
தக்கன் தனது கணவனை நிந்தனை செய்ததால் தனக்கு தக்கனின் மகள் என்று பொருள் தரும் 'தாட்சாயணி' என்ற பெயருடன் இருக்க விரும்பவில்லை என்று அன்னை, ஈசனிடம் தெரிவித்தார். மலையரசன் இமவான் அன்னையைத் தனது மகளாகவும், சிவனை தனது மருமகனாகவும் பெறுகின்ற பேற்றை தமக்கு அளிக்க வேண்டும் என வேண்டி இருப்பதால், அவனிடம் மகளாக வளருமாறு சிவன் அன்னையிடம் கூறினார்.
‘மானச வாவி’ என்னும் தடாகத்தில் தாமரை மலரில் குழந்தையாக அன்னை தோன்றினார். அங்கு வந்த ஹிமவான் அக்குழந்தையை வாரி எடுத்து தனது மனைவி மேனையிடம் கொடுத்து வளர்க்கச் செய்தார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்கு வளர்ந்த குழந்தை, மணப்பருவம் எய்தியதும், சிவனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்று இமயத்தில் கடும் தவம் மேற்கொண்ட மகளைப் பார்த்து, ‘ஒ… அம்மா வேண்டாம்’ என்று கூறினர் பெற்றோர். அது அக்குழந்தையின் பெயராகி, ‘ஒமா’ என்பது உமா என்றாகியது.
இப்படிக் கடும் தவம் இருக்கும் உமாவினை காண சிவபெருமான் கிழ வேடம் தாங்கி இமயம் வந்து, காளை வாகனராக உமா தேவிக்குக் காட்சி தந்தார். நாளையே வந்து மணம் செய்து கொள்வதாகக் கூறினார். இதனால் சந்தோஷம் அடைந்த உமா தேவி தவத்தை முடித்துக் கொண்டு இமயத்துக்கே ராஜாவான இமவானின் அரண்மனைக்குத் திரும்பினார்.
சிவபெருமான் சார்பாக அகத்தியர், புலத்தியர் உள்ளிட்ட எழுவர் ஈசனுக்கு உமாவை மணம் பேசினர். இமவான் கயிலை சென்று நந்தியின் அனுமதி பெற்று சிவபெருமானைக் கண்டார். பங்குனி உத்திர நாளில் மகள் உமா தேவியை சிவன் மணந்து கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
மண நாளில் திருமகள், கலைமகள் புடை சூழ மலைமகளாம் உமா தேவி மணக்கோலமுடன் மண்டபம் வந்தார். நான்முகன் மணச்சடங்குகளை மேற்கொண்டார். இமவான் - மேனை தம்பதியர் உமா தேவியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். திருமணக் கோலத்தில் கல்யாணசுந்தரப் பெருமானையும், பெருமாட்டியையும் அனைவரும் வணங்கி அருள் பெற்று உயர்ந்தனர்.
அனைத்து சிவாலயங்களிலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாணம் மகோத்ஸவம் நடத்தப் பெறுகிறது. மக்கள் சிவசக்தியின் அருளைப் பெறும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
கேதார கௌரீ விரதம்:
பிருங்கி மாமுனிவர் கயிலை சென்று சிவபெருமானை தரிசித்தார். உடன் இருந்த பார்வதி தேவியை அவர் வணங்கவில்லை. சிவத்திற்குள் சக்தி அடக்கம் என்பதால் முனிவர் அப்படிச் செய்து விட்டார் போலும். ஆனால், பெண்களுக்கே உரிய தன்மானம் புண்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதி பார்வதி தேவி பிருங்கி முனிவரை சினந்தார். அவரது கால்களை செயலிழக்கச் செய்தார். ஆனால், சிவபெருமானோ பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் தந்து உதவினார்.
சிவனின் சரீரத்திலிருந்து தான் தனித்து இருப்பதால்தானே சிலர் சிவனை மட்டும் பிரதட்சணம் வந்து தன்னைப் புறக்கணிக்கின்றனர். எனவே, சிவனின் சரீரத்திலேயே பாதி இடத்தை தான் பிடித்து விட்டால், யாரும் தன்னையும் வணங்கித்தானே ஆக வேண்டும் என்று எண்ணினார் பார்வதி தேவி.
அதையடுத்து, பூலோகம் சென்று தவம் மேற்கொள்ள முடிவு செய்தார் அந்த ஹிமவானின் மகள். கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார். கௌதமரின் உபசரிப்பால் மகிழ்ந்த தேவி, அவரிடத்திலே தனது உள்ளக் கிடக்கைகளைத் தெரியப்படுத்தினார். இந்த உள்ளக் கிடக்கையை நிறைவேற்ற கௌதமர் கௌரீயிடம் அரிய விரதம் ஒன்றின் விதிமுறைகளைக் கூறி, அதனை அனுஷ்டித்தால் அவள் நினைத்ததை சாதிக்கலாம் என்றார்.
அவர் அன்று பார்வதி தேவிக்கு சொல்லிக் கொடுத்த விரத அனுஷ்டானமே, ‘கேதார கௌரீ விரதம்’ எனப்படுகிறது. இந்த நோன்பினை முதலில் நோற்றவர் கௌரீ. அவள் நோன்பு நோற்றது கேதாரீஸ்வரரைக் குறித்து. எனவேதான், இந்த நோன்பு ‘கேதார கௌரீ விரதம்’ எனப்படுகிறது. பார்வதி தேவி கௌதம முனிவர் சொன்ன விரத முறைகளை முறையாகப் பின்பற்றி, இந்த நோன்பை நோற்று அதன் பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றார் என்பதால் சர்வேஸ்வரன் அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
அம்பிகை இந்த விரதத்தை 21 நாட்கள் அனுஷ்டித்ததாக ஐதீகம். ஆதலால் 21 நாளும் 21 பாக்கு, 21 வெற்றிலை, பழம், மஞ்சள், அதிரசம், தேங்காய் அனைத்தும் 21 என இருக்க வேண்டியது அவசியம். கூடவே 21 முடிச்சு கொண்ட காப்பு நூல் முதலியவற்றுடன் விசேஷ பூஜை, வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று இப்பூஜையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இதனால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.