

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். இவரை அபிஷேக பிரியர் என்றும் அழைப்பர். சிவாலங்களில் நாள்தோறும் சிவபெருமான் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறும். ஆனால் சிவபொருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே அபிஷேம் நடத்தப் படுகிறது.
ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அந்த அபிஷேகங்களை ‘மகா அபிஷேகம்’ என்று அழைப்பர்.
இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி மாதம் திருவாதிரையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மட்டுமே அதிகாலையில் நடக்கிறது.
ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு ‘ஆனி உத்திர திருமஞ்சனம்’ என்று பெயர். நடராஜக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் கோவில்களில் எழுந்தருள்வதாக ஐதீகம்.
சிவாலயங்களில் சிவன் சன்னதிக்கு அருகிலேயே சிவகாமி அம்மன் உடனாய நடராஜப்பெருமான் இருப்பார். முயலகனை வதம் செயத் கோலத்தோடு ஆடும் அந்த காட்சியை நாம் கண்டு வணங்க வேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் நடராஜ பெருமானுக்குரிய விழா நடைபெறுகின்றது.
அதற்கு உகந்த நாளான ஆனி மாதம் 8-ம்தேதி (ஜூன் 22-ம் தேதி) உத்திர நட்சத்திரத்தன்று ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலையில் நடைபெறும் நடராஜருக்கான சிறப்பு அபிஷேகத்தை நாம் வழிபட்டால் வாழ்வில் இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்து போய் செல்வம் மட்டுமல்லாமல் இன்பமும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஜூன் 21-ம்தேதி மதியம் 3.16 முதல் ஜூன் 22-ம்தேதி மதியம் 3.35 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. சூரிய உதயம்படி கணக்கிட்டால் ஜூன் 22-ம்தேதி அதிகாலைதான் நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஆனி திருமஞ்சனத்திற்கு முதல் நாள் உத்திரம் நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளும் நடராஜருக்கு மிகவும் உகந்த நாளாகும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்நாளில் வீட்டில் வழிபாடு செய்து பலன்களைப் பெறலாம்.
அன்றைய தினம் நடராஜ பெருமானை வழிபட்டால் நலம் யாவும் வீடு வந்து சேரும். நடராஜர் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். கலைகளை கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப்பெருமான்.
சிவராத்திரியன்று சிவனை நாம் வழிபடும்போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தை கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம் இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளை கண்டுகளிப்பதோடு நடராஜப்பெருமானையும் தரிசித்து அவர் சன்னதியில் சிவபுராணம் பாட வேண்டும்.
‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவனின் சன்னதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு தரிசனத்தோடு அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிதம்பரத்தில் நடைபெறும் 10 நாள் உத்திர நட்சத்திரத்தன்று அதிகாலையில் 3 மணி முதல் 6 மணி வரை நடராஜருக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் திருநீறு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்றவற்றை கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன உற்சவம் (Aani Thirumanjanam) கடந்த ஜூன் 13-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 20-ம்தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும், 21-ம்தேதி (ஞாயிற்று கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஆனித் திருமஞ்சன தரிசனம் மற்றும் மகா அபிஷேகம் ஜூன் 22-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
திருமஞ்சனம் என்றால் இறைவனுக்கு செய்யப்படும் மிகப்பெரிய மகா அபிஷேகம் என்பது பொருளாகும். இந்நாளில் பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற மங்களக்கரமான பொருட்களை கொண்டு இறைவனுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு இந்த மகா அபிஷேகம் வழிபாட்டு முறை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும், மதியம் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானசாக சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது.
23-ம்தேதி பஞ்சமூர்த்திகள் முத்து பல்லக்கில் வீதி உலாவும், 24-ம்தேதி கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
அனைவராலும் சிதம்பரம் சென்று நடராஜக்கு நடைபெறும் மகாஅ பிஷேகத்தை தரிசிக்க முடியவில்லை என்றாலும், அருகில் இருக்கும் சிவன் கோவிலில் நடைபெறும் நடராஜர் அபிஷேகத்தை தரிசிக்கலாம். இந்த ஆனி திருமஞ்சனத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தால் செல்வ வளம் பெருகும், மகிழ்ச்சி உண்டாகும், துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
திருமணத்தடை நீங்கும், பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர், உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவபெருமானின் முழு அருளையும் பெறலாம்.