
சித்திரை மாத வளர்பிறையில் வரும் மூன்றாவது திதியை அட்சய திரிதியை நாளாக கொண்டாடுகிறோம். அட்சய திருதியை என்பது குறைவில்லாத பலன்களை தரக்கூடிய அற்புத நாளாகும். இந்த நாளில் பல மங்கள யோகங்கள் கூடி வரும் நாளாக உள்ளதால், இந்த நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக உள்ளது.
செல்வத்தை பெறும் நாள்
அட்சய திருதியை என்பது செல்வ செழிப்பையும், மகிழ்ச்சியையும், மகாலட்சுமியையும் வீட்டிற்கு வரவேற்கும் நாளாகும். இது அளவில்லாத செல்வத்தை பெறுவதற்கான முக்கியமான கருதப்படுவதால் இந்த நாளில் மகாலட்சுமியையும், மகாவிஷ்ணு வழிபடுவது சிறப்புக்குரியதாகும் .
இந்த நாளில் விரதம் இருப்பது, தான தர்மங்கள் செய்வது, மந்திர ஜபம் செய்வது, யாகங்கள் செய்வது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, புதிய தொழில்கள் தொடங்குவது , திருமணம் செய்வது உள்ளிட்டவை சிறப்பான பலன்களை தரும்.
இந்த நாளில் தான் திரவுபதி கிருஷ்ண பகவானை வேண்டி அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை பெற்று பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது அவர்களின் பசியை போக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. பரசுராமரின் அவதார தினமும் இது என்பதாலும், திருமால் வழிபாட்டிற்கு ஏற்ற சிறப்பான நாள் இது.
அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதால் வாழ்வில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தங்கம் போன்ற ஆபரணங்கள் வாங்குவது சிறப்பு. அன்று பச்சரிசி, வெல்லம், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம்.
தானம் தர வேண்டியது.
வெப்பத்தை தணிக்கும் வகையில் உடுக்க உடை, குடை, பானகம், நீர்மோர், விசிறி போன்றவற்றை தானம் தரலாம் என பவிஷ்ய புராணம் கூறுகிறது. தயிர் சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்பு பொருட்கள் தானம் தந்தால், திருமண தடை அகலும் .
அரிசி ,கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால் - விபத்துக்கள், அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
அன்னதானம் செய்வதால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால், வாழ்வு வளமாகும்.
குழந்தைக்கு அன்னப் பிரசன்னம் செய்யலாம். சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது, சீமந்தம் மாங்கல்யம் செய்வது, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் / காதுகுத்த உகந்த நாள்.
வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்துகள் உட் கொள்ள, பயணம் மேற்கொள்ள, நிலங்களில் எரு இட, விதை விதைக்க / கதிர் அறுக்க, கால்நடைகள் வாங்க , போன்ற விவசாயம் பணிகளிலும் ஈடுபடலாம்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதது.
அட்சய திரிதியை அன்று கடன் வாங்கவோ /கடனை திருப்பிக் கொடுக்கவோ செய்யாதீர்கள். அட்சய திருதியை நாளில் சாஸ்திரங்கள் கூறும் வழியை பின்பற்றினால், நாம் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடையலாம். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபட்டு பல நல்ல பலன்களை பெறலாம்.
அட்சய திருதியை அன்று யார் வந்து யாசகம் கேட்டாலும் காசோ அல்லது உணவோ தவறியும் கூட இல்லை என்று சொல்லாதீர்கள். அட்சய திருதியை நாளில் யாரிடம் கோபப்படவோ எதிர்மறையான சொற்களை பேசுவதும் கூடாது. கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
அட்சய திருதியை அன்று ஏதாவது வாங்குவதற்கு வெளியில் சென்று விட்டு வெறும் கையுடன் வீட்டிற்கு வரக்கூடாது. தங்கம் வெள்ளி விலை உயர்ந்த பொருட்கள் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிற்கு தேவையான மங்கல பொருட்கள் ஏதாவது கூட வாங்கி வரலாம். நீங்கள் நினைத்த பொருள் கிடைக்கவில்லை என மறந்தும் வெறுங்கையுடன் திரும்பி வரக்கூடாது.
அட்சய திருதியை நாளில் வீடு இருளடையாமல் விளக்கேற்றி வைக்க வேண்டும். மகாலட்சுமியின் விநாயகரின் சேர்த்து ஒன்றாக வழிபட்டால் மட்டுமே செல்வ வளம் கிடைக்கும்.