அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது ஏன் சிறந்தது தெரியுமா?

Agal Vilakkil Deepam Eatruvathu En Siranthathu
Lord Murugan, Agal Deepam
Published on

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த பரிகாரமாகும். அதுவும் அதிகாலை, நண்பகல், உச்சி வேளை, அந்திப் பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கியுள்ளன. கோயில்களில் இந்த வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியைத் தரும்.

மிகக் கடுமையான பிரச்னைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை இறைவனின் கருவறையில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படித் தூங்கா விளக்கில் சுத்தமான பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வர, நாம் எண்ணிய காரியம் நிறைவேறுமாம். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரியப்போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாகும்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு பொரி நிவேதனம் படைப்பதன் ரகசியம்!
Agal Vilakkil Deepam Eatruvathu En Siranthathu

ஆகவே, பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் செய்வதை விட, ஒரு நெய் தீபம் ஏற்றுவது பல மடங்கு பலன்களைப் பெற்றுத் தரும். அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்குக் காரணமும் உண்டு. அதாவது, அகல் விளக்கு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களை மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் கொண்டு செய்யப்படுகிறது. அவன் களிமண்ணில் நீரை ஊற்றி சூரிய ஒளியில் காயவைத்து காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல்  விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதை அம்பாள் விரும்புகிறாள்.

இதையும் படியுங்கள்:
ஜோதி வடிவில் மகாவிஷ்ணு தரிசனம்: காஞ்சிபுரத்தில் விளக்கொளியாக அருளும் பெருமாள் ரகசியம்!
Agal Vilakkil Deepam Eatruvathu En Siranthathu

திருக்கோயிலில் ஐந்து தீபங்கள் ஏற்றினால் மன அமைதி பெறும். ஏழு தீபங்கள் ஏற்றினால் கல்வியில் மேன்மை அடைய முடியும். ஒன்பது தீபங்கள் ஏற்றினால் வியாபார அபிவிருத்தி அடையும். பதினொரு தீபங்கள் ஏற்றினால் செல்வம் பெருகும். பதினெட்டு தீபங்கள் ஏற்றினால் நவகிரக தோஷம் நிவர்த்தி அடையும். இருபத்தியொரு தீபங்கள் ஏற்றினால் நோய் பிணி நிவர்த்தி ஆகும்.

நாற்பத்தியொரு தீபங்கள் ஏற்றினால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கும். ஐம்பத்தொரு தீபங்கள் ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். நூற்றியெட்டு தீபங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். ஐநூற்றியெட்டு தீபங்கள் ஏற்றினால் காரியத்தடை நீங்கும், வழக்குகளில் வெற்றி பெறும். ஆயிரத்தெட்டு தீபங்கள் ஏற்றினால் வீடு மனை ராஜயோகம் கிடைக்கும்.

அகல் விளக்கினைக் கொண்டு வீடுகளிலும் திருக்கோயில்களிலும் தீபங்கள் ஏற்றினால் திருமகள் அருளும் சகல சௌபாக்கியங்களும் காரிய சித்தியும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com