதி மாலை 06.18 மணிக்கு மேல் கிரிவலத்தை தொடங்கி மறுநாள் ஜூலை 29-ம்தேதி இரவு 08.05 மணிக்கு முன்பாக கிரிவலத்தை முடிக்க வேண்டும்.
* சந்திரன் முழுமையாகக் காட்சியளிக்கும் இந்த நாளில் விரதம் இருந்து சத்ய நாராயணன் அல்லது சிவபெருமானை வழிபடலாம்.
* அன்னதானம், தண்ணீர் பந்தல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற தர்ம செயல்களில் ஈடுபடலாம்.
* ஆடி பௌர்ணமி அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியமான செயலாகும். இதன் மூலம் நாம் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
தவிர்க்க வேண்டிய செயல்கள் :
ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த இந்நாளில் சில காரியங்களைச் செய்வது பாரம்பரியமாக விலக்கப்பட்டுள்ளது.
திருமணம், நிச்சயதார்த்தம் மற்றும் வளைகாப்பு போன்ற புதிய சுபகாரியங்களை நடத்துவதைத் தவிர்க்கவும்.
அசைவ உணவுகள் மற்றும் மது போன்ற போதை பொருட்களை உட்கொள்ளக் கூடாது.
தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதம்.
மற்றவர்களிடம் கடன் கொடுக்கல் மற்றும் வாங்கல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பிறரை அவமதிக்கும், துன்புறுத்தும் செயல்களை தவிர்ப்பது நல்லது.
முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் மற்றும் மொட்டை அடித்துக்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.